அனிருத் இசையில் சிலம்பரசன் பாடியதாக ஒரு பாடல் யூடியூப்பில் வெளியாகி கடுமையான விமர்சனத்தை ஈட்டியுள்ளது. இருவருமே கைது செய்யப்படும் வாய்ப்பு இருப்பதாக சட்ட வல்லுநர்கள் கூறுமளவுக்கு அந்த விவகாரம் சீரியசாக போய்க்கொண்டுள்ளது. இணையதளத்தில் வெளியான அந்த பாடல், என்ன 'இதுக்கு' லவ் பண்றோம்.., என்ற வார்த்தையுடன் தொடங்குகிறது. 'இதுக்கு' என இங்கே குறிப்பிட்டுள்ள சொல் பாடல் வரி கிடையாது. இதுக்கு என்பதற்கு பதிலாக ஒரு கெட்ட வார்த்தையை பயன்படுத்தியுள்ளனர். அனிருத் இசையில், சிம்பு பாடியதாகவே குறிப்புகளுடன் பாடல் இணையத்தில் சுற்றி வருகிறது. இசையின் ரிதம் அனிருத்தின் ஸ்டைலை போலவே உள்ளது. பாடும் குரலும், சிம்புவுடன் அப்படியே ஒத்துப்போகிறது. மேலும், காதலித்து ஏமாற்றும் பெண்களை குறிவைத்தே பாடல் வரிகள் உள்ளன. இதுவும் சிம்பு ஸ்டைல் பாடல்தான் என்பது அனைவரும் அறிந்ததே. 
புரியும் வார்த்தைகள் பாடல் தொடங்கும்போது மட்டுமல்லாமல், ஆங்காங்கு கெட்ட வார்த்தைகள் தூவப்பட்டுள்ளன. ஆனால், அந்த வார்த்தை வரும்போது மட்டும் பீப்... என்ற ஒலி வரும்படி பார்த்துக்கொண்டுள்ளனர். இருப்பினும், அந்த கெட்ட வார்த்தை புரியும்படியும் பீப் சவுண்டை குறைத்துள்ளனர். இதெல்லாம் திட்டமிட்டே பெண்களை இழிவு செய்யும் நோக்கம்தான் என்பது பாடலை கேட்பவர்களுக்கு நன்கு புரிகிறது.
இந்த இக்கட்டில் 'அவ வருவா, அதுவரைக்கும் ..' என்ற ஒரு வரியும் பாடலின் நடுவே வருகிறது. இதற்கு அந்த அரை குறை பீப் சவுண்டும் கிடையாது. சென்னை பெரு வெள்ளத்தில் மிதந்து கொண்டிருக்கும் இந்த நேரத்தில் இப்படி ஒரு அசிங்கமான, சீண்டலான பாடலை வெளியிட்ட நபர்கள் மீது தமிழக மக்களின் கோபப்பார்வை திரும்பியுள்ளது.
வழக்கு போடலாம் கெட்ட வார்த்தைகளுடன், பெண்களையும் இழிவு செய்யும் வகையில் பாடல் வெளியாகியுள்ளதாக பொது நல வழக்கு தொடர்தால்கூட, இது பெரும் பிரச்சினையாக விஸ்வரூபம் எடுக்கும். ஆனால், இந்த பாடலுக்கும் தங்களுக்கும் சம்மந்தம் இருப்பதாகவோ அல்லது இருப்பதாகவோ, அனிருத் மற்றும் சிம்பு தரப்பில் இருந்து இதுவரை எந்த தகவலும் வெளியே வரவில்லை.
மக்கள் கோபம் இணையதளங்களில் பெரும்பாலான மக்கள், இந்த பாடல் பற்றி கழுவி ஊற்றிக்கொண்டுள்ளபோதிலும், சம்மந்தப்பட்டதாக கூறப்படும் இருவரும் மவுனம் கலைக்காமல் இருப்பது மக்களின் கோபத்தை மேலும் அதிகரித்துக்கொண்டுள்ளது.
ஆஹா இலக்கியம்.. இலக்கியத்தில் இல்லாத காம வார்த்தைகளா என சிம்புக்கு ஆதரவாக சப்பை கட்டுகட்டுவோரும் சிலர் இணையத்திலுள்ளனர். இலைமறை காயாக இருப்பதே இலக்கியம். பச்சையாக பேசப்படுவது ஆபாச புத்தகம் என்பதை அவர்கள் அறிந்துகொள்ள வேண்டும். இலக்கிய புத்தகத்தை கடையில் தொங்க விடமுடியும், ஆபாச புத்தகத்தை அப்படி செய்ய முடியுமா?
எவ்வளவு சங்கடம் இந்த பாடலை வெளியிட்டவர்கள், இதே வரிகளை தங்களது பெற்றோர் முன்பு பாடிக்காட்டி மகிழ்ச்சி வெளிப்படுத்துவார்களா, சிறு குழந்தைகள் பங்கேற்கும் சூப்பர் சிங்கர் போன்ற நிகழ்ச்சிகளில் இப்பாடல்களை பாட முடியுமா, பெண்கள் பயணிக்கும் ஒரு வாகனத்தில் இப்பாடலை ஒலிபரப்பினால் அவர்கள் எந்த அளவுக்கு சங்கடத்திற்கு உள்ளாவார்கள்? சக ஆண்களால் ஈவ் டீசிங்கிற்கு உள்ளாக அந்த பாடல் வழி ஏற்படுத்துமே? என்ற எந்த ஒரு சமூக பொறுப்புணர்ச்சியும் இன்றி இப்பாடல் வெளியாகியுள்ளது.
அது என்ன குஜ்லி? தமிழ் சினிமாவில் பெண்களை போகப்பொருளாகவும், கேலிப்பொருளாகவும், ஆண்களின் தேவைக்காக படைக்கப்பட்ட ஒரு உயிரினமாகவும் பார்க்கும்போக்கு அதிகரித்துக்கொண்டே வருகிறது. ஃபிகர், ஜில், ஜங், ஜக், பில்பாசி, குஜ்லி என சக பிறவிகளான பெண்கள் கேவலமான பெயர்களால் அழைக்கப்பட்டு, அது சமூகத்திற்குள்ளும் பரப்பிவிடப்பட்டுகிறது. இதற்கெல்லாம் சிகரம் வைத்துள்ளது இந்த பாடல்.
காவல்துறை என்ன செய்கிறது? ஒரு பெண் அரசாளும் இந்த தமிழ்நாட்டில், பெண்களை அசிங்கப்படுத்தியதோடு, பெண் உறுப்புகளை பாடல் வரியாக கொண்டு இணையத்தில் பரப்பிய அந்த விஷமிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்பது மக்கள் எதிர்பார்ப்பாக உள்ளது. பல பெண்கள் கல்லூரிகளில் இந்த பிரச்சினை கையில் எடுக்கப்பட்டுள்ளது. திங்கள்கிழமை பெரும் போராட்டங்கள் வெடிக்க கூடும் என்கிறது கள நிலவரம். போலீசார் தலையிடுவார்களா?


No comments:
Post a Comment