Latest News

புதிய வரலாறு படைத்த சவூதி பெண்கள்.. முதல் முறையாக தேர்தலில் வாக்களித்தனர்


சவூதி அரேபிய வரலாற்றிலேயே முதல் முறையாக அந்த நாட்டுப் பெண்கள் முதல் முறையாக இன்று தேர்தலில் வாக்களித்து புதிய அத்தியாயத்தைத் தொடங்கியுள்ளனர். இன்று சவூதியில் நடந்த உள்ளாட்சித் தேர்தலில் வாக்களிக்கும் உரிமை பெண்களுக்கு வழங்கப்பட்டது. இதையடுத்து அவர்கள் உற்சாகத்துடன் திரண்டு வந்து வாக்குகளைப் பதிவு செய்து மகிழ்ந்தனர். சவூதி வரலாற்றில் இத்தனை காலமாக பெண்களுக்கு வாக்குரிமை இல்லாமல் இருந்து வந்தது. ஆனால் தொடர் கோரிக்கைகள், போராட்டங்களைத் தொடர்ந்து முதல் முறையாக அவர்களுக்கு வாக்குரிமை கிடைத்துள்ளது.

வாக்காளர்களும் வேட்பாளர்களும் சவூதி அரேபிய உள்ளாட்சித் தேர்தலில் முதல் முறையாக பெண்கள் இத்தேர்தலில் போட்டியிடவும் செய்தனர். அதாவது 978 பெண்கள் வேட்பாளர்களாக களம் கண்டனர். ஆண் வேட்பாளர்களின் எண்ணிக்கை 5938 ஆகும்.

1.30 லட்சம் வாக்காளர்கள் மேலும் பதிவு செய்யப்பட்ட பெண் வாக்காளர்களின் எண்ணிக்கை 1 லட்சத்து 30 ஆயிரத்து 637 என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இவர்கள் அனைவரும் தங்களது முதல் ஓட்டை மிகவும் உற்சாகத்தோடு செலுத்தினர்.

முதல் வாக்கை அளித்த மாய் ஷரீப் 32 வயதான மாய் ஷரீப் என்ற பெண்தான் முதல் ஓட்டைப் பதிவு செய்த பெண் என்ற பெருமையைப் பெற்றுள்ளார். ரியாத் வாக்குச் சாவடியில் அவர் தனது வாக்குச் சீட்டை பெட்டியில் போட்டதுமே அங்கிருந்தோர் கைதட்டி வரவேற்று மகிழ்ந்தனர்.

248 உள்ளாட்சி அமைப்புகள் மொத்தம் 248 உள்ளாட்சி அமைப்புகளுக்கு தேர்தல் நடக்கிறது. இதில் பல நகராட்சிகளுக்கு அதிக அளவிலான அதிகாரங்கள் வழங்கப்பட்டுள்ளன. எனவே அங்கு போட்டி கடுமையாக உள்ளதாக கூறப்படுகிறது.

குழப்பத்தில் பெண்கள் முதல் முறையாக வாக்களித்ததால் பல இடங்களில் குழப்பமடைந்தனர் பெண்கள். பல பெண்களுக்கு எங்கு வாக்குச் சாவடி உள்ளது, எப்படி வாக்களிக்க வேண்டும் என்று தெரியாமல் குழம்பி விட்டனர். அவர்களுக்கு வாக்குச் சாவடி அலுவலர்கள் உதவி செய்தனர்.

வாக்குரிமை அளிக்காத 2வது நாடு சவூதி உலக அளவில் பெண்களுக்கு வாக்குரிமை அளிக்காத நாடுகள் இரண்டு ஆகும். ஒன்று வாடிகன் சிட்டி. இன்னொன்று சவூதி அரேபியா. தற்போது சவூதி அந்த அவப் பெயரிலிருந்து விடுபட்டு விட்டது. வாடிகன் சிட்டியும் கூட ஒரு தனி நாடு அந்தஸ்துடன்தான் வலம் வருகிறது. அங்கு போப்பாண்டவரை தேர்ந்தெடுக்கும் நடைமுறையின்போது, ஆண் கார்டினல்களுக்கு மட்டுமே வாக்களிக்கும் உரிமை உண்டு என்பது குறிப்பிடத்தக்கது.

பெண்களுக்கு உரிமைகள் மிக மிக குறைவு சவூதி அரேபியாவில் பெண்களுக்கு உரிமைகள் மிக மிக குறைவாகும். அங்கு பெண்களுக்கு மிகவும் கடுமையான கட்டுப்பாடுகள் அமலில் உள்ளன. அதிலிருந்து விடுபடும் போராட்டங்களை பெண்கள் சமீப காலமாக அதிகரித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

தேர்தலே மிக மிக அரிது அதை விட முக்கியமானது சவூதியில் தேர்தல் நடப்பதே மிக மிக அரிதான ஒன்றாகும். அந்த நாட்டு வரலாற்றில் இதுவரை மொத்தம் 3 முறைதான் (இன்றைய தேர்தலையும் சேர்த்து) தேர்தல் நடந்துள்ளது என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்.

40 வருடம் தேர்தலே கிடையாது மேலும் 1965ம் ஆண்டு முதல் 2005ம் ஆண்டு வரை 40 வருட காலம் தேர்தலே நடக்கவில்லை என்பதும் முக்கியமானது. பெண்களுக்கு வாக்குரிமை அளிக்கும் முடிவை மறைந்த மன்னர் அப்துல்லாதான் எடுத்தார். கடந்த ஜனவரி மாதம் தான் மறைவதற்கு முன்பு சவூதியின் முக்கியமான சுரா கவுன்சிலில் 30 பெண்களை பிரதிநிதிகளாக நியமித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

TIYA

WEBSITE DESIGNED BY: NOORUL IBN JAHABER ALI WEBSITE CONTROLLED BY: DOT COLORS
sourceNOORUL IBN JAHABER ALI Copyright © 2015

Theme images by Bim. Powered by Blogger.