விடாது பெய்து வரும் தொடர் மழையால் சென்னை நகரம் தத்தளிக்கிறது. கிட்டத்தட்ட நகரமே வெள்ளத்தில் மூழ்கிப் போய் விட்டது போன்ற நிலை காணப்படுகிறது. அதேபோல சென்னையையொட்டியுள்ள காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டத்திலும் கன மழை கொட்டி வருகிறது. இதனால் சென்னைப் புறநகர்கள் அனைத்தும் மூழ்கிப் போயுள்ளன. நேற்று இரவு தொடங்கிய மழை இடைவிடாமல் செய்து வருகிறது. ஆரம்பத்தில் விட்டு விட்டுப் பெய்த மழை தற்போது தொடர்ந்து பெய்து கொண்டிருக்கிறது. விடாமல் பெய்து வரும் மழையால் சென்னை நகரம் தத்தளித்துக் கொண்டுள்ளது. எங்கு பார்த்தாலும் கடல் போல வெள்ள நீர் ஓடிக் கொண்டிருக்கிறது.
சாலைகளே கண்ணுக்குத் தெரியாத அளவுக்கு வெள்ளமென மழை நீர் ஓடிக் கொண்டிருக்கிறது. பழைய மகாபலிபுரம் சாலையில் கடல் போல வெள்ள நீர் ஓடிக் கொண்டிருக்கிறது. வாகனங்களை ஓட்ட முடியாத அளவுக்கு வெள்ளமென மழை நீர் ஓடிக் கொண்டிருக்கிறது. விடாது பெய்யும் பலத்த மழையால் மக்கள் பேரவதியைச் சந்தித்து வருகின்றனர். பல பகுதிகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. நகரிலும், புறநகர்களிலும் குடியிருப்புகள் நீரில் மிதக்கின்றன். நூற்றுக்கணக்கான வீடுகளில் வெள்ள நீர் புகுந்ததால் மக்கள் தவிப்புக்குள்ளாகியுள்ளனர்.
பல புறநகர்ப் பகுதிகள் தீவுக் கூட்டங்கள் போலக் காணப்படுகின்றன. வெளியில் கால் வைத்தால் மூழ்கிப் போய் விடும் அளவுக்கு திபுதிபுவென மழை நீர் வெள்ளம் போல ஓடிக் கொண்டிருக்கஇறது. மழையின் காரணமாக சாலைகள் பெயர்ந்தும், அரிப்பினாலும் துண்டிக்கப்பட்டுள்ளன. பல இடங்களில் பெரிய பள்ளங்கள் ஏற்பட்டுள்ளது. சேதமடைந்த சாலைகளில் இயக்கப்பட்ட பேருந்துகளில் ஏற்பட்ட பழுது காரணமாக பேருந்து சேவை வெகுவாக குறைக்கப்பட்டுள்ளது. வியாசர்பாடி, வண்ணாரப்பேட்டை, தண்டையார்பேட்டை, புரசைவாக்கம், கீழ்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் மழைநீர் தேங்கியுள்ளது. அதை அகற்ற மாநகராட்சி எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதேபோல் குடியிருப்பு பகுதிகளிலும் பல பகுதிகளில் வீடுகளுக்கு உள்ளேயும் மழைநீர் புகுந்துள்ளது. எம்எல்ஏக்கள், கவுன்சிலர்கள், மாநகராட்சி அதிகாரிகள் என யாரும் ஆய்வுக்கு கூட வரவில்லை. மழைநீர் அகற்ற நடவடிக்கை எடுக்கவில்லை என இப்பகுதி மக்கள் புகார் கூறினர். சென்னை மெரினா கடற்கரைக்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான உள்ளூர் மற்றும் வெளியூர் சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். இந்நிலையில் சென்னையில் பெய்து வரும் தொடர் மழையால் மெரினா கடற்கரையில் மணல் பரப்பு முழுவதுமாக மழைநீரில் மூழ்கியது. கடலுக்கும், மணல் பரப்பிற்கும் வேறுபாடு தெரியாத அளவிற்கு மழை நீரும், கடல் நீரும் சேர்ந்து காணப்படுகிறது. கடற்கரை சர்வீஸ் சாலையில் முழங்கால் அளவுக்கு தண்ணீர் தேங்கியுள்ளது.
அண்ணாசாலை, ராயப்பேட்டை நெடுஞ்சாலை, கோடம்பாக்கம் நெடுஞ்சாலை, எழும்பூர், மயிலாப்பூர், வேளச்சேரி, அடையாறு உள்ளிட்ட நகரின் முக்கிய போக்குவரத்து சாலைகளும் மழையால் உருப்பெயர்ந்துள்ளது.இதனால் சாலையையொட்டியுள்ள குடியிருப்பு வாசிகள் மிகவும் பாதிப்படைந்துள்ளனர். பல இடங்களில் சாலைகளில் தேங்கி மழைநீர் அருகில் உள்ள வீடுகளுக்குள் தஞ்சம் புகுந்துள்ளது. இதேபோல் கிண்டி, மாம்பலம், தி.நகர், மயிலாப்பூர், எழும்பூர், சேத்துப்பட்டு, கோடம்பாக்கம், வடபழனி, அடையாறு உட்புற பகுதிகள், வேளச்சேரி பேருந்து சாலைகள், பட்டினப்பாக்கம், திருவான்மியூர் உள்ளிட்ட பல இடங்களில் கழிவுநீர் அடைப்பு ஏற்பட்டதால் மழைநீருடன் கழிவுநீரும் சேர்ந்து குளம்போல் தேங்கி கிடக்கிறது. இதனால் அதையொட்டி உள்ள மக்களுக்கு மர்ம நோய் பரவி வருகிறது. கழிவுநீர் கலப்பதால் பல தெருக்களில் துர்நாற்றம் வீசுகிறது. கிண்டி நேதாஜி நகர், கணேஷ் நகரில் சாலையில் கழிவுநீர் ஆறுபோல் ஓடுகிறது. இதபோல் கிண்டி வண்டிக்காரன் தெருவில் சாலையில் முழங்கால் அளவுக்கு தண்ணீர் தேங்கி நிற்பதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. சைதாப்பேட்டை கூவம் ஆற்றில் மழையால் தண்ணீரின் அளவு அதிகரித்துள்ளது. ஆற்றின் கரையில் போதிய உயரம் இல்லாததால் ஆற்றிலிருந்து கழிவுநீர் வெளியேறி அருகில் உள்ள குடிசைகளை சூழ்ந்துள்ளது. இதனால் அப்பதிகுதியில் குடும்பம் நடத்தி வரும் அப்பாவி ஏழை தொழிலாளிகள் இருக்க இடம் இல்லாமல் தவித்து வருகின்றனர். கோட்டூர்புரம் காந்தி மண்டபம் சாலையில் அண்ணா நூற்றாண்டு நூலகம் அருகே சாலையில் தேங்கியுள்ள மழைநீர் நாள்கணக்கில் வற்றாமல் உள்ளதால் அங்கு சுகாதாரசீர்கேடு ஏற்பட்டுள்ளது. இதேபோல் சென்னையில் உள்ள சுரங்கபாதைகளும் மழைநீரில் சூழ்ந்துள்ளது. இங்கு தேங்கும் நீரை மோட்டார் மூலம் அகற்ற மாநகராட்சியினர் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதே நிலையில் மழை நீடித்தால் பல ஆயிரம் வீடுகள் மழை நீரில் மூழ்கும் அபாயம் உள்ளதாலும், வெளியில் போக முடியாமல் மழை நீரில் சிக்கிக் கொள்ளும் அபாயமும் இருப்பதால் மக்கள் பெரும் கவலையில் மூழ்கியுள்ளனர்.




No comments:
Post a Comment