அன்னிய நேரடி முதலீடு தொடர்பான விதிமுறைகளை 15 முக்கியத் துறைகளில் தளர்த்துவது என மத்திய பா.ஜ.க. அரசு எடுத்த முடிவுக்கு அக்கட்சியின் தாய் அமைப்பான ஆர்.எஸ்.எஸ். ஆதரவு தொழிற்சங்கமான பாரதிய மஸ்தூர் சங்கம் (பி.எம்.எஸ்) கடும் கண்டனம் தெரிவித்தது. இதுகுறித்து அச் சங்கத்தின் பொதுச் செயலர் விர்ஜேஷ் உபாத்தியாய வெளியிட்டுள்ள அறிக்கை:
சில்லறை வணிகம், பாதுகாப்பு உள்ளிட்ட துறைகளில் அன்னிய நேரடி முதலீட்டை அதிகரித்துள்ளதை பி.எம்.எஸ். வன்மையாகக் கண்டிக்கிறது. இதுதொடர்பாக மத்திய அரசு சம்பந்தப்பட்ட துறையினரிடம் விவாதித்து மறுபரிசீலனை செய்ய வேண்டும். இல்லாவிட்டால் மத்திய அரசுக்கு எதிராக வீதிகளில் இறங்கி போராடுவோம். இந்த விவகாரம் தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடிக்கும், நிதியமைச்சர் அருண் ஜேட்லிக்கும் தனித்தனியாகக் கடிதம் அனுப்பியுள்ளோம். நாட்டின் அன்னிய நேரடி முதலீடு தொடர்பான வெள்ளை அறிக்கையை அருண் ஜேட்லி வெளியிட வேண்டும். சில்லறை வணிகத்தில் அன்னிய நேரடி முதலீட்டை அனுமதிப்பதால் ஏழைகள் பாதிக்கப்படுவதோடு, வேலைவாய்ப்பின்மை பெருமளவில் அதிகரிக்கும். இதுவரை இந்தியாவுக்குள் வந்த அன்னிய நேரடி முதலீடுகளால் எந்தப் பயனும் இல்லை. இவ்வாறு விர்ஜேஷ் உபாத்தியாய தெரிவித்துள்ளார். இதேபோல் சங் பரிவாரத்தின் சுதேசி ஜாக்ரன் மஞ்சும் மத்திய அரசுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment