திருநெல்வேலி மாவட்டம் கூடங்குளம் அணுமின் நிலையம் அருகே கூத்தங்குழியில் கடற்கரையில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 200 நாட்டு வெடிகுண்டுகளை போலீசார் பறிமுதல் செய்தனர். நெல்லை, கன்னியாகுமரி மாவட்ட கடலோர மாவட்டங்களில் மீனவர்களிடையே தாதுமணல் மற்றும் கூடங்குளம் அணுமின் நிலையம் தொடர்பாக அடிக்கடி மோதல்கள் ஏற்படுவது உண்டு.
கடந்த ஜூன், ஜூலை மாதங்களில் இதேபோல் மோதல்கள் ஏற்பட்டன. அப்போது இருதரப்பும் நாட்டு வெடிகுண்டுகளை வீசி தாக்கிக் கொண்டனர். இது தொடர்பாக 60க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர். மொத்தம் 300 நாட்டு வெடிகுண்டுகள் அப்போது பறிமுதல் செய்யப்பட்டன. இந்நிலையில் இன்று காலை கூடங்குளம் அணுமின் நிலையத்தை சுற்றிய 30க்கும் மேற்பட்ட இடங்களில் போலீசார் அதிரடி சோதனை நடத்தினர். இச்சோதனையின் போது கடற்கரையில் பதுக்கி வைக்கப்பட்ட 200 நாட்டு வெடிகுண்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன. இவற்றை செயலிழக்கச் செய்யும் பணியில் போலீசார் ஈடுபட்டனர். அடுத்தடுத்து நூற்றுக்கணக்கான நாட்டு வெடிகுண்டுகள் கூடங்குளம் பகுதியில் பறிமுதல் செய்யப்படுவது அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
No comments:
Post a Comment