Latest News

ஜிஹாத் என்றால் என்ன ? சுவாமிஜி ஸ்ரீ லஷ்மி சங்கராச்சார்யா அவர்களின் விளக்கம்..!

அனைத்து சமயங்களும் நல்லதைத்தான் போதிக்கின்றன. ஆனால், அது கயவர்களின் கைகளில் மாட்டி கொள்ளும் போது தான் மனிதனின் பலகினத்தை பயன்படுத்தி அவனை மதம் என்ற போர்வையில் மாய்த்து அப்பாவி மக்களை ஏவி விட்டு சுகம் காண்கின்றனர். இருந்தாலும் சில நல்ல பெரியவர்கள், மத குருமார்கள் மக்களை பண்படுத்த செய்கிறார்கள். அப்படி ஒரு நல்ல சமூக நல்லிணக்கத்தை எதிர்பார்த்து தன் உரையை எடுத்துரைக்கும் அந்த மரியாதைக்குரிய சுவாமிஜி பெரியவரின் பெயர் ஸ்ரீ லஷ்மி சங்கராச்சார்யா அவர்கள்.

அலஹாபாத் பல்கலைக் கழகத்தில் பயின்ற இந்து மத பெரியவர் ஸ்ரீ லஷ்மி சங்கராச்சார்யா அவர்கள் கான்பூர் நகரில் இந்த மாதம் நடந்த ஒரு கருத்தரங்கில் இஸ்லாமிய ஜிஹாதைப் பற்றி கருத்துரையை வழங்கினார்.

அன்புள்ள சகோதர சகோதரிகளே! இங்கு நான் சில எண்ணங்களை உங்களோடு பகிர்ந்து கொள்ளலாம் என்று வந்துள்ளேன். 15 வருடங்களுக்கு முன்பு குர்ஆனை படித்துள்ளேன். பத்திரிக்கையிலும், நண்பர்கள் மூலமாகவும் இஸ்லாத்தைப் பற்றியும் முகமது நபியைப் பற்றியும் பல தவறான கருத்துகள் என்க்குள் விதைக்கப்பட்டிருந்தது. இந்த மக்களும், பத்திரிக்கைகளும் குர்ஆனைப் பற்றி சொல்வது உண்மைதானா என்பதை தெரிந்து கொள்வதற்காக நான் குர்ஆனை ஆராய ஆரம்பித்தேன். கிராமத்தில் சொல்லப்படும் பழமொழி ஒன்றைப் போல் குர்ஆனில் உள்ள நல்ல விஷயங்களை படிப்பதை விட்டு விட்டு அதிலிருந்து என்ன தவறுகளை உண்டாக்கலாம் என்று சிநதிக்க ஆரம்பித்தேன். சில முஸ்லிம்களின் நடவடிக்கைகளும், குர்ஆனின் சில வசனங்களும் எதிர்மறையாக என்னை ஒரு புத்தகம் எழுதத் தூண்டியது. அதன் தலைப்பு "THE HISTORY OF ISLAMIC TERRORISM". ஆனால் நான் எழுதியவை அனைத்தும் தவறு என்று பின்னாளில் உணர்ந்து கொண்டேன்.

இந்து மக்களில் பெரும்பான்மையோர் இஸ்லாத்துக்கு மறு பெயர் ஜிஹாத் என்றும், ஜிஹாத் என்பது தீவிரவாதம் என்றும் புரிந்து வைத்துள்ளனர். நான் புரிந்து கொண்ட வகையில் இஸ்லாம் என்றால் என்ன என்பது பற்றியும், ஜிஹாத் என்றால் என்ன என்பது பற்றியும் தெரிந்து கொள்ள மஹாபாரத காலத்துக்கு நாம் செல்ல வேண்டும்.

கௌரவர்கள், பாண்டவர்கள், துரியோதனன், அர்ஜூனன் கதைகள் எல்லாம் நமக்கு நன்றாகவே தெரியும்.

"அர்ஜூனா, இந்த சிக்கலான நேரத்தில் இக்களங்கம் எங்கிருந்து உனக்கு வந்தது; பண்புடையவனுக்கு இது தகாதது; மேலுலகுக்கும் வழிகாட்டாதது; இகவாழ்விலோ இழிவைத் தருவது. இது போன்ற தளர்ச்சிக்கு இடம் தராதே. இது உனக்கு ஏற்றதல்ல. இதய பலவீனத்தை விட்டுவிட்டு எழுந்து நில்."

பகவத் கீதை அத்தியாயம் 2ல் வரும் வசனங்களே இவை. அநியாயத்துக்கும் அக்கிரமத்துக்கும் எதிராக நடக்கும் ஒரு யுத்தம் யுத்தம் அல்ல அது தர்ம யுத்தம் என்கிறது இந்து மத வேதங்கள். அங்கு போரிடுவதற்கோ தயவு தாட்சண்யம் பார்ப்பதற்கோ எந்த முகாந்திரமும் இல்லை என்கிறது கீதை. இந்த யுத்தத்தில் தோற்றாலும் நீ சொர்க்கம் செல்வாய் என்று உபதேசிக்கப்படுகிறது.

இதே போன்றுதான் மெக்கா நகரில் அந்த மக்களின் குடி, விபசாரம், சிலை வணக்கம், வட்டி, பெண் கொடுமை, பெண் குழந்தைகளை கொல்லுதல் போன்ற செயல்களை விமரிசித்து 'ஒரே இறைவனை வணங்குங்கள்' என்று உபதேசித்தார் நபிகள் நாயகம். உடனே அங்கிருந்த குரைஷிகள் இவரையும் இவரது ஆதரவாளர்களையும எதிரிகளாக பாவிக்க தொடங்கினர். பலரை கொலை செய்தனர். அவர்களின் பொருட்களை கொள்ளையடித்தனர். ஊர் விலக்கம் செய்தனர். இவர்கள் செய்த கொடுமைகளை கண்டு மனம் வெதும்பி மதினாவை நோக்கி செல்கிறார் நபிகள். அதே குரைஷி கூட்டம் அங்கும் முஸ்லிம்களை பின் தொடர்ந்து வருகிறது. முஸ்லிம்களை அழிக்கப் பார்க்கிறது.

ஒரு வருடம் அல்லது இரு வருடம் அல்ல. 13 வருடங்கள் இது போன்ற கொடுமைகளை முகமது நபியும் அவரது தோழர்களும் அனுபவிக்கின்றனர். இவ்வளவு கொடுமைகள் தினம் தினம் நடந்தும் தனது தோழர்களிடம் 'பொறுமையாக இருங்கள். பொறுமையாளர்களோடு நம்மைப் படைத்த இறைவன் இருக்கிறான்' என்று அமைதியாக உபதேசித்தார். மக்கா குரைஷிகளின் அக்கிரமங்கள் உச்ச கட்டத்தை அடைந்த போதுதான் தங்களை தற்காத்து கொள்ள எதிர்த்து போரிடுகிறார்கள் முஸ்லிம்கள். மதினாவில் பயந்து தஞ்சம் அடைந்த முஸ்லிம்களை கொல்வதற்காக படை திரட்டிக் கொண்டு மக்காவிலிருந்து மதினா நோக்கி குரைஷிகளின் படை வருகிறது. பகவத் கீதையில் எந்த சூழலை நாம் பார்ததோமோ அதே சூழல்தான் இங்கு முஸ்லிம்களுக்கும் உள்ளது. இதுதான் இஸ்லாத்தில் ஜிஹாதாக பார்க்கப்படுகிறது. இதற்கு தீவிரவாதம் என்று பெயரிடுவீர்களா? தங்கள் உயிரை பாதுகாத்துக் கொள்ள ஒருவன் எடுக்கும் தற்காப்பு முயற்சிக்கு தீவிரவாதம் என்ற சொல் சரியாகுமா? பகவத் கீதையில் வரும் சம்பவங்களை நியாயப்படுத்தும் பலர் இஸ்லாமியர்களின் தற்காப்பு போர்களை விமரிசிப்பது ஏன்?

நமது நாட்டில் தங்களை வளர்த்துக் கொள்ள சிலர் இந்துக்களையும் முஸ்லிம்களையும் நிரந்தரமாக பிரித்து வைக்க முயற்சிக்கின்றனர். இஸ்லாமிய தீவிரவாதம் என்று சொல்லி தங்களை வளமாக்கி கொள்கின்றனர். ஜிஹாதுக்கு தவறான விளக்கத்தை கொடுத்து இந்துக்களை பிரிக்க பார்க்கின்றனர். நானும் கூட கூட்டத்தில் முன்பு பேசியிருக்கிறேன். 'ஹிந்துக்களின் தலை முடியை பிடித்து இழுத்து அவனது தலையை வெட்டினால் உனக்கு நேராக சொர்க்கம். அதற்கு பெயர்தான் ஜிஹாத். அப்படித்தான் குர்ஆனில் இருக்கிறது' என்று பல கூட்டங்களில் பேசியுள்ளேன். எனக்கு அவ்வாறுதான் சொல்லிக் கொடுக்கப்பட்டது. அவ்வாறு பேசியது என்னுடைய தவறுதான்.என்னை விட பெரிய தவறு செய்தது இங்கு அமர்ந்து இருக்கும் முஸ்லிம்கள் தான். இந்த உண்மையை இத்தனை காலம் எனக்கு விளக்காமல் இருந்தது உங்கள் தவறல்லவா?

(போர் சம்பந்தமாக வரும் குர்ஆன் வசனங்களை விளக்கி அது எந்த காலத்தில் யாருக்கு அருளப்பட்டது என்பதை ஆதாரங்களோடு விளக்குகிறார். இஸ்லாத்தில் நிர்பந்தம் இல்லை என்பதற்கும் ஆதாரங்களை வைக்கிறார்)

அலஹாபாத் பல்கலைக் கழகத்தில் படித்து வந்த போது தோழர் அக்ரம் பாய் அவரது வீட்டுக்கு என்னை அழைத்திருந்தார். அவ்வாறு நான் செல்லும் போது வழியில் மாடியில் அமர்ந்திருந்த ஒரு முஸ்லிம் நான் வருவதை பார்த்து என் மீது வெற்றிலை பாக்கு எச்சிலை வேண்டுமென்றே துப்பினார். அருகில் அக்ரமுடைய வீடு. அக்ரமை அழைத்து கொஞ்சம் தண்ணீர் கொண்டு வரச் சொன்னேன். எனது நிலையைப் பார்த்து அக்ரம் பதறி விட்டார். 'என்ன ஆனது' என்று கேட்டார். 'உனது தெருவில் உள்ள ஒரு முஸ்லிம் நான் இந்து என்பதால் என் மீது எச்சிலை துப்பி விட்டார்' என்றேன். நான் இதை எதற்கு சொல்கிறேன் என்றால் இது போன்றவர்களால்தான் பிரச்னைகள் ஆரம்பமாகின்றன. இது போன்ற ஆட்கள் இந்துக்களிலும் இருக்கிறர்கள், முஸ்லிம்களிலும் இருக்கிறார்கள். நான் முன்பு அலாவுதீன் கில்ஜியைப் பற்றி ஒரு வரலாற்று சம்பவத்தை படித்தேன். அதாவது இநதுக்கள் முஸ்லிம்களுக்கு அடங்கியிருக்க வேண்டும் என்றும் முஸ்லிம்கள் எச்சில் துப்பினால் ஹிந்துக்கள் கண்டு கொள்ளாமல் இருக்க வேண்டும் என்றும் சட்டம் இயற்றியதாக அந்த புத்தகத்தில் எழுதப்பட்டிருந்தது. அது பொய்யான வரலாற்று திரிபு என்பது பின்னாளில் தெரிந்து கொண்டேன்.

ஆனால் என் மேல் எச்சில் துப்பிய அந்த நபரின் செயலைப் பார்த்து அலாவுதீன் கில்ஜி கண்டிப்பாக இப்படி ஒரு சட்டம் இயற்றியிருப்பார் என்று முன்பு நினைத்து கொண்டேன். குர்ஆனின் கட்டளைகளை படித்தவுடன் இதன் சட்டங்களுக்கும் இஸ்லாமியர்களின் நடவடிக்கைகளுக்கும் பெருத்த வேறுபாடு உள்ளதையும் இங்கு சுட்டிக் காட்ட கடமைப் பட்டுள்ளேன். 

இஸ்லாத்தைப் பற்றி ஏதும் குறை சொல்ல வந்தீர்கள் என்றால் குர்ஆனை கொண்டு எதையும் பேசுங்கள். தவறாக நடக்கும் முஸ்லிம்களை வைத்து இஸ்லாத்தை எடை போடாதீர்கள் என்று சொல்லி எனது உரையை முடிக்கிறேன்.. என்று தனது உரையை முடித்து கூடியிருந்த அனைத்து மக்களின் மனங்களையும் கவர்ந்தார்.

உலக நாடுகளையே ஆச்சரியம் பட வைக்கும் நாடு நம் இந்திய நாடு, வேற்றுமையிலும் ஒற்றுமை என்ற தத்துவத்தை முன் நிறுத்தி மனித நேயத்தை காக்க வேண்டும்

என்பது தான் ஒரு நல்ல மனித பிறவியின் எண்ணமாக இருக்க வேண்டும், மக்களை பிரிக்கும் எந்த சூழ்ச்சியிலும் மாய்ந்து விடாமல் சிந்தித்து நியாயத்தின் பக்கமே இருக்க வேண்டும் மனிதனுக்காகவே மதம், மதத்திற்காக மனிதன் இல்லை என்பது இந்த கட்டுரையின் நோக்கம் இந்த சுவாமிஜி போன்ற நல்ல எண்ணம் கொண்ட மனிதர்கள் இப்படி மக்களை நல்வழிபடுத்தி பண்படுதுவோமானால் நம் இந்தியாவை எந்த சக்திகளாலும் பிரிக்க முடியாது.
 
Regards
Sathishkumar

No comments:

Post a Comment

TIYA

WEBSITE DESIGNED BY: NOORUL IBN JAHABER ALI WEBSITE CONTROLLED BY: DOT COLORS
sourceNOORUL IBN JAHABER ALI Copyright © 2015

Theme images by Bim. Powered by Blogger.