மதுரை அருகே பிஆர்பி நிறுவனத்தினர் மனநலம் பாதித்தவர்களை நரபலி கொடுத்ததாகக் கூறப்படும் இடத்தில் தோண்டும் பணி நிறைவு பெற்றுள்ளது. 7 மாத குழந்தை உட்பட 4 எலும்புக் கூடுகள் அங்கு மீட்கப் பட்டுள்ளன. மதுரை மாவட்டத்தில் நடைபெற்ற கிரானைட் முறைகேடு தொடர்பாக ஹைகோர்ட் உத்தரவுப்படி சட்ட ஆணையர் சகாயம் விசாரணை நடத்தி வருகிறார். பல்வேறு கட்ட விசாரணைகளை முடித்துள்ள அவர், தற்போது இறுதிக்கட்ட அறிக்கை தயாரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளார்.
இந்த பணியின்போது அவருக்கு மிரட்டல் போன்கள், கடிதங்கள் வந்தன. இதனை தொடர்ந்து சகாயத்திற்கு கூடுதல் போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே சம்பந்தப்பட்ட குவாரிகள் மற்றும் கிரானைட் கற்கள் எடுக்கப்பட்ட பகுதிகளில் சகாயம் விசாரணை நடத்தி முடித்திருந்தார். அதன் பின்னர் அவரிடம் பாதிக்கப்பட்டவர்கள் பலரும் மனு கொடுத்து இருந்தனர். இதன் அடிப்படையிலேயே அவர் அறிக்கை தயாரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளார். இந்நிலையில் அவர் சில நாட்களுக்கு முன்னர் மேலூரை அடுத்த ஒத்தக்கடை அருகே உள்ள கிருஷ்ணாபுரம் மலையில் உள்ள சமணர் படுகைக்கு சென்று மீண்டும் ஆய்வு செய்தார். அப்போது சேதப்படுத்தப்பட்டுள்ள பழமையான கல்வெட்டுகள், பிராமி எழுத்துக்கள் போன்றவற்றை பார்வையிட்டார். தொடர்ந்து பி.ஆர்.பிக்கு சொந்தமான பாலீஸ் தொழிற்சாலையிலும் அவர் சோதனை நடத்தினார்.
இதற்கிடையில் பி.ஆர்.பி கிரானைட் குவாரியில் டிரைவராக வேலை பார்த்த கீழவளவை சேர்ந்த சேவற்கொடியான் என்பவர் ஏற்கனவே சகாயத்திடம் ஒரு புகார் மனு கொடுத்திருந்தார். அதில், பி.ஆர்.பி. கிரானைட் குவாரி தரப்பினர் மனநலம் பாதிக்கப்பட்டவர்களை நரபலி கொடுத்து பின்னர் உடலை ஒரு இடத்தில் புதைத்து விட்டதாக தெரிவித்திருந்தார். இந்த புகாரின் அடிப்படையில் விசாரணை நடத்தவும், குறிப்பிட்ட இடத்தை தோண்டி பார்க்கவும் சகாயம் குழுவினர் திட்டமிட்டனர். இதற்காக அவர்கள் இன்று மேலூரை அடுத்த இ.மலம் பட்டி அருகே உள்ள சின்ன மலம்பட்டி பகுதிக்கு வந்தனர். அங்குள்ள மணிமுத்தாறு ஓடையில், நரபலி கொடுக்கப்பட்டவர்களின் உடல்கள் புதைக்கப்பட்டதாக சேவற்கொடியான் தெரிவித்திருந்தார். ஆனால், அந்த இடத்தைத் தோண்ட காவல்துறை மெத்தனம் காட்டியது. இதனால், அந்தக் குறிப்பிட்ட இடத்தை தோண்டி ஆய்வு செய்யும் வரை, அங்கிருந்து நகரப் போவதில்லை என விடிய விடிய அங்கேயே உட்கார்ந்து போராடினார் சகாயம்.
அதனைத் தொடர்ந்து தற்போது அந்தப் பகுதியில் தோண்டும் பணி தொடங்கியது. சகாயம் மேற்பார்வையில் காவல்துறை, வருவாய்துறை, மருத்துவத்துறை தயார் நிலையில் இருக்க, தோண்டும் பணி நடைபெற்று வருகிறது. இது குறித்து மதுரை மாவட்ட எஸ்.பி.,விஜயேந்திர பிதரி கூறுகையில், "வி.ஏ.ஓ.,புகார் கொடுத்தார். விசாரணையை துவக்கினோம். போலீசாரால் தாமதம் ஏற்படவில்லை. அப்பகுதியை தோண்டி ஆய்வு செய்ய, மாஜிஸ்திரேட் முன் அனுமதி பெற கடிதம் எழுதினோம். மாஜிஸ்திரேட் ஒப்புதல் அளித்துள்ளார். இரவில் தோண்டினால் போதிய தடயங்கள் சிக்க வாய்ப்பில்லை. எனவே, இன்று உடல்களைத் தோண்டி பிரேத பரிசோதனை நடத்தப்படும்' என்றார். பல ஆண்டுகளுக்கு முன்னர் புதைக்கப்பட்ட உடல்கள் என்பதால், இயந்திரம் கொண்டு தோண்டினால் தடயங்கள் அழிக்கப் படும் அபாயம் இருப்பதால், மனிதர்களே தோண்டும் பணியில் ஈடுபட்டுள்ளனர். 6 தொழிலாளர்கள் இதில் ஈடுபட்டனர்.
இன்று காலையில் தொடங்கி மாலை வரை தோண்டும் பணி நடைபெற்றது. இதில், அங்கு 4 எலும்புக் கூடுகள் கிடைத்தன. அவற்றில் ஒன்று 7 மாதக் குழந்தையுடையது. இந்த எலும்புக்கூடுகள் துணிகளில் சுற்றிய நிலையில் மீட்கப் பட்டதாகத் தெரிகிறது. மேலும், அபிஷேக பொருட்களுடன் மஞ்சள் பூசிய தேங்காய் ஒன்றும் அத்துடன் கண்டு எடுக்கப்பட்டு உள்ளது.
எலும்புக் கூடுகளை சேகரித்து தடயவியல் நிபுணர்கள் மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பியுள்ளனர். அவற்றை டிஎன்ஏ பரிசோதனை செய்து ஒரு வாரத்தில் மருத்துவ அறிக்கை பெறப்படும் எனத் தெரிகிறது. கடந்த சில ஆண்டுகளாக இந்த இடத்தை அப்பகுதி மக்கள் இடுகாடாக பயன்படுத்தி வருகின்றனர். எனவே, தற்போது மீட்கப்பட்டுள்ள எலும்புக் கூடுகள் நரபலி கொடுக்கப் பட்டவர்களுடையதா அல்லது அப்பகுதி மக்கள் புதைத்த சடலங்களுக்கு சொந்தமானவையா என்பது ஆய்வு முடிவுகளுக்குப் பின்னரே தெரியவரும்.
No comments:
Post a Comment