அரசியல் கட்சி தலைவர்களின் வீடுகள், அலுவலகங்கள் எதிரே தடையை மீறி போராட்டம் நடத்துவோர் மீது காவல்துறை துப்பாக்கி சூடு நடத்தினாலும் தப்பில்லை என்று மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்தார். பிரதமர் நரேந்திரமோடியும் தமிழக முதல்வர் ஜெயலலிதாவும் சமீபத்தில் போயஸ் கார்டன் இல்லத்தில் சந்திப்பு நடத்தினர். இதை தரக்குறைவாக விமர்சனம் செய்தார் காங்கிரஸ் கட்சியின் தமிழ் மாநில தலைவர் இளங்கோவன்.
இதையடுத்து அதிமுகவினர் இளங்கோவன் உருவ பொம்மைகளை எரித்து போராட்டங்கள் நடத்தினர். பாஜகவினரும் போராட்டங்கள் நடத்தினர். அதிமுக தொண்டர்கள் சிலரால், சென்னை சத்தியமூர்த்தி பவனில் தாக்குதல் நடத்தப்பட்டது. திருச்சியில் நேற்று கட்சி அலுவலகம் கல்வீசி தாக்கப்பட்டது. அப்போது அங்கிருந்த முன்னாள் முதல்வர், பெருந்தலைவர் காமராஜர் சிலை மீதும் தக்காளி போன்ற பொருட்கள் பட்டுவிட்டன. அதிமுகவினரை போலீசார் தடியடி நடத்தி விரட்டியடித்தனர். காங்கிரஸ் தலைவர்களுக்கு பாதுகாப்பில்லாத சூழல் உருவாகியுள்ளது போன்ற தோற்றம் தமிழகத்தில் உள்ளது. இதுகுறித்து திருச்சங்கோட்டில் இன்று செய்தியாளர்களிடம் கருத்து தெரிவித்த மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், "அரசியல் கட்சி தலைவர்களின் வீடு, கட்சி அலுவலகம் போன்றவற்றின் எதிரே, போராட்டம் நடத்த யாருக்கும் போலீசார் அனுமதி தரக்கூடாது. அவ்வாறு தடையை மீறி போராட்டம் நடத்தப்பட்டால், அவர்கள் மீது போலீசார் துப்பாக்கி சூடு நடத்தினாலும் தவறு கிடையாது.
மேலும், கூடங்குளம், மீத்தேன் போன்ற திட்டங்களுக்கு பொதுமக்கள் அனைவருமே எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. சில குழுவினர் மட்டுமே எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள். இதுபோன்ற திட்டங்களை தடுத்து, தமிழக வளர்ச்சிக்கு அவர்கள் முட்டுக்கட்டை போடுகிறார்கள். பொது சேவை வரி திட்டத்தை தமிழகத்தில் செயல்படுத்த மாநில அரசு ஒத்துழைக்க வேண்டும்". இவ்வாறு மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்தார். எதிர்க்கட்சியாக இருக்கும் காங்கிரஸ் தலைவர்கள் மீதான தாக்குதலை தடுக்கும் வகையில், நடுநிலையோடு பொன்.ராதாகிருஷ்ணன் கருத்து கூறியுள்ளது நல்ல அரசியல் நாகரீகமாக பார்க்கப்படுகிறது.
No comments:
Post a Comment