நாகர்கோவில் அருகே பல கோடி ரூபாய் நோட்டுக்களை ஏற்றி வந்த கன்டெய்னர் லாரி குளத்துக்குள் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்து குறித்து அறிந்ததும் பொதுமக்கள் திரண்டனர் அவர்களை கன்டெய்னர் அருகே போலீசார் அனுமதிக்கவில்லை. இந்த விபத்தில் 4 ஆடுகளும் இறந்தன. கர்நாடக மாநிலம் மைசூரில் உள்ள ரிசர்வ் வங்கியில் இருந்து, திருவனந்தபுரத்தில் உள்ள ரிசர்வ் வங்கி கிளைக்கு கோடிக்கணக்கான ரூபாய் நோட்டுக்கள் புதிதாக அச்சிடப்பட்டு 2 கன்டெய்னர்களில் அனுப்பி வைக்கப்பட்டன. இந்த கன்டெய்னர்களுக்கு முன், பின் பகுதியில் மத்திய ரிசர்வ் போலீஸ் படையினர் பாதுகாப்புக்காக வந்தனர்.
வெள்ளிக்கிழமை மதியம் 12.30 மணியளவில் இந்த இரு கன்டெய்னர்களும், நாகர்கோவில் - திருநெல்வேலி தேசிய நெடுஞ்சாலையில் வந்து கொண்டிருந்தன. நாகர்கோவில் அருகே உள்ள தேரேகால்புதூர் சடையன்குளம் அருகே கன்டெய்னர்கள் வந்து கொண்டிருந்த போது, அந்த பகுதியில் உள்ள ஒரு திருப்பத்தில் ரோட்டோரமாக ஆடுகள் சென்று கொண்டிருந்தன. ஆடுகள் மீது மோதாமல் இருப்பதற்காக முதலில் சென்று கொண்டிருந்த கன்டெய்னர் லாரி டிரைவர் பிரேக் பிடித்தார். இதில் அந்த கன்டெய்னர் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடி ரோட்டோரத்தில் இருந்த மின் கம்பத்தில் மோதியது. அதன் பின்னரும் நிற்காமல் வேகமாக சென்று குளத்துக்குள் பாய்ந்தது. இதில் கன்டெய்னர் தனியாகவும், என்ஜின் பகுதி தனியாகவும் முறிந்தன. கன்டெய்னர் தலை குப்புற கவிழ்ந்தது. விபத்தை பார்த்ததும் மத்திய தொழிற்பாதுகாப்பு படையினர் வேகமாக வந்து கன்டெய்னரை சுற்றி பாதுகாப்பாக நின்று கொண்டனர். சம்பவம் குறித்து அறிந்ததும் ஆரல்வாய்மொழி போலீசார் விரைந்து வந்தனர். நாகர்கோவிலில் இருந்து உயர் அதிகாரிகளும் விபத்து பகுதிக்கு வந்தனர்.
சம்பவ இடத்தை சுற்றி போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டது. இந்த விபத்தில் லாரி டிரைவர் லேசான காயம் அடைந்தார். மின்கம்பம் சரிந்ததில் உயர்அழுத்த மின்கம்பிகள் லாரி மீது உரசியபடியே இருந்தன. இருப்பினும் யாருக்கும் பாதிப்பு இல்லை. ஆனால் ரோட்டை கடந்த ஆடுகளில், 3 ஆடுகள் பலியாகின. இதற்கிடையே, அந்த லாரியுடன் வந்த மற்றொரு கண்டெய்னர் லாரி சற்று தூரம் வந்து தேரேகால்புதூர் ஊரில் ரோட்டோரம் ஒதுக்கி நிறுத்தப்பட்டது. இந்த விபத்து அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. பொதுமக்கள் அங்கு திரண்டு வந்தனர். இதற்கிடையே காவல்கிணறு சந்திப்பு அருகே உள்ள மகேந்திரகிரி திரவ திட்ட இயக்க மையத்தில் இருந்து துணை ராணுவ படையினர் (மத்திய தொழில் பாதுகாப்பு படை) விரைந்து வந்து லாரியைச் சுற்றி நின்றனர். இதனால் லாரியில் இருப்பது, இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிலையத்துக்கு சொந்தமான ராக்கெட் உதிரி பாகங்களாக இருக்கும் என்று கூறப்பட்டது. எனவே, லாரி கவிழ்ந்த பரபரப்பு அப்படியே அடங்கியது. விபத்து காரணமாக நாகர்கோவில் - திருநெல்வேலி தேசிய நெடுஞ்சாலையில் நேற்று மாலை வரை போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இந்த நிலையில் மாலை 6 மணி அளவில் கோட்டார் போலீஸ் இன்ஸ்பெக்டர் கஜேந்திரன் தலைமையில் உள்ளூர் போலீசார் அங்கு சென்று தேவையான ஏற்பாடுகளை செய்து கொடுத்தனர். 2 ஜெனரேட்டர்கள் உடனடியாக வரவழைக்கப்பட்டன. கவிழ்ந்து கிடந்த லாரியின் முன்னும், பின்னும் அவை இறக்கி வைக்கப்பட்டு மின்விளக்கு வசதி செய்யப்பட்டது. விபத்து குறித்து அறிந்ததும் திருவனந்தபுரத்தில் உள்ள ரிசர்வ் வங்கி அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். அவர்கள் வந்து கன்டெய்னரை ஆய்வு செய்தனர். அதன் பின்னரே கிரேன் வரவழைக்கப்பட்டு மீட்பு பணி தொடங்கியது. நேரம் செல்ல செல்ல அதிகாரிகள் பதற்றத்துடன் காணப்பட்டனர். துணை ராணுவத்தினர் விடிய, விடிய பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
No comments:
Post a Comment