தொழில் வளர்ச்சிக்குப் பெயர் பெற்ற தமிழகம் தற்போது அ.தி.மு.க. ஆட்சியில் தத்தளித்துக் கொண்டிருக்கும் துயரம் மிகுந்த காட்சிகளைப் பார்க்கும் போது வேதனையாக இருக்கிறது என்று தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். நூற்பாலை தொழிலை காப்பாற்ற அதிமுக அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார். இது
குறித்து மு.க.ஸ்டாலின் தனது முகனூல் பதிவில் கூறியுள்ளதாவது...
சிறு மற்றும் குறு தொழில் முன்னேற்றத்திற்காக எந்த விதமான நடவடிக்கையும் எடுக்காமல் இருக்கும் அ.தி.மு.க. அரசின் செயலற்ற போக்கு மிகவும் கவலையளிப்பதாக உள்ளது. இந்த தொழில்களில் ஈடுபட்டுள்ளோர் உட்கட்டமைப்பு வசதிகள் ஏதும் இல்லாத காரணத்தால் சங்கடத்தில் தவிக்கிறார்கள். ஏற்கனவே இவர்கள் அறிவிக்கப்படாத மின் வெட்டு, தண்ணீர் பற்றாக்குறை, வியாபாரம் செழிப்பதற்கு ஏற்ற சூழல் இல்லாதது மற்றும் மோசமான உட்கட்டமைப்பு வசதிகள் போன்றவற்றுடன் அவதிப்படுகிறார்கள். அதை விட முக்கியமாக நூற்பாலை தொழிலில் உள்ளோரும், அதை நம்பியிருக்கின்ற ஆயிரக்கணக்கான தொழிலாளர்களும் முற்றிலும் முடங்கிக் கிடக்கும் அவல நிலைமை ஏற்பட்டிருக்கிறது. பஞ்சு மற்றும் நூல் விலை சீராக இல்லை என்பதே அதற்கு இன்னொரு முக்கியக் காரணம். சமீபத்தில் பேட்டியளித்த தென்னிந்திய நூற்பாலைகள் சங்கத் தலைவர் சி.வரதராஜன், "நூலின் விலை ஒரு கிலோவிற்கு 20 ரூபாய் வரை குறைந்து விட்டது" என்ற உண்மையை வெளிப்படுத்தியிருக்கிறார். அது மட்டுமின்றி, நூற்பாலைகளின் நெருக்கடியான நிலைமை குறித்து அரசுக்கு மனு அனுப்பி, கோரிக்கை வைத்தும் இதுவரை எந்தவிதமான நடவடிக்கையையும் அ.தி.மு.க. அரசு எடுக்கவில்லை என்று தெரிய வருகிறது. விலை சரிவு காரணமாக உற்பத்தி செய்யப்பட்ட நூல்கள் விற்பனை ஆகாதால் கடந்த மூன்று மாதங்களில் பல நூற்பாலைகள் வேலை செய்யும் நேரத்தை குறைப்பது, காலமுறையைக் குறைப்பது என்பது போன்ற கடும் நடவடிக்கைகளை எடுத்ததால் தொழிலாளர்கள் பாதிப்புக்குள்ளானார்கள். இப்போது உற்பத்தியையும் குறைத்து விட்ட நிலையில், நூற்பாலைகளின் நிலைமை மேலும் மோசமாகியிருக்கிறது. இந்த சூழலால் பல நூற்பாலைகள் மூட வேண்டிய நிலையும் ஏற்பட்டு விட்டது. தொழில் வளர்ச்சிக்குப் பெயர் பெற்ற தமிழகம் தற்போது அ.தி.மு.க. ஆட்சியில் இப்படி தத்தளித்துக் கொண்டிருக்கும் துயரம் மிகுந்த காட்சிகளைப் பார்க்கும் போது வேதனையாக இருக்கிறது. ஆகவே நூற்பாலை தொழில் முன்னேற்றத்திற்குத் தேவையான உட்கட்டமைப்பு வசதிகளை உடனடியாக ஏற்படுத்திக் கொடுத்து, அவசர கால நடவடிக்கைகளை மேற்கொண்டு, தொழில் வளர்ச்சிக்கு வித்திடுமாறு அ.தி.மு.க. அரசுக்கு வேண்டுகோள் விடுக்கிறேன். இவ்வாறு தனது முகநூல் பதிவில் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
No comments:
Post a Comment