சிதம்பரம் அருகே ஞாயிற்றுக்கிழமை இரவு ஊருக்குள் புகுந்த இரு முதலைகளை தீயணைப்புத்துறையினர் மற்றும் வனத்துறையினர் பிடித்தனர்.
கடலூர் மாவட்டம் சிதம்பரம், காட்டுமன்னார்கோயில் வட்டங்களில் முதலைகள் அட்டகாசம் தொடர்ந்து வருவதால், அப்பகுதியில் வாழும் மக்கள் அச்சத்துடன் வாழும் நிலை ஏற்பட்டுள்ளது. இதுவரை முதலை கடித்து 15-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். நூற்றுக்கணக்கான ஆடு, மாடுகள் உள்ளிட்ட கால்நடைகளும் இறந்துள்ளன. பலர் காயமுற்று கை, கால்களை இழந்துள்ளனர்.
சிதம்பரம் அருகே உள்ள வேளக்குடியில் பழைய கொள்ளிடம் அருகே சீர்காழி மெயின்ரோட்டில் பெட்டிக்கடை வைத்து நடத்துபவர் பாண்டுதுரை (52) என்பவர் கடந்த புதன்கிழமை காலை பழைய கொள்ளிடம் ஆற்றில் குளிக்கும் போது அவரை முதலை ஒன்று கடித்து இழுத்துச் சென்றது. அவரது உடல் தேடிபார்த்தும் கிடைக்காததால், தேடும் பணியை வனத்துறையினர் கைவிட்டனர்.
இந்நிலையில் சிதம்பரம் அருகே நாஞ்சலூர் சாலையில் முதலை ஒன்று படுத்திருப்பதாக வந்த தகவலின் பேரில் ஞாயிற்றுக்கிழமை இரவு வனக்காப்பாளர்கள் எம்.ராஜேஷ்குமார், எம்.செல்வராஜ் மற்றும் முகமதுஜகாங்கீர் தலைமையிலான தீயணைப்பு மீட்புத்துறையினர் அங்கு சென்று 12 அடிநீளமுள்ள 750 கிலோ எடை கொண்ட ராட்சச முதலையை பிடித்தனர். அதன் பின்னர் நாஞ்சலூரை அடுத்த சிவாயம் கிராமத்தில் வடக்குராஜன் வாய்க்காலிலிருந்து முதலை ஒன்று சாலையில் ஏறி வருவதாக ஊர்மக்கள் தகவல் தெரிவித்தனர்.
இதனையடுத்து வனத்துறையினர் அங்கு சென்று 8 அடிநீளமுள்ள 500 கிலோ எடை கொண்ட முதலையை பிடித்தனர். இருமுதலைகளையும் சிதம்பரம் அருகே உள்ள வாக்காரமாரி நேர்தேக்கத்தில் கொண்டு பாதுகாப்பாக விட்டனர்.
No comments:
Post a Comment