லோக்சபா தேர்தலில் நாடுமுழுவதும் வீசிய மோடி சுனாமி தற்போது ஓய்ந்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மக்களின் அமோக ஆதரவை பெற்று பெரும்பான்மை பலத்துடன் ஆட்சியமைத்த பிரதமர் மோடியின் செல்வாக்கு 300 நாட்களில் மங்கத் தொடங்கியுள்ளதாக சமீபத்திய கருத்துக் கணிப்பு தெரிவிக்கிறது. 2014ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற லோக்சபா தேர்தலின்போது தமிழகம் மேற்கு வங்காளம் தவிர அனைத்து மாநிலங்களிலும் பாஜக அமோக வெற்றி பெற்றது. மிகப் பெரும்பான்மை பலத்துடன் ஆட்சியைப் பிடித்தது.
ஆட்சிக்கு வந்த சில மாதங்களுக்கு உள்ளாகவே மக்கள் மத்தியில் பாஜகவிற்கு செல்வாக்கு மறையத் தொடங்கியது. இது டெல்லி மாநிலத் தேர்தலிலேயே எதிரொலித்தது. இந்நிலையில், பிரதமர் மோடி தலைமையில் பாஜக ஆட்சிக்கு வந்து 10 மாதங்கள் நிறைவடைந்து விட்ட நிலையில் மோடியின் செல்வாக்கு எப்படி? அரசின் செயல்பாடுகள் எப்படி உள்ளது? என்பது குறித்து India Today Group-Cicero Mood இணைந்து மக்களிடம் கருத்து கணிப்பு நடத்தியது. அந்த கருத்துக்கணிப்பு முடிவில் 300 நாள் ஆட்சியில் பிரதமர் மோடியின் செல்வாக்கு சரிந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
51 சதவீதத்தில் இருந்து 38 சதவீதம்...
கடந்த ஆகஸ்ட் மாதம் கருத்து கணிப்பு நடத்தியபோது மோடியின் செயல்பாடு மிகப் பிரமாதம் (excellent) என்று 10 சதவீதம் பேர் தெரிவித்து இருந்தனர். தற்போது 22 சதவீதம் பேர் மிகப் பிரமாதம் என்று கருத்துத் தெரிவித்து உள்ளனர். சிறப்பான செயல்பாடு (good) என்று கடந்த ஆகஸ்ட் மாதம் 51 சதவீதம் பேர் கூறியிருந்தனர். ஆனால், தற்போது அது 38 சதவீதமாகக் குறைந்துள்ளது. பரவாயில்லை (average) என்று 28 சதவீதம் பேர் கூறியிருந்தனர். அது 26 சதவீதமாகியுள்ளது. மிக மோசம் (poor) 6 சதவீதம் பேர் கூறியிருந்தனர். இது இப்போது 11 சதவீதமாக உயர்ந்துள்ளது. நரேந்திர மோடியால் நாடு வளர்ச்சியடையும் என ஆகஸ்டில் சொன்னவர்கள் 46 சதவீதம் பேர். இது 40 சதவீதமாக குறைந்துள்ளது. சிறந்த ஆட்சியைத் தருவார் என 24 சதவீதம் பேர் கூறியிருந்தனர். ஆனால், இந்தக் கருத்தை இப்போது முன் வைப்போர் எண்ணிக்கை 12 சதவீதமாக குறைந்துள்ளது.
ஆட்சி மோசம்
ஆட்சி சராசரியாக உள்ளது என்று முன்பு 28 சதவீதம் பேர் தெரிவித்து இருந்தனர். இப்போது அது 26 சதவீதமாகக் குறைந்துள்ளது. மிகவும் மோசம் என்று ஆகஸ்ட் மாதம் 6 சதவீதம் பேர் கருத்து தெரிவித்தனர். தற்போது மிகவும் மோசம் என்று 11 சதவீதம் பேர் கூறியுள்ளனர்.
வாழ்க்கத் தரம் எப்படி?
இதே போல் கடந்த 6 மாதத்தில் வாழ்க்கை தரம் மேம்பட்டுள்ளதா? என்று கேட்ட போது, அதுவும் கடந்த ஆண்டைக் காட்டிலும் 1 சதவீதம் பேர் குறைந்து இருப்பதாக தெரிவித்து உள்ளனர்.
பாதுகாப்பு எப்படி?
மோடி அரசில் பாதுகாப்பாக உணர்கிறீர்களா? என்று கேட்கப்பட்டதற்கு கடந்த ஆகஸ்ட் மாதம் 78 சதவீதம் பேர் ஆம் என்று தெரிவித்தனர். தற்போது அது 61 சதவீதமாகக் குறைந்துள்ளது. அதேபோல பாதுகாப்பு இல்லை என்று ஏற்கனவே 19 சதவீதம் பேர் தெரிவித்து இருந்தனர். அது 26 சதவீதமாக அதிகரித்து உள்ளது.
வளர்ச்சித் திட்டம்
வளர்ச்சி திட்டம் தொடர்பாக முன்பு 70 சதவீதம் ஆதரவு இருந்தது. இப்போது 47 சதவீதமாகக் குறைந்துள்ளது.
மத விமர்சனங்கள்
ஆட்சியின் மீதான மதரீதியான விமர்சனங்கள் முன்பு 21 சதவீதமாக இருந்தது. இப்போது 39 சதவீதமாக அதிகரித்துள்ளது.
மோடியின் தனிப்பட்ட செல்வாக்கு சரிவு:
அதே போல பிரதமர் மோடியின் தனிப்பட்ட செல்வாக்கும் கடந்த ஆகஸ்ட் மாதத்துடன் ஒப்பிடுகையில் 57 சதவீதத்தில் இருந்து 37 சதவீதமாக சரிந்துள்ளது. அதே நேரத்தில் நரேந்திர மோடி தனிப்பட்ட முறையில் மிக நேர்மையான பிரதமர் என்றும் பெரும்பாலனோர் கருத்துத் தெரிவித்துள்ளனர்.
சரிவுக்கு காரணம்
மதரீதியான விமர்சனங்கள், ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் தலையீடு, விலைவாசி உயர்வு ஆகியவற்றை பெரிய பிரச்னையாக பெரும்பாலானவர்கள் கருதுகிறார்கள். இவற்றில் தலையிட்டு தீர்வு காண பிரதமர் மோடி முயலாமல் இருப்பதே, பிரதமர் மோடியின் செல்வாக்கு சரிவுக்கு காரணம் என்று அந்த கருத்துக்கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேர்தல் நடந்தால்?
இப்போதைய சூழ்நிலையில் லோக்சபா தேர்தல் நடத்தினால் பாஜகவுக்கு ஏற்கெனவே கிடைத்த தொகுதிகளில் 27 தொகுதிகள் குறையும் என்றும், அதே சமயம் காங்கிரசுக்கு 9 தொகுதிகள் கூடுதலாகக் கிடைக்கும் என தெரிய வந்துள்ளது.
கேஜ்ரிவாலுக்கு ஆதரவு அதிகரிப்பு...
அதே போல அடுத்த பிரதமராக யார் சிறந்தவர் என்ற கேள்விக்கு 15 சதவீதம் பேர் அரவிந்த் கேஜ்ரிவால் பெயரை கூறியுள்ளனர். அதே போல ஆம் ஆத்மி கட்சிக்கும் தேசிய அளவில் ஆதரவு அதிகரித்துள்ளது. 40 சதவீதம் பேர் ஆம் ஆத்மி கட்சி தேசிய அளவில் போட்டியிட வேண்டும் என்றும் கருத்துத் தெரிவித்துள்ளனர். ஆம் ஆத்மியை ஆதரிக்கும் பெரும்பாலானவர்கள் ஊழல் எதிர்ப்பு காரணமாக கேஜ்ரிவாலை ஆதரிப்பதாகக் கூறியுள்ளனர்.
ராகுல் காந்திக்கு ஆதரவு
அதே போல அடுத்த 5 ஆண்டுகளில் காங்கிரஸ் கட்சியால் மீண்டுவிட முடியும் என்று 48 சதவீதம் பேர் கருத்துத் தெரிவித்துள்ளனர். இது கடந்த ஆகஸ்டில் 38 சதவீதமாகவே இருந்தது. அதே போல 47 சதவீதம் பேர் ராகுல் காந்தி அடுத்த காங்கிரஸ் தலைவராக வேண்டும் என்றும் கூறியுள்ளனர். கடந்த ஆகஸ்டில் பிரியங்காவே காங்கிரஸ் தலைவராக வேண்டும் என 60 சதவீதம் பேர் கூறியிருந்தனர். இப்போது ராகுலுக்கு ஆதரவு அதிகரித்து பிரியங்காவுக்கு ஆதரவு சரிந்துள்ளது.
சிறந்த முதல்வர் நவீன் பட்நாயக்...
அதே போல சிறந்த முதல்வராக ஒடிஸ்ஸாவின் நவீன் பட்நாயக்கையே மக்கள் தேர்வு செய்துள்ளனர். அடுத்த நிலையில் அரவிந்த் கேஜ்ரிவால் உள்ளார்.
ஜெயலலிதா பிரதமராக ஆதரவு அதிகரிப்பு:
அதே போல யார் அடுத்த பிரதமராக வேண்டும் என்ற கேள்விக்கு ஜெயலலிதாவின் பெயரை 7 சதவீதம் பேர் கூறியுள்ளனர். இது கடந்த ஆகஸ்ட் மாதத்தில் 3 சதவீதமாகவே இருந்தது. மோடி, கேஜ்ரிவாலுக்கு அடுத்த நிலையில் ஜெயலலிதா உள்ளார். ஜெயலலிதாவுக்கு சமமான நிலையில் தான் ராகுலின் பெயரும் உள்ளது. அதாவது 7 சதவீதம் பேர் மட்டுமே அவர் பிரதமராக வேண்டும் என்று கருத்துத் தெரிவித்துள்ளனர். சோனியா பிரதமராக 5 சதவீத ஆதரவே தொடந்து நீடிக்கிறது.
No comments:
Post a Comment