சிவகங்கை மாவட்டம் காரைக்குடி பகுதியில் குன்றக்குடி அருகேயுள்ள ஆவுடைப்பொய்கை கிராமத்தில் இந்த மூலிகைப் பண்ணை இருக்கிறது.
நம்மாழ்வாரின் சீடரான சொக்கலிங்கம் இன்று நேற்றல்ல, 25 வருடங்களுக்கு முன்பே 45 ஏக்கரில் இந்தப் பண்ணையைத் திட்டமிட்டு வடிவமைத்திருக்கிறார். இப்போது மூலிகைத் தோட்டங்களை உருவாக்க நினைப்பவர்களுக்கு இலவசமாக மூலிகைச் செடிகளையும் ஆலோசனைகளையும் வழங்கிக் கொண்டிருக்கிறார்.
ஊடுபயிர்
இந்த மூலிகைப் பண்ணையில் மூலிகைச் செடிகளைத் தவிர மா, நெல்லி, தென்னை மரங்களை வைத்திருக்கிறார்கள். மாங்கனிகளில் பெரும்பகுதியை இங்கு வரும் மான் கூட்டம் தின்றுவிடுகிறது. பழத்தைத் தின்றுவிட்டு அவை போடும் கொட்டைகளையும் நெல்லிக் காய்களையும் மருந்து தயாரிக்கப் பயன்படுத்துகிறார்கள். தேங்காய்களை ஆட்டி எண்ணெய் எடுத்துவிடுகிறார்கள்.
இங்குள்ள மூலிகைச் செடிகளைக் கொண்டு மூலிகை மருந்து தயாரிப்பதற்காகப் பண்ணைக்குள்ளேயே சின்னத் தொழிற்சாலை இருக்கிறது. மூலிகைகள் மட்டுமில்லாமல் நெல், மஞ்சள், காய் - கனிகள் உள்ளிட்டவற்றை ஊடுபயிர்களாக விளைவிக்கிறார்கள். அத்தனையும் இயற்கை விவசாயத்தில் விளைவிக்கப்படுவதால், அக்கம்பக்கத்து ஊர் மக்கள் நேரில் வந்து வாங்கிச் சென்றுவிடுகிறார்கள்.
இலவச மூலிகைகள்
’’கேரளா, கர்நாடகா, ஆந்திரா எனப் பல்வேறு மாநிலங்களில் இருந்து தேடித் தேடிக் கண்டுபிடித்து இந்த மூலிகைச் செடிகளை இங்கே கொண்டுவந்து சேர்த்திருக்கிறேன். இதை நான் மட்டும் வைத்திருப்பதால் மற்றவர்களுக்கு என்ன கிடைக்கப் போகிறது? மூலிகைச் செடிகளை விருப்பப்பட்டுக் கேட்கிறவர்களுக்கு இலவசமாகக் கொடுக்கிறேன், நட்டு வளர்ப்பதற்கான ஆலோசனைகளையும் தருகிறேன்.
ஒரு காலத்தில் ஏழைகளின் உணவாக இருந்த கம்பங் கஞ்சியும் கேழ்வரகுக் கூழும் இப்போது செல்வந்தர்களின் உணவாகிவிட்டன. அந்தளவுக்கு மூலிகைச் செடிகள் பற்றியும் சிறுதானிய உணவு வகைகளின் மகிமைகள் பற்றியும் மக்கள் விழிப்புணர்வு பெற்றிருக்கிறார்கள்.
விழிப்புணர்வு அதிகரித்திருந்தாலும் மூலிகைகளைக் கண்ணால் பார்க்கும் வாய்ப்பு பலருக்கும் கிடைப்பதில்லை. அந்தக் குறையை எங்கள் பண்ணை தீர்த்துவைக்கும்’’ என்கிறார் சொக்கலிங்கம்.
மாணவர்களிடையே மூலிகைகளின் மகத்துவம் குறித்துக் கோடை பண்பலையில் கடந்த ஒன்பது வருடங்களாகத் தினம் ஒரு தகவல் சொல்லிக் கொண்டிருக்கிறார் சொக்கலிங்கம். வளரும் தலைமுறை யினரிடம் மூலிகைகள் குறித்த விழிப்புணர்வை அதிகரிப்பதற்காகப் பள்ளிக் கல்லூரிகளில் இயற்கை உணவு, அரிய வகை மூலிகைச் செடிகளின் மகத்துவம் குறித்தும் இலவச வகுப்புகளை நடத்துகிறார்.
பள்ளிக் குழந்தைகளைப் பண்ணைக்கே அழைத்துவந்து, மூலிகைச் சாறு உள்ளிட்ட இயற்கை உணவு வகைகளைக் கொடுத்து மூலிகைகளின் மகத்துவம் பற்றி சொல்லித் தருகிறார்.
சிவகங்கை மாவட்டத்தில் 18 பள்ளிகளில் இவர் உருவாக்கிக் கொடுத்திருக்கும் மூலிகைத் தோட்டங்களைப் பள்ளி மாணவர்கள் பராமரித்துவருகிறார்கள். மூலிகை மருத்துவத்தின் மகிமையை மக்கள் உணர வேண்டும் என்பதற்காக, பி.எஸ்.எம்.எஸ். படித்த நான்கு மருத்துவர்களைக் கொண்டு சிகிச்சையும் மருந்தும் அளித்து வருகிறார். வாரத்தில் ஒருநாள் இலவசச் சிகிச்சையும் மருந்துகளும் தரப்படுகின்றன.
மூலிகைத் திருவிழா
’’எங்கள் பண்ணையில் 2012-ல் மூலிகைத் திருவிழா நடத்தினோம். அதில் கேரளா, கர்நாடகா, வெளிநாட்டு சுற்றுலா பயணிகளும் ஆர்வத்துடன் கலந்துகொண்டார்கள். அத்தனை பேருக்கும் இயற்கை உணவுடன் ஆறாயிரம் மூலிகைச் செடிகள், ஐயாயிரம் மரக் கன்றுகளைக் கொடுத்தோம்.
நம் வீட்டில் ஒரு மூலிகைத் தோட்டம் இருந்தால் ஒரு மருத்துவர் உடன் இருப்பதற்குச் சமம். சொந்த வீடாக இருந்து கொல்லைப்புறத்தில் ஒரு சென்ட் இடமிருந்தால்போதும். அத்தியாவசிய மூலிகைகள் அனைத்தையும் அங்கே வளர்த்துவிடலாம். மாடி வீடுகளாக இருந்தால் முப்பது மண் தொட்டிகள் போதும். எந்த வைத்தியரையும் தேடிப் போக வேண்டியதில்லை. எங்களிடம் மூலிகைக் கன்றுகளை வாங்கிச் சென்றவர்கள், பெரிய அளவில் உற்பத்தி செய்து எங்களிடமே விற்றுக் காசாக்கிக் கொள்கிறார்கள்" என்று முடிக்கிறார் சொக்கலிங்கம்.
சொக்கலிங்கம் தொடர்புக்கு: 94429 85720
No comments:
Post a Comment