Latest News

மானிய சிலிண்டர்... சந்தேகங்களுக்கு விளக்கங்கள்!


நாடு முழுக்க இருக்கும் சமையல் எரிவாயு ஏஜென்சிகளின் வாசலில், நீண்ட வரிசையில் காத்துக் கிடக்கிறார்கள் மக்கள். ‘ஜனவரி 1-ம் தேதிக்குள், ஆதார் எண்ணை ஏஜென்சியிடம் கொடுக்காவிட்டால், அதற்குப் பிறகு மானிய விலை சிலிண்டர் கிடைக்காது. 800 ரூபாய்க்கு மேல் பணம் கொடுத்துத்தான் வாங்க வேண்டும்' என்று பரவிக்கிடக்கும் தகவல்தான் காரணம்.

சிலிண்டருக்கான மானியம் தொடர்பாக அதிரடி வேலைகளில் மத்திய அரசு இறங்கியிருப்பது என்னவோ உண்மைதான். ஆனால், அதில் என்ன நடக்கிறது என்பது சரிவர தெளிவுபடுத்தப்படாததால்... மக்கள் படாதபாடு பட்டுக் கொண்டுள்ளனர். இந்நிலையில், மானிய சிலிண்டரை தொடர்ந்து பெறுவதற்கு என்ன வழி, இதற்கு என்ன செய்ய வேண்டும், யாரை அணுக வேண்டும் என்பது உள்ளிட்ட அனைத்து சந்தேகங்களுக்கும் இங்கே
விடையளிக்கிறார், சென்னையிலிருக்கும் ஸ்ரீ நவநீதலட்சுமி கேஸ் ஏஜென்சி உரிமையாளர் வரதராஜன்.

‘‘சமையல் எரிவாயுக்காக தற்போது வழங்கப்படும் சிலிண்டர்கள், மத்திய அரசின் மானியத்தின் காரணமாகவே 400 ரூபாய் விலையில் கிடைக்கிறது. இல்லையென்றால், 800 ரூபாய்க்கு மேல் தரவேண்டியிருக்கும். இப்படி மானிய விலையில் தரப்படும் சிலிண்டர்கள், தவறாகவும் பெறப்படுகின்றன, இதனால் அரசுக்கு ஏகப்பட்ட நஷ்டம் என்பதால், எரிவாயு சிலிண்டருக்கான மானியத்தை நேரடியாக நுகர்வோரின்
வங்கிக் கணக்கில் மத்திய அரசு செலுத்தப் போகிறது. இந்தத் திட்டம், கடந்த நவம்பர் 15 முதல் இந்தியாவில் 54 மாவட்டங்களில் அமலில் இருக்கிறது. அடுத்தகட்டமாக, இந்தியா முழுமைக்கும் அமல்படுத்தப்பட இருக்கிறது.

ஒரு குடும்பத்துக்கு வருடத்துக்கு 12 சிலிண்டர்கள் மானிய விலையில் தரப்படும். உங்களுக்கான சிலிண்டரை விநியோகஸ்தரிடம் முழுவிலை கொடுத்து நீங்கள் வாங்கிக்கொள்ள வேண்டும். அந்த விலை, மாறுதலுக்கு உட்பட்டது. அப்படி நீங்கள் விநியோகஸ்தரிடம் சிலிண்டருக்காகக் செலுத்திய தொகைக்கும், மானிய விலைக்குமான வித்தியாசம் சலுகைப் பணமாக அடுத்த 48 மணி நேரத்தில் உங்களது வங்கிக்
கணக்கில் அரசு சேர்த்துவிடும். அதை நீங்கள் எடுத்துக் கொள்ளலாம். ஆதார் எண் அல்லது வங்கிக் கணக்கு என இரண்டு வழிகள் மூலமாக இந்தத் திட்டத்தில் இணைய வேண்டும். எந்த முறையில் இணைவது என்றாலும், வங்கிக் கணக்கு முக்கியம்.

ஆதார் எண் வைத்திருப்போர்!

ஆதார் எண் வைத்திருப்பவர்கள், அதை வங்கிக் கணக்குடன் இணைக்க வேண்டும். இதற்காக, விண்ணப்பத்தை (படிவம்-1) பூர்த்தி செய்து, ஆதார் அட்டை நகலுடன் வங்கியில் சமர்ப்பிக்க வேண்டும். அடுத்து, உங்களுடைய சமையல் எரிவாயு ஏஜென்சியுடனும் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும். இதற்கான விண்ணப்பத்தை (படிவம்-2) பூர்த்தி செய்து சமர்ப்பிக்க வேண்டும். இத்துடன் ஆதார் அட்டை நகல் மற்றும்
இதற்குமுன் வாங்கிய கேஸ் பில்லின் நகல் அல்லது கேஸ் புக்கின் முதல்பக்க நகலை ஏஜென்சியிடம் சமர்ப்பிக்க வேண்டும்.

அதேபோல, வாடிக்கையாளர் உதவி மைய தொலைபேசி எண் வாயிலாக 1800- 2333- 555 பதிவு செய்யலாம். இண்டேன் வாடிக்கையாளர்கள் 8124024365 என்ற தொலைபேசி எண் மூலம் இணையலாம். இது வழக்கமான சிலிண்டர் பதிவுக்கான தொலைபேசி எண்தான். இதில் எண் 2-ஐ அழுத்தினால் உங்களின் ஆதார் அட்டை எண் கேட்கப்படும். அதை அழுத்தினால், இந்தத் திட்டத்தில் உங்களது கணக்கு சேர்ந்துவிடும்.

இணையத்தின் மூலமாகவும் ஆதார் எண்ணை பதிவு செய்யலாம். இதற்கு, https://rasf.uidai.gov.in/ என்ற முகவரியை க்ளிக் செய்ய வேண்டும். தபால் அல்லது எஸ்.எம்.எஸ் மூலமாகவும் இணையலாம்.

ஆதார் அட்டை இல்லாதவர்கள்!

ஆதார் அட்டை இல்லாதவர்கள், தங்களுக்கு எந்த வங்கியில் கணக்கு இருக்கிறதோ அந்த வங்கியின் பெயர், கிளை, முகவரி உள்ளிட்ட விவரங்களைக் குறிக்கும் ‘IFSC' கோட் எண்ணை உங்கள் விநியோகஸ்தரிடம் கொடுத்து, அவர்களிடம் விண்ணப்பம் 4 பெற்று பூர்த்தி செய்து சமர்ப்பிக்க வேண்டும். அவர்கள் உங்களது கணக்கை இந்தத் திட்டத்தில் சேர்த்துவிடுவார்கள். அல்லது விநியோகஸ்தர்களிடம்
விண்ணப்பம் 3 பெற்று, பூர்த்தி செய்து, வங்கியில் சமர்ப்பிக்கலாம். அதன் பின் மானியத்தொகை உங்கள் வங்கிக் கணக்கில் சேரும்.

பெயர் மாற்றம் அவசியம்!

சிலிண்டர் இணைப்பு யார் பெயரில் உள்ளதோ, வங்கிக் கணக்கும் அவர் பெயரில் இருக்க வேண்டியது கட்டாயம். எனவே, குடும்பத் தலைவரின் மரணம் மற்றும் சில காரணங்களால் வேறு பெயர்களில் இணைப்பைத் தொடர்ந்து கொண்டிருப்பவர்கள், அவற்றை உங்களின் பெயருக்கு மாற்ற வேண்டிய தருணம் இது. இதற்கு விநியோகஸ்தர் கோரும் ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டும்.

காலக்கெடுவும் கருணை அடிப்படையும்!

ஜனவரி 1, 2015 முதல் இந்தத் திட்டம் நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் அமலுக்கு வருவதால், அதற்குள் இதில் இணைந்துவிட வேண்டும். அப்படி இணையாதவர்களுக்கு முதல் மூன்று மாதங்களுக்கு கருணை அடிப்படையில் மானிய விலை சிலிண்டர் வழங்கப்படும். இதைப் பயன்படுத்தி இணைந்துவிட வேண்டும். இல்லையென்றால், மானிய விலை சிலிண்டர் பெறுவதில் சிக்கல் ஏற்படும். இந்தத் திட்டத்தில்
இணையாதவர்கள், அதாவது மானிய விலை சிலிண்டர் தேவையில்லை என்று இருப்பவர்களுக்கு எந்த பாதிப்பும் இருக்காது. இத்திட்டம் பற்றிய சந்தேகங்களுக்கு mylpg.in என்ற ஆன்லைன் முகவரிக்கு சென்று பார்க்கலாம். படிவங்களை சம்பந்தப்பட்ட ஏஜென்சி அல்லது இணைய தளத்தில் இருந்து பெற்றுக் கொள்ளலாம். சம்பந்தப்பட்ட ஆயில் நிறுவனத்தின் வாடிக்கையாளர் சேவை மையத்தை தொடர்பு கொண்டு மேலும்
விவரங்களை பெறலாம்’’ என தகவல்களை நிறைவு செய்தார் வரதராஜன்.

இந்தியா முழுக்கவே 8000 பேர்!

மானிய விலை சிலிண்டர் தேவையில்லாதவர்கள், ஆன்லைன் வழியாக mylpg.in என்ற முகவரியில் டிஎன்எஸ்சி (DNSC-DOMESTIC NON SUBSIDIARY HOUSEHOLD CYLINDER) என்ற ஆப்ஷன் மூலம், ‘தேவையில்லை’ என்று குறிப்பிடலாம். அல்லது நேரடியாக ஏஜென்சியிடம் விண்ணப்பம் 5 மூலம் பதிவு செய்யலாம். இப்போது இந்தியா முழுவதும் 8,000 பேர் மட்டுமே இந்த ஆப்ஷனை தேர்ந்தெடுத்துள்ளார்கள்.

No comments:

Post a Comment

TIYA

WEBSITE DESIGNED BY: NOORUL IBN JAHABER ALI WEBSITE CONTROLLED BY: DOT COLORS
sourceNOORUL IBN JAHABER ALI Copyright © 2015

Theme images by Bim. Powered by Blogger.