இளவயது திருணங்களால் தான் கர்ப்பவாய் புற்றுநோய் ஏற்படுவதாக அரசு மருத்துவமனையின் மகப்பேறு மருத்துவர் மலர்விழி தெரிவி்த்தார்.
விருதுநகரில் சைல்டு லைன் அமைப்பு சார்பில் சிறுமி திருமணங்கள் தடுப்பு தொடர்பாக வருவாய்த்துறை அலுவலர்கள், ஊராட்சி தலைவர்களுக்கான பயிற்சி முகாம் புதன்கிழமை நடைபெற்றது.
இந்த முகாமிற்கு வட்டாட்சியர் சிவஜோதி தலைமை வகித்து முகாமை தொடங்கி வைத்தார். இதில், விருதுநகர் மாவட்ட தலைமை மருத்துவமனையின் மகப்பேறு மருத்துவர் மலர்விழி பேசுகையில், இளவயது திருமணங்களால் சிறுமிகள் உடல் ரீதியாகவும், மனரீதியாகவும் பாதிக்கப்படுகின்றனர். இதுபோன்ற திருமணங்களால் கர்ப்பவாய் புற்று நோய் வருவதற்கும் வாய்ப்பு அதிகமாக இருக்கிறது. அதனால் குறிப்பிட்ட வயதிற்கு பின்னரே பெற்றோர்கள் திருமணத்திற்கான ஏற்பாடுகளை செய்ய வேண்டும் என கேட்டுக்கொண்டார்.
வட்டாட்சியர் சிவஜோதி பேசுகையில், கிராமங்களில் போதுமான விழிப்புணர்வு இல்லாத காரணங்களாலும், சமூக பாதுகாப்பு கருதியே பெற்றோர்கள் குறிப்பிட்ட வயதை அடையாத நிலையில் சிறுமிகளுக்கு திருமணத்தை நடத்தி வைக்கின்றனர். இதுபோன்று திருமணங்கள் நடத்தப்படுவது தெரிந்தால் உடனே வருவாய் அலுவலர்கள் மற்றும் கிராம நிர்வாக அலுவலர்கள் உடனே அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்து தடுத்து நிறுத்த வேண்டும். அதோடு, சிறுமிகளுக்கு திருமணம் செய்து வைப்பதால் ஏற்படும் பிரச்னைகள் குறித்தும், சட்ட விதிமுறைகள் குறித்தும் பெற்றோர்களுக்கு எடுத்துரைக்கவும் வேண்டும் என்றார்.
இதேபோல், சைல்டு லைன் திட்ட இயக்குநர் ஜான் தேவாரம் சிறுமிகள் திருமண தடு்பபு சட்டம்-2006 என்ற தலைப்பிலும், சைல்டு லைன் ஒருங்கிணைப்பாளர் ஜோசப் சிறுமிகள் திருமணங்கள் தடுத்து நிறுத்துவதில் வருவாய்த்துறை-பொதுமக்கள் பிரதிநிதிகளின் பங்கு என்ற தலைப்பிலும், குழந்தை தொழிலாளர்கள் திட்ட அலுவலர் நாராயணசாமி குழந்தை தொழிலாளர்கள் தடுப்பு முறை என்ற தலைப்பிலும் விளக்கமாக எடுத்துரைத்தனர்.
இதில், வட்டாட்சியர்கள், வருவாய் அலுவலர்கள், மகளிர் ஆள்கடத்தல் தடுப்பு காவல் துறையினர், கிராம நிர்வாக அலுவலர்கள் மற்றும் ஊராட்சி தலைவர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை சைல்டு லைன் அமைப்பு மற்றும் வட்டார ஒருங்கிணைப்பாளர் லதா ஆகியோர் செய்திருந்தனர்.
No comments:
Post a Comment