Latest News

ஜாமீனில் விடுதலையாகி சென்னை வந்தார் ஜெயலலிதா!: கொட்டும் மழையில் தொண்டர்கள் உற்சாக வரவேற்பு!!


சென்னை: சொத்துக்குவிப்பு வழக்கில் ஜாமீனில் விடுதலையான ஜெயலலிதா, 22 நாள் சிறைவாசத்துக்கு பின் இன்று தனி விமானம் மூலம் சென்னை வந்தடைந்தார். சென்னை விமான நிலையம் முதல் போயஸ் தோட்டம் வரை ஜெயலலிதாவுக்கு வழிநெடுகிலும் உற்சாக 

வரவேற்பளிக்கப்பட்டது.சொத்துக்குவிப்பு வழக்கில் ஜெயலலிதா, சசிகலா உள்ளிட்ட 4 பேருக்கும் உச்ச நீதிமன்றம் நேற்று ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது. இதையடுத்து, ஜாமீன் பெற்ற ஜெயலலிதா நேற்றே சிறையில் இருந்து விடுதலை ஆவார் என்று எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால், உச்ச நீதிமன்ற ஜாமீன் உத்தரவு நகலையும், ஜாமீன் உத்தரவாதத்தையும், சொத்துக்குவிப்பு வழக்கை விசாரித்து தீர்ப்பளித்த பெங்களூரு சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஜான் மைக்கேல் டி.குன்ஹாவிடம் வழங்கி ஜாமீனில் விடுவிக்கும் உத்தரவை பெற வேண்டும். இதில், உச்ச நீதிமன்றத்தின் ஜாமீன் உத்தரவு நகல் கிடைத்து அதை கர்நாடக நீதிமன்றத்தில் அளிப்பதற்கு காலதாமதம் ஏற்பட்டதை அடுத்து நேற்று அவர் விடுதலை செய்யப்படவில்லை.

இந்நிலையில், ஜெயலலிதா உள்ளிட்ட 4 பேருக்கும் வழங்கப்பட்ட உச்ச நீதிமன்றத்தின் ஜாமீன் தீர்ப்பு நகல் பெங்களூரு தனி நீதிமன்ற நீதிபதி ஜான் மைக்கேல் டி குன்ஹாவிடம் சமர்ப்பிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து 4 பேரும் தலா 2 கோடி ரூபாய் மதிப்புள்ள பிணை பத்திரம் தாக்கல் செய்தனர்.

இதையடுத்து, ஜெயலலிதா உள்பட 4 பேரையும் ஜாமீனில் விடுவிக்க நீதிபதி ஜான் மைக்கேல் டி குன்ஹா உத்தரவிட்டார். இதைத்தொடர்ந்து இந்த ஆணையை சிறைத்துறை அதிகாரியிடம் வழக்கறிஞர்கள் வழங்கினர். இதனையடுத்து அவர் பிற்பகல் 3.15 மணி அளவில், பரப்பன அக்ரஹாரா சிறையிலிருந்து வெளியே வந்தார்.

ஒரே காரில் ஜெ.சசி, இளவரசி

ஜெயலலிதாவுடன் இதே வழக்கில் ஜாமீன் பெற்ற சசிகலா மற்றும் இளவரசியும் ஒரே காரில் பயணம் செய்தனர். ஆனால் சுதாகரன் மட்டும் தனியாக புறப்பட்டார்.

சென்னைக்கு சிறப்பு விமானத்தில்

சிறையிலிருந்து காரில் புறப்பட்ட ஜெயலலிதாவின் கார், பெங்களூர் ஹெச்.ஏ.எல். விமான நிலையத்திற்கு சென்றது. அங்கு தயாராக நிறுத்தப்பட்டிருந்த தனி விமானம் மூலம் ஜெயலலிதா, சசிகலா, இளவரசி ஆகிய மூவரும் சென்னை புறப்பட்டனர்.

கொட்டும் மழையில் உற்சாக வரவேற்பு

இதனைத் தொடர்ந்து மாலை 5 மணி அளவில் சென்னை விமான நிலையத்தில் இறங்கி வெளியே வந்த ஜெயலலிதாவுக்கு, விமான நிலையத்தின் வெளியே கொட்டும் மழையில் திரண்டிருந்த ஆயிரக்கணக்கான அதிமுகவினர் உற்சாகமாக வரவேற்றனர்.

இரட்டை விரல் காட்டிய ஜெ

மக்கள் வெள்ளத்தில் ஜெயலலிதாவின் வாகனம் மெதுவாக ஊர்ந்து சென்றது. கொட்டும் மழையில் தன்னைக் காண குழுமியிருந்த தொண்டர்களைப் பார்த்து இரட்டை விரலைக்காட்டி கையசைத்து சிரித்தவாரே காரில் பயணித்தார் ஜெயலலிதா.

விநாயகருக்கு நன்றி

மீனம்பாக்கம் விமானநிலையத்தில் இருந்து கிண்டி, சின்னமலை, ஆளுநர் மாளிகை, கோட்டூர்புரம் வழியாக போயஸ்கார்டன் பயணித்த ஜெயலலிதா வழியில் கோட்டூர்புரம் வரசித்தி விநாயகர் கோவிலில் சில நிமிடங்கள் காரை நிறுத்தி சாமிகும்பிட்டார்.

போயஸ்கார்டனில் உற்சாகம்

போயஸ்கார்டன் சாலையில் ஜெயலலிதாவின் கார் நுழைந்த உடன் காலை முதலே குவிந்திருந்த தொண்டர்கள் உற்சாக குரல் எழுப்பி வரவேற்பு கொடுத்தனர். அவருக்கு வழியெங்கும் மேளதாளம் முழங்க, ஆரத்தி எடுத்து வரவேற்பு கொடுத்தனர்.

22 நாட்களுக்குப் பின்னர்

சொத்துக்குவிப்பு வழக்கிற்காக கடந்த செப்டம்பர் 27ஆம் தேதி சனிக்கிழமை காலை 8 மணிக்கு போயஸ்கார்டன் இல்லத்தில் இருந்து கிளம்பிய ஜெயலலிதா 22 நாள் சிறைவாசத்திற்குப் பின்னர் சனிக்கிழமையான இன்று 6 மணிக்கு மீண்டும் போயஸ்கார்டன் வந்தடைந்தார். சிறையில் இருந்து ஜாமீனின் விடுதலையாகி சென்னை திரும்பியுள்ளதை அதிமுகவினர் தீபாவளிப் பண்டிகையாகவே கொண்டாடி மகிழ்கின்றனர்.

No comments:

Post a Comment

TIYA

WEBSITE DESIGNED BY: NOORUL IBN JAHABER ALI WEBSITE CONTROLLED BY: DOT COLORS
sourceNOORUL IBN JAHABER ALI Copyright © 2015

Theme images by Bim. Powered by Blogger.