Latest News

இந்துத்துவாவை” கற்பிக்க காத்திருக்கும் மோடி சர்க்காரின் கல்வி கொள்கை: நியூயார்க் டைம்ஸ் சாடல்!

பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசின் கல்வி கொள்கையானது வலதுசாரி இந்துத்துவா கொள்கையைத்தான் கற்றுத்தரும் என்று அமெரிக்காவின் நாளேடான நியூயார்க் டைம்ஸ் விமர்சித்துள்ளது. நியூயார்க் டைம்ஸ் நாளேட்டில் “இந்திய மாணவர்களுக்கான தவறான உறுதிமொழிகள்” என்ற தலைப்பிலான தலையங்கத்தில் கூறப்பட்டுள்ளதாவது:
பிரதமர் மோடியின் பாரதிய ஜனதா கட்சி தனது லோக்சபா தேர்தல் அறிக்கையின் போது கல்வி மேம்பாட்டுக்கு முன்னுரிமை கொடுப்போம் என்று உறுதி அளித்திருந்தது. ஆனால் இந்த கல்வி மேம்பாட்டுக்கான முன்னுரிமை எதன் அடிப்படையிலானது? ஒரு குறிப்பிட்ட தத்துவத்தின் அடிப்படையிலானதா என்ற கேள்வியும் எழத்தான் செய்யும். தேர்தல் பிரசாரத்தின் போது பேசிய அப்போதைய குஜராத் முதல்வர் மோடி, குஜராத் மாடலை தேசிய அளவில் நடைமுறைப்படுத்துவோம் என்றார். பொதுவாக குஜராத் மாடல் என்பது பொருளாதாரத்தை மையமாக வைத்தது என்றுதான் கருதுகின்றனர்.

ஆனால் குஜராத்தில் இந்துத்துவா கண்ணோட்டத்தின் அடிப்படையில் தீனாநாத் பாத்ராவால் பல பாடப் புத்தகங்கள் எழுதப்பட்டிருக்கிறது என்பது பெரும்பாலானோரின் கவனத்தை ஈர்க்கவில்லை. அமெரிக்காவின் சிகாகோபல்கலைக் கழகத்தின் மதத்துறை பேராசிரியர், இந்து மதம் குறித்து எழுதிய நூலை பென்குவின் பதிப்பகம் வெளியிட்டிருந்தது. ஆனால் இந்த நூலானது இந்துமதத்தை அவமதிக்கிறது என்று போராடி அந்த நூல்களை இந்த ஆண்டின் பிப்ரவரி மாதத்தில் திரும்பப் பெற வைத்தவர் தீனாநாத் பாத்ரா. இந்த ஆண்டு ஜூன் மாதம் தீனாநாத் பாத்ராவின் பல இந்துத்துவா பார்வையிலான நூல்களை பாடத் திட்டங்களில் சேர்க்க வேண்டும் என்று குஜராத் அரசு உத்தரவிட்டும் இருந்தது. பாத்ராவின் நூல்களில், பிறந்த நாட்களை கேக் மற்றும் மெழுகுவர்திகளுடன் கொண்டாடக் கூடாது என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.

அதுமட்டுமின்றி வங்கதேசம், இலங்கை, திபெத், நேபாளம், பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் ஆகியவற்றை இந்தியாவுடன் இணைத்து “அகண்ட பாரத” வரைபடம் வரைய வேண்டும் என்றும் பாத்ராவின் நூல்கள் மாணவர்களை வலியுறூத்துகிறது. பழங்கால ஆதி இந்தியாவில் விமானங்கள், அணு ஆயுதங்கள் என்று நம்பச் சொல்கிறார் பாத்ரா. 1999ஆம் ஆண்டு பாரதிய ஜனதா தலைமையில் மத்தியில் ஆட்சி அமைந்த போது, இதே பாத்ரா தலைமையில்தான் வரலாற்றை இந்துத்துவா பார்வையில் எழுதும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. மத்திய மனித வள மேம்பாட்டுத் துறை அமைச்சர் ஸ்மிருதி இரானியும் கூட, பாத்ராவிடம் அவரது நூல்களை தேசிய அளவிலான பாடத்திட்டத்தில் இணைக்க இருப்பதாக ஒப்புதல் தெரிவித்திருக்கிறாராம்.

ஒருநாட்டின் இளைஞர்களுக்கு அளிக்கப்படும் கல்வித்துறை அந்நாட்டின் எதிர்காலத்துக்கு மிகவும் முக்கியத்துவமானது. அந்த கல்வியை வரலாற்று உண்மைகளுக்கு மாறாக ஒரு தத்துவத்தின் பெயரால் திணிப்பது என்பது இந்தியாவுக்கும் அதன் அண்டை நாடுகளுக்குமான உறவில் மிகவும் மோசமான விளைவுகளையே விளைவிக்கும். இவ்வாறு நியூயார்க் டைம்ஸ் நாளேட்டின் தலையங்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

TIYA

WEBSITE DESIGNED BY: NOORUL IBN JAHABER ALI WEBSITE CONTROLLED BY: DOT COLORS
sourceNOORUL IBN JAHABER ALI Copyright © 2015

Theme images by Bim. Powered by Blogger.