Latest News

  

விதையால் வந்த வினை… உலகமே உற்றுநோக்கும் ஒரு வினோத வழக்கு!


கோஜோனப், மேற்கு ஆஸ்திரேலியாவின் சின்னஞ்சிறு விவசாய கிராமம். இங்கே வசிக்கும் ஸ்டீவ் மார்ஷ் மற்றும் மைக்கேல் பாக்ஸ்டர் இருவரும் சிறுவயதிலிருந்தே இணைபிரியா நண்பர்கள். இருவர் குடும்பமும் தலைமுறை தலைமுறையாக நட்புள்ள குடும்பம் என்பதால், இரட்டையர் போலவே வளர்ந்தவர்கள். பாக்ஸ்டருக்கு 1,175 ஹெக்டேர்… ஸ்டீவ் மார்ஷ்க்கு 400 ஹெக்டேர் என பரம்பரை நிலம் உண்டு. தங்கள் நிலங்களில் மட்டுமல்லாது, நண்பரின் பண்ணையிலும் விவசாய வேலைகளைப் பகிர்ந்து செய்வதில் இருவருக்கும் அலாதி ஆனந்தம்!

இந்த ஆனந்தத்தில் மண்ணை அள்ளிப் போட்டது, மான்சான்டோ. ஆம்… இப்போது இருவரும் எதிரிகள். அவர்களது சண்டையை ஆஸ்திரேலியா மட்டுமல்ல, உலகமே பார்த்துக் கொண்டிருக்கிறது. சுமார் 2 ஆயிரம் பேர் வசிக்கும் கோஜோனப் கிராமத்தையும் இரண்டாக்கிவிட்டது இந்தச் சண்டை. இதற்குக் காரணம்… பணமோ, புகழோ, பொன்னோ… ஏன், மண்ணோகூட இல்லை. பாக்ஸ்டர் பயிரிட்ட ‘மரபணு மாற்று கனோலா’ என்கிற பயிர்தான். இது, எள் போன்றதொரு எண்ணெய்வித்துப் பயிர்.

நீண்டகாலமாகவே இருவரும் ரசாயன விவசாயம்தான் செய்து வந்தனர். இடையில், இயற்கை விவசாயத்துக்கு மாறினார் மார்ஷ். 2010-ம் ஆண்டு, ‘வளம் குன்றாத வேளாண்மை’க்கான ஆஸ்திரேலிய அமைப்பிடம், இயற்கை விவசாயச் சான்றிதழையும் பெற்றுவிட்டார். கோதுமை, கனோலா மற்றும் ஓட்ஸ் ஆகியவற்றையெல்லாம், இயற்கை விவசாய வழியில் விளைவித்து ஏற்றுமதி செய்தார். இந்த நிலையில்தான், சனியாக வந்தது, மேற்கு ஆஸ்திரேலிய அரசின் மரபணு மாற்றுப் பயிர்களை அனுமதிக்கும் முடிவு.

அரசின் அறிவுறுத்தல்கள்படி, மான்சான்டோவின் மரபணு மாற்றப்பட்ட ‘ரவுண்டப் ரெடி கனோலா’வைப் பயிரிடப் போவதாக அக்கம்பக்கம் உள்ள விவசாயிகளுக்குத் தெரிவித்தார் பாக்ஸ்டர். இதை, நண்பர் ஸ்டீவ் மார்ஷுக்கும் தெரிவித்தார். இந்த மரபணு மாற்றப்பட்ட பயிர், அக்கம்பக்கம் உள்ள விவசாயப் பயிர்களில் கலந்துவிடக் கூடாது என்பதற்காக, ஆஸ்திரேலிய அரசு அறிவுறுத்தியபடி, பக்கத்து வயலில் இருந்து 15 மீட்டர் இடைவெளி கொடுத்து, கனோலாவைப் பயிரிடுகிறார் பாக்ஸ்டர் (மான்சான்டோ அறிவுறுத்தியிருப்பது 5 மீட்டர்தான்).

கனோலாவை அறுவடை செய்த பாக்ஸ்டர், நிலத்தின் அருகிலேயே அதை காய வைத்தார். நண்பர்களின் போதாத காலம்… பலத்த சூறாவளி வீச, அந்த மரபணு மாற்று கனோலா, வேலி தாண்டி ஸ்டீவ் மார்ஷ் நிலத்துக்குள் பரவிவிட்டது. தன்னுடைய 400 ஹெக்டேர் நிலத்தில், கிட்டத்தட்ட 350 ஹெக்டேர் பரப்பில் இந்த கனோலா விளைந்துள்ளதைக் கண்டு அதிர்ச்சியடைகிறார் மார்ஷ். மேற்கு ஆஸ்திரேலியாவின் வளம் குன்றாத வேளாண்மைக்கான அமைப்பும் இதை உறுதி செய்து… அந்த 350 ஹெக்டேர் பரப்பளவு நிலத்தை, ஏற்கெனவே தான் வழங்கிய இயற்கை விவசாயச் சான்றிலிருந்து நீக்குகிறது (அமெரிக்கா உள்ளிட்ட பல நாடுகள், இயற்கை விவசாய விளைபொருட்களில் 0.9 முதல் 5% வரை கலப்படம் இருக்கலாம் என்று விதிகளை வைத்துள்ளன. ஆனால், மிகக் கடுமையான விதிகளை வைத்திருக்கிறது ஆஸ்திரேலியா). இதையடுத்து, ‘எனக்கு 47.6 லட்ச ரூபாய் நஷ்டம்’ என்று பாக்ஸ்டர் மீது குற்றம்சாட்டி, 2011-ம் ஆண்டு நீதிமன்ற படியேறிவிட்டார் மார்ஷ்.
1

மரபணு மாற்றுப் பயிர்கள், எந்த ரூபத்தில் அடுத்தவரின் தோட்டத்துக்குள் பரவினாலும், ‘விவசாயிகள் திருட்டுத்தனமாக எங்களுடைய விதைகளைப் பயன்படுத்துகிறார்கள்’ என்று உலக அளவில் ஒவ்வொரு மூன்று வாரத்துக்கும் ஒரு விவசாயி மீது வழக்கு போட்டு வருகிறது மான்சான்டோ. 97-ம் ஆண்டு மரபணு மாற்றுப் பயிர்களை அறிமுகப்படுத்தியது தொடங்கி, இந்த 16 ஆண்டுகளில், இப்படி பல லட்சம் டாலர்களை நஷ்டஈடாகவும் பெற்றிருக்கும் மான்சான்டோ, இந்தத் தடவை மார்ஷ் மீது வழக்கு எதுவும் தொடுக்கவில்லை. ‘இந்தச் சூழல் வருந்தத்தக்கது’ என்று அறிக்கை மட்டும் கொடுத்துவிட்டு, வாயை மூடிக் கொண்டுவிட்டது. அதேசமயம், பாக்ஸ்டருக்காக மான்சான்டோதான் வழக்கையே நடத்திக் கொண்டிருக்கிறதாம். ஒரு தொண்டு நிறுவனம், மார்ஷின் வழக்கை நடத்தி வருகிறது. வழக்குச் செலவுக்காக இசைக் கச்சேரிகள் நடத்தி, பொதுமக்களிடம் நிதி திரட்டி வருகிறது, அந்தத் தொண்டு நிறுவனம். வழக்கு, இன்று இருவரின் கைகளை விட்டு மாறியிருப்பினும்… ‘என் நண்பனைக் கஷ்டப்படுத்துவது வருத்தமளிக்கிறது’ என்றே இருவரும் பரஸ்பரம் கூறி வருகின்றனர்.

இரு தரப்பிலிருந்தும் பல நாடுகளைச் சேர்ந்த சுமார் 20 வல்லுநர்கள், உலகின் மிகமிக அரிதான இந்த வழக்கில் சாட்சி அளிக்க உள்ளனர். ‘மார்ஷ் மீது குறையோ, குற்றமோ சொல்ல முடியாது’ என்று சொல்லியிருப்பதுடன்… ‘இந்த வழக்கு பொதுமக்கள் அதிக அக்கறை காட்டும் வழக்காக உள்ளதால், வழக்கு சார்ந்த எல்லா விவரங்களையும், இணையத்தில் வெளியிடுங்கள்’ என்று உத்தரவிட்டிருக்கிறார் நீதிபதி கென்னத் மார்ட்டின். மார்ஷ் மீது எப்படி எந்தக் குற்றமும் காணமுடியாதோ… அது போலவே பாக்ஸ்டர் மீதும் எந்தக் குற்றத்தையும் காண இயலாது. அவர், அரசாங்கம் அறிவுறுத்திய எல்லா விதிகளையும் கடைப்பிடித்திருக்கிறார்.

2
வழக்கு நிலுவையில் இருக்கும் நிலையில், நீதிமன்ற உத்தரவின்படி, தன்னுடைய அறுவடை முறையை பாக்ஸ்டர் மாற்றிக் கொண்டுவிட்டதால், மறுபடியும் மரபணு மாற்றப்பட்ட கனோலா பயிரிட அவருக்கு அனுமதி வழங்கப்பட்டுவிட்டது. மார்ஷுக்கும் இயற்கை விவசாயச் சான்று திரும்ப வழங்கப்பட்டுவிட்டது. இந்த நிலையில் இருவரும் தங்களின் விவசாயத்தைத் தொடரலாம் என்பது மகிழ்ச்சி தரக்கூடிய விஷயமே! அதேசமயம், ‘சிக்கல்… இருவேறு வகையிலான விவசாய முறையில்தான் இருக்கிறது. எனவே, இரண்டில் ஒன்று மட்டும்தான் இருக்க முடியும்’ என்கிற ரீதியிலான சண்டையாக இது மாறியுள்ளது.

”என்னுடைய 1,175 ஹெக்டேரின் பசுமை சூழ்ந்த  நிலப்பரப்பில் மகிழ்ச்சியாக சென்று கொண்டிருந்த வாழ்க்கை, இப்படி சிதைந்து போகும் என்று நான் நினைக்கவில்லை. மான்சான்டோ போன்ற நிறுவனங்களின் கைக்கூலி போலவும்… அக்கம்பக்கத்து விவசாயிகளின் நிலத்தைத் தெரிந்தே கலப்படம் செய்தேன் என்பது போலவும் மக்களால் நான் சித்தரிக்கப்படுகிறேன். ‘நான் அத்தகையவன் அல்ல’ என்பது பலருக்கும் தெரிந்தாலும், இப்படித்தான் சித்தரிக்கப்படுகிறேன். இதை என்னால் தாங்கிக்கொள்ள முடியவில்லை. கடந்த இரண்டு ஆண்டுகளாக நடந்ததை நினைத்துப் பார்க்கையில் கசப்பும் வருத்தமுமே மிஞ்சி நிற்கிறது. நீண்ட கால நட்பில் விரிசல், தேவையில்லாத கெட்ட பெயர், மோசமான விளம்பரம் எனப்பலவும் கசப்பாகவே உள்ளன” என்று மிகுந்த மனவேதனையுடன் பகிர்ந்து கொள்கிறார் பாக்ஸ்டர்.

மரபணு மாற்றுப் பயிர்கள்… மண்ணை மட்டுமல்ல… நட்பையும் கெடுக்கும் போலும்!

-அறச்சலூர் செல்வம்

- பசுமை விகடனிலிருந்து…

No comments:

Post a Comment

TIYA

WEBSITE DESIGNED BY: NOORUL IBN JAHABER ALI WEBSITE CONTROLLED BY: DOT COLORS
sourceTemplateism Copyright © 2015

Theme images by Bim. Powered by Blogger.