உரிய ஆவணங்களுடன் எவ்வளவு பணம் வேண்டுமானாலும் கொண்டு செல்லலாம் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
பொதுமக்கள் மற்றும் வணிகர்களிடம் இருந்து வந்த கோரிக்கைகளை பரிசீலித்து இந்த அறிவிப்பை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது.
இதுகுறித்து, தில்லியில் தேர்தல் ஆணைய அதிகாரி ஒருவர் கூறியதாவது: அனைத்து மாநில மற்றும் யூனியன் பிரதேச தலைமை தேர்தல் அதிகாரிகளுக்கு தேர்தல் ஆணையம் குறிப்புகளை அனுப்பியுள்ளது. அதில், உரிய ஆவணங்களுடன் பொது மக்கள் கொண்டு செல்லும் பணத்துக்கு உச்ச வரம்பு கிடையாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
பறக்கும்படை சோதனை தொடரும்: கருப்பு பணப் புழக்கத்துக்கு எதிராக கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ள பறக்கும் படை அதிகாரிகளின் சோதனை பணி தொடரும். சந்தேகப்படும்படியான நபர்கள் அல்லது வாகனத்தில் பணம் எடுத்துச் செல்லப்படலாம் என அவர்கள் சந்தேகித்தால், இடைமறித்து சோதனை நடத்தும் அதிகாரம் பறக்கும் படை அதிகாரிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது.
ரூ.50 ஆயிரத்துக்கு மேல் பணத்தை கொண்டு செல்லும் நபரிடம் பறக்கும் படை அதிகாரிகள் குழுவால் சோதனை நடத்த முடியும். பணத்தைக் கொண்டு செல்லும் நபர்கள், அதனை எங்கிருந்து கொண்டு செல்கிறார்கள் என்பதை ஆதாரங்களுடன் விளக்க வேண்டும். இல்லாவிட்டால் அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்.
ரூ. 10 லட்சத்துக்கும் மேல் பணம் கொண்டு செல்லப்பட்டது தெரிய வந்தால், அதுகுறித்து வருமான வரித்துறையினருக்கு பறக்கும் படை அதிகாரிகள் தகவல் அளிக்க வேண்டும்.
அரசியல் கட்சிகளுக்கு உத்தரவு: அரசியல் கட்சிகளைப் பொருத்தவரை தங்களது பணப் பரிமாற்ற நடவடிக்கைகளை வங்கிகள் மூலமே மேற்கொள்ள வேண்டும். வேட்பாளர்களுக்கு கட்சி பயன்படுத்தும் வங்கிக் கணக்கு மூலம் பணம் அளிக்க வேண்டும்.
வாகனங்கள் மூலமாகவோ அல்லது வான்வழியாகவோ எடுத்துச் செல்லும் பணத்தின் அளவை அரசியல் கட்சிகள் குறைத்துக் கொள்ள வேண்டும்.
விமானம் வழியாக கருப்பு பணம் கொண்டு செல்லப்படுவதை தடுப்பதற்காக சிறப்பு கண்காணிப்புப் படையை வருமான வரித்துறை அமைத்துள்ளது. அனைத்து விமான நிலையங்களிலும் இந்த சிறப்பு கண்காணிப்புப் படை அதிகாரிகள் கண்காணிப்புப் பணியில் ஈடுபடுவார்கள் என்று அந்த தேர்தல் அதிகாரி தெரிவித்தார்.
குழு அமைப்பு: இதனிடையே தேர்தலில் கருப்பு பணப்புழக்கம் குறித்து நாட்டு மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்துவது என்று தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளது. இதற்காக முன்னாள் வங்கி ஊழியர்கள், ஓய்வுபெற்ற அரசு அதிகாரிகள், பத்திரிகையாளர்கள், சமூக நல ஆர்வலர்கள், கல்வியாளர்கள் ஆகியோர் அடங்கிய குழுவை அமைக்குமாறு மாநில மற்றும் யூனியன் பிரதேச தேர்தல் அதிகாரிகளுக்கு தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
மக்களவைக்கு வரும் ஏப்ரல் மாதம் 7ஆம் தேதி தொடங்கி, மே மாதம் 12ஆம் தேதி வரை 9 கட்டங்களாக தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல், தெலங்கானா உள்ளடங்கிய ஒருங்கிணைந்த ஆந்திரம், சிக்கிம், ஒடிஸா ஆகிய 3 மாநில சட்டப்பேரவை மற்றும் பல்வேறு மாநிலங்களில் காலியாக உள்ள சட்டப்பேரவை தொகுதிகள் ஆகியவற்றுக்கும் இடைத் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது.
தில்லியில் கடந்த 5ஆம் தேதியன்று இதற்கான அறிவிப்பை தலைமை தேர்தல் ஆணையர் வி.எஸ்.சம்பத் வெளியிட்டார். அந்த அறிவிப்பு வெளியிட்ட நாள் முதல், அரசியல் கட்சிகள் மற்றும் அரசுகள் பின்பற்ற வேண்டிய தேர்தல் நடத்தை விதிமுறைகள் உடனடியாக அமலுக்கு வந்து விட்டன.
தேர்தல் தேதி அறிவிப்பு வெளியானதும், கருப்பு பணப்புழக்கம், சட்டவிரோத பண பலம் ஆகியவற்றை கட்டுப்படுத்துவதற்காக தேர்தல் ஆணையத்தால் அமைக்கப்பட்ட பறக்கும் படை அதிகாரிகள் குழு மற்றும் தேர்தல் செலவின கண்காணிப்பு அதிகாரிகள் குழு ஆகியவை தனது பணியை தொடங்கி விட்டன. இந்த அதிகாரிகள் குழுவினர், வாகனங்களில் ஒரு பகுதியில் இருந்து மற்றொரு பகுதிக்கு சந்தேகப்படும்படி கொண்டு செல்லப்படும் பணத்தைக் கைப்பற்றுவது, அதனை கொண்டு செல்பவர்கள் மீது நடவடிக்கை எடுப்பது உள்ளிட்ட பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.


No comments:
Post a Comment