Latest News

அசத்தல் அட்வைஸ் பெண்களுக்கு உடலும் உள்ளமும் நலம்தானா?


குடும்பத்தில், மகள், மனைவி, சகோதரி, தாய், பாட்டி என்று எந்த வடிவத்தில் இருந்தாலும், பெண் பெருமைக்குரியவள். அழகு, செயல், நளினம், கூர்ந்த அறிவு இவற்றுடன் இயற்கை தந்திருக்கும் ‘தாய்மை’ என்னும் பெருங்கொடை.

பிறந்தது முதல் பெண் கடைப்பிடிக்க வேண்டிய ஆரோக்கிய வழிமுறைகள், எச்சரிக்கை விதிமுறைகள், எதிர்கொள்ளும் சவால்கள் எக்கச்சக்கம். இன்று, எல்லா வயதுப் பெண்களின் சூழ்நிலைக்கு ஏற்ப பிரச்னைகளும் சவால்களும் முளைத்துக்கொண்டே இருக்கின்றன. வீடு, குழந்தைகள், வேலை என எல்லாவற்றையும் பேலன்ஸ் செய்து வாழ்வது முக்கியமாகிவிட்டது!
”எந்தப் பிரச்னை வந்தாலும், அதை எதிர்கொள்ளவும், சமாளித்து முன்னேறவும், அடிப்படைத் தேவை ஆரோக்கியம். இந்த ஆரோக்கியத்துக்கான விழிப்பு உணர்வும், அக்கறையும் குழந்தைப் பருவத்திலிருந்தே தொடங்க வேண்டும். அந்த வயதிலிருந்தே அம்மாதான் ஆரோக்கியப் பாடத்தைக் கற்பிக்க வேண்டும்” என்கிறார், சென்னை சாய் விமன்’ஸ் கிளினிக்கின் மகளிர் மற்றும் மகப்பேறு மருத்துவர் டாக்டர் தீபா தியாகராஜமூர்த்தி.

பெண்களின் ஆரோக்கியத்துக்கு அவர் தரும் அசத்தல் அட்வைஸ் இதோ…

பள்ளிப் பருவம்

உணவின் முக்கியத்துவம், சரியான உணவுப் பழக்கம் இவற்றைக் குழந்தையில் இருந்தே சாதத்துடன் கலந்து குழந்தைகளுக்கு ஊட்ட வேண்டும். அதோடு, ‘பெர்சனல் ஹைஜீன்’ எனப்படும் அந்தரங்க ஆரோக்கியத்தின் அவசியத்தை அவசியம் கற்பிக்க வேண்டும். அந்தரங்க உறுப்புகளின் சுத்தம், அந்நிய ஆண்களோடு பழகும் விதம், ‘குட் டச், பேட் டச்’ போன்ற விஷயங்களைக் குழந்தைக்குக் கற்பிக்க வேண்டிய தருணம் இதுதான். உணவுப் பழக்கம், அளவு மீறிய வளர்ச்சி இவற்றால், பெண் பருவம் அடைவது 8, 9 வயதிலேயே தொடங்கிவிடுகிறது. இதனால், இனப்பெருக்க உறுப்புகள் குறித்தும், பூப்பெய்துதல், மாதவிலக்கு போன்றவை குறித்தும் குழந்தைக்கு விளக்கிச் சொல்லவேண்டியது தாயின் கடமை. பல சிறுமிகள், பள்ளியில் பாத்ரூம் சுத்தமாக இல்லை என்று, மாதவிலக்கு நாட்களில் ‘நாப்கின்’ மாற்றாமலேயே இருக்கின்றனர். இதனால் பல தொற்றுகள் ஏற்படலாம். தினமும் மூன்று அல்லது நான்கு முறையாவது நிச்சயம் நாப்கின் மாற்ற வேண்டியது மிக அவசியம்.

டீன் ஏஜ் பருவம்

இந்த வயதில் பொதுவாகக் காணப்படும் உடல் பிரச்னை, தேவையற்ற ஊளைச்சதையும், உடல் பருமனும்தான். இதற்கான விழிப்புஉணர்வு அதிகரித்து வந்தாலும், நல்ல உணவுப் பழக்கத்தை நடைமுறையில் கொண்டுவர முடியவில்லை. பிள்ளைகள் சாப்பிடும் உணவு அதிகம். ஆனால், செய்யும் வேலை குறைவு. எடை அதிகரிக்கும்போது, அதன் பக்கவிளைவுகளான சினைப்பை நீர்க்கட்டி (பி.ஸி.ஓ.டி.), அதைத் தொடர்ந்து ஒழுங்கற்ற மாதவிலக்கு என்று ஒவ்வொன்றாக வர ஆரம்பிக்கும்.

இதன் விளைவு உடல் பருமன். மன உளைச்சலுக்கும் ஆளாக நேரிடுகிறது. பெண் குழந்தைகளுக்குச் சிறு வயதிலிருந்தே, சரியான உணவுப்பழக்கத்தை கற்பிப்பதன் மூலம் உடல் எடையைச் சீராக வைத்திருக்கலாம். இதனால், மாதவிலக்கு ஒழுங்காக வருவதுடன், பிற்காலத்தில் வரும் பல பிரச்னைகளைத் தவிர்க்கலாம்.

ஜங்க் ஃபுட், சிப்ஸ், நூடுல்ஸ் மற்றும் பேக்கரித் தயாரிப்புகளைத் தவிர்த்து, மாலை ஸ்நாக்ஸ்க்கு பால், பழங்கள், கடலை, பொரி, சுண்டல் என்று மாற்றினாலே, ஆரோக்கிய உணவுப் பழக்கத்துக்கு ‘பிள்ளையார் சுழி’ போட்டுவிட்டதாக அர்த்தம்.

வேலைக்குச் செல்லும் காலம்

இந்த நூற்றாண்டில், வேலைக்குச் செல்கிற இளம்பெண்கள் பலர்.

வேலை நிமித்தம், நகரங்களுக்கு நகரும் பெண்கள், ஹாஸ்டலிலோ, தோழிகளுடன் வீடு எடுத்தோ தங்குகிறார்கள். வீட்டில் உண்ட கொஞ்சநஞ்ச ஆரோக்கிய உணவும், வெளியே தங்கும்போது இன்னும் மோசமாகிவிடுகிறது. வேளைக்குச் சாப்பிடுவது இல்லை. முக்கியமாக, காலை உணவை உண்பதே இல்லை. இரவு வெகு நேரம் விழித்திருப்பது, லேட்டாக எழுந்திருப்பது, குளித்துவிட்டு சாப்பிடாமல் ஓடுவது, தாங்க முடியாத பசியில் மதியம் அளவுக்கு அதிகமாகச் சாப்பிடுவது… இதெல்லாமே உடல் பருமன், அசிடிட்டி போன்ற பிரச்னைகளுக்குத்தான் வழிவகுக்கும். அதீத வேலைப்பளு, அதிக நேரம் ஒரே இடத்தில் அமர்ந்து வேலை செய்தல், குறிப்பிட்ட இலக்கை அடைய, வெறி பிடித்த மாதிரி இரவும் பகலும் வேலை செய்தல், இரவு நேரப் பணி – என்று வாழ்க்கைமுறையும் உணவுமுறையும் மொத்தமாக மாறிவிடுகின்றன.

எல்லாவற்றிலுமே அவசரம்!

ரிலாக்ஸ் செய்துகொள்ள கண்டிப்பாக வேறு ஏதேனும் ஒரு விஷயத்தில் மனதைச் செலுத்தலாம். இசை, நடனம், நீச்சல், தோட்டம், பயணம்… இப்படி ஏதேனும் ஒரு விஷயத்துக்கு நேரம் ஒதுக்கலாம். மனதுக்கு அமைதி, உடலுக்கும் பயிற்சி கிடைக்கும். தேவையற்ற கலோரிகள் எரிக்கப்படும். மனதையும் உடலையும் ஆசுவாசப்படுத்தும் பயிற்சிகள்தான் அவசியம் தேவை.

மனைவி என்ற பதவி

இருப்பதிலேயே மிக அதிகமான சவாலான கட்டம் இது. ஒரு பக்கம் அலுவலகம், வேலை… இன்னொரு பக்கம் கணவர், குழந்தை, குடும்பம்… இரண்டையும் சமாளித்து பேலன்ஸ் செய்வதில் திணறிவிடுகின்றனர். அதனால் ஏற்படும் மன அழுத்தம், ஆரோக்கியத்தை அச்சுறுத்துகிறது. தவிர, தினமும் நீண்ட தூரப் பயணம், இரவு திரும்ப நெடுநேரம் ஆவதால், வீட்டில் சமைக்க முடியாமல் ஹோட்டலில் சாப்பாடு என இன்றைய வாழ்க்கை முறை ஒட்டுமொத்த ஆரோக்கியத்தைக் கெடுக்கிறது. ஹோட்டல் உணவில், சுவைக்காக சேர்க்கப்படும் நெய், மசாலா, செயற்கை மணமூட்டிகளால், உடம்பு இஷ்டத்துக்குப் பெருக்கிறது.

இதனால் ரத்தத்தில் சர்க்கரை அளவும் ரத்த அழுத்தமும் அதிகரிக்கிறது. சிலருக்கு வேலையை முன்னிட்டு, கருத்தரித்தலும் தள்ளிப்போகிறது. உட்கார்ந்தே வேலை பார்ப்பதால், முதுகு வலி, இடுப்பு வலி மற்றும் ‘போஸ்ச்சர் ரிலேட்டட்’ பிரச்னைகள். பால், தயிர், மோர் அதிகம் எடுக்காததால், நடுத்தர வயது வரும் முன்னரே கால்சியம் குறைபாடும் அதனால் எலும்புகள் வலுவிழத்தலும் ஆரம்பிக்கிறது.

உடல், ஆரோக்கியத்துக்கென இந்தப் பெண்கள் எந்த முயற்சியும் எடுப்பது இல்லை. 24 மணி நேரத்தில் கொஞ்சமே கொஞ்சம் நேரம் அதற்கென ஒதுக்கினால், உடலுக்கும் மனதுக்கும் ஒரு புத்துணர்ச்சி கிடைக்கும்.

ஊட்டமான உணவு, உடற்பயிற்சி, கால்சியம் நிறைந்த உணவுகளைச் சாப்பிடுவதன் மூலம் எலும்புப் பிரச்னைகளைச் சமாளிக்கலாம்.
குழந்தை பெற்ற தாயாக இருப்பின், குறைந்தபட்சம், ஆறு மாதங்களாவது தாய்ப்பால் கொடுக்கவேண்டியது அவசியம். இது குழந்தைக்கு ஊட்டத்தைத் தரும் என்பதுடன், தாய்க்கு மார்பகப் புற்றுநோய் வரும் ஆபத்தையும் குறைக்கும்.

மெனோபாஸ் கட்டம்

மெனோபாஸ் ஆக, சராசரி வயது 50தான் என்றாலும், இந்தியப் பெண்களுக்கு அதற்கு முன்னரே வந்துவிடுகிறது. இந்த வயதில் கால்சியம், வைட்டமின் மாத்திரைகள் அவசியம் தேவை. கால்சியம் மாத்திரைகள் அதிகம் எடுத்தால் கிட்னியில் கல் வரும் என்பது தவறான நம்பிக்கை. நாம் எடுக்கும் சிறு அளவுக்கெல்லாம், கட்டாயம் கல் வராது.

பெண்கள் கடைப்பிடிக்க:

போதுமான தூக்கம்தான், நிம்மதியான ஓய்வு. நம்முடைய ஹார்மோன்களுக்கென்று ஒரு ரிதம் உண்டு. சில ஹார்மோன்கள் அதிகாலையிலும் சில ஹார்மோன்கள் இரவிலும் சுரக்கும். எனவே, சரியான நேரத்தில் படுத்து, சரியான நேரத்தில் எழுதல் நல்லது.

யாருமே குடும்பத்தினருக்கென ‘தரமான நேரம்’ (Quality time) ஒதுக்குவது இல்லை. ஆரோக்கியத்தின் ஆணிவேரே குடும்பத்தினருடன் கழிப்பதுதான். வாரத்தில் ஒரு நாள், எந்தவிதமான நவீன மின்னணு சாதனமும் (Gadgets) பயன்படுத்தாமல், குடும்பத்தினருடன் சேர்ந்து வெளியில் செல்வது, வீட்டில் எல்லோருமாக கூடிப் பேசி இளம்வயதில் நடந்த விஷயங்களைப் பகிர்ந்து வாய்விட்டுச் சிரிக்கலாம். அழுத்தத்தை விரட்டும் அருமருந்தும் ஆரோக்கியத்தின் அச்சாணியும் அதுதான்!

No comments:

Post a Comment

TIYA

WEBSITE DESIGNED BY: NOORUL IBN JAHABER ALI WEBSITE CONTROLLED BY: DOT COLORS
sourceNOORUL IBN JAHABER ALI Copyright © 2015

Theme images by Bim. Powered by Blogger.