Latest News

ஆதார் அச்சங்கள், குழப்பங்கள், சந்தேகங்கள்!

 
தேசிய முற்போக்குக் கூட்டணி அரசால் அருளப்பட்ட சர்ச்சைக்குரிய அடையாள குறியீடு, ஆதார். இந்தியக் குடிமகன், குடிமகள் ஒவ்வொருவருக்கும் புகைப்படத்துடன்கூடிய ஆதார அட்டை வழங்குவதுதான் அரசின் திட்டம் என்று சொல்லப்பட்டது.

கல்விக் கூடத்தில் சேர்வதற்கு, பிறப்பு, இறப்பைப் பதிவு செய்வதற்கு, வேலையில் சேர்வதற்கு, சொத்துப் பதிவு செய்வதற்கு, அரசு சலுகைகள் பெறுவதற்கு, வங்கிக் கணக்கு தொடங்குவதற்கு என்ற அன்றாட வாழ்வில் பல விஷயங்களுக்கு நமக்கு அடையாள ஆவணங்கள் தேவைப்படுகின்றன. குடும்ப விநியோக அட்டை (ரேஷன் கார்டு), ஓட்டுனர் உரிமம், வருமான வரித்துறையின் நிரந்தர கணக்கு எண் அட்டை, வாக்காளர் அடையாள அட்டை என்று பலவற்றையும் நாம் இதுவரை பயன்படுத்தி வந்திருக்கிறோம்.
இருந்தும் பலரிடம் இந்த ஆவணங்கள் இல்லை. அதனால் அவர்கள் பல்வேறு திண்டாட்டங்களைச் சந்தித்து வருவதையும் நாம் அறிவோம்.  குறிப்பாக ஊர் மாற்றங்களை சந்திக்கும் அரசு, வங்கி, ஆசிரியர் போன்ற பணியாளர்கள், பிழைப்புக்காக அடிக்கடி இடம் மாறும் முறை சாரா தொழிலாளர்கள், குடிசை, சேரி வாசிகள் போன்றோர் அடிக்கடி குடும்ப அட்டை, வாக்காளர் அட்டை போன்றவற்றில் திருத்தம் பெறுவது என்பது இயலாத ஒன்றாக உள்ளது.
இப்படிப்பட்ட சூழலில் ஒருங்கிணைந்த அடையாளக் குறியீடு (ஆதார் அடையாள அட்டை) உடனடியாக பிரபலமானதில் வியப்பேதுமில்லை. இதை நாட்டின் எந்தப் பகுதிக்குச் சென்றாலும் அடையாளமாகப் பயன்படுத்தலாம் என்ற விளம்பரம் பிரபலமானதும், மக்களை ஆதார் பற்றிக் கொண்டது.  தவிர நம்மிடம் காசு கேட்காமல் இலவசமாக ஒன்று நடக்கிறது என்றால் பணிக்கு விடுப்பு எடுத்துக் கொண்டாவது வரிசையில் நின்று விடுவது என்கிற மனோபாவம் மக்களிடம் பழகிய ஒன்றாகிவிட்டது.
உண்மையில் ஆதார் அவசியமா? இதனால் நமக்கு என்ன பலன்? பெறாவிட்டால் என்ன இழப்பு?
உங்கள் பணம் உங்கள் கையில்!
ஒருபுறம் ஆதார் பதிவு வேகம் எடுக்கத் தொடங்க மறுபுறம் ‘உங்கள் பணம் உங்கள் கையில்’ என்னும் விளம்பரமும் வேகமெடுக்கத் தொடங்கிவிட்டது. அத்தியாவசிய உணவுப் பொருள் விநியோகம், சமையல் எரிவாயு போன்றவற்றிற்கான மானியத் தொகை நேரடியாக உங்கள் வங்கி கணக்குக்கே வந்துவிடும் என்கிறது இந்தத் திட்டம்.

இதனால் பலரும் ஆதார், வங்கி கணக்கு இரண்டும் இருந்துவிட்டால் முதியோர் பென்ஷன் போல் ஒரு தொகை தம் வங்கி கணக்குக்கு வந்துவிழத் தொடங்கிவிடும் என்று கனவு காணத் தொடங்கிவிட்டனர். இதே எண்ணத்தில் ஆதார் பதிவு மையங்களை நோக்கி படையெடுக்கவும் தொடங்கிவிட்டனர்.  பத்திரிக்கைகளும் இன்று ஆதார் பதியும் வார்டுகள் என்று பட்டியலிட்டும் கடைசி வாய்ப்பு நழுவ விடாதீர்கள் என்று எச்சரித்தும் செய்திகள் வெளியிடத் தொடங்கிவிட்டன. ஆதார் மோகம் பெருக இவையும் காரணமாகிவிட்டன.
மனித உரிமை ஆர்வலர்களின் கருத்து வேறு மாதிரியாக உள்ளது. இது அடையாள அட்டை இல்லை.  ஆதார் என்பது ஓர் ஆள்காட்டிக் கணக்கெடுப்பு. அரசியல் அமைப்புச் சட்டத்துக்கே விரோதமானது என்கிறார்கள் அவர்கள். இதுவரை 24 கோடி பேருக்கு இந்த அட்டை வழங்கப்பட்டுள்ளது. ஆனாலும் இது குறித்து தெளிவான, திட்டவட்டமான அறிவிப்பு ஒன்றை அரசாங்கம் வெளியிடவில்லை.  இதை தயாரித்து வழங்கும் யுஐடிஏஐ (இந்திய ஒருங்கிணைந்த அடையாளம் வழங்கும் அதிகார அமைப்பு) என்பது இன்ஃபோசிஸில் முன்னர் பணியாற்றிய நந்தன் நீல்கேணி என்பவரைத் தலைவராகக் கொண்டு இயங்கும் தனியார் அமைப்பாகும்.  பிரதமரே நேரடியாக இவரைத் தலைவராக நியமித்தார்.  இது போன்ற பிரம்மாண்ட திட்டங்கள் நாடாளுமன்றத்தில் விவாதிக்கப்பட்டு, சட்டம் இயற்றப்பட்டு அதன் பிறகு நடைமுறைப்படுத்தப்படும்.  ஆனால் ஆதார் விஷயத்தில் அவ்வாறு நடக்கவில்லை.

இது ஒரு புறமிருக்க, எண்ணெய் நிறுவனங்கள், சமையல் எரிவாயு விநியோகிஸ்தர்கள் அனைவரும் ஒவ்வொரு சிலிண்டர் பதிவின் போதும் ஆதார் அட்டை, வங்கி கணக்கு விவரம் கொண்டு வாருங்கள் என்று நிர்ப்பந்திக்கத் தொடங்கினர்.

இடைக்கால தடை

இந்நிலையில் மனித உரிமை பாதுகாப்பு மையம் என்ற அமைப்பைச் சார்ந்து வழக்கறிஞர் ராஜூ என்பவர் ஆதார் அட்டை என்பது அரசியல் சட்டத்துக்கு முரணானது என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் டிசம்பர் 2011ல் தாக்கல் செய்திருந்த வழக்கில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டு இறுதி விசாரணை வரவிருந்தது.  இந்த நிலையில், உச்ச நீதிமன்றம் முன்பாக கர்நாடகாவைச் சேர்ந்த ஓய்வு பெற்ற நீதிபதி ஒருவர் ஆதாருக்கு எதிராக தொடர்ந்த வழக்கை உச்ச நீதிமன்றம் விசாரணைக்கு ஏற்றது.  அதனைத் தொடர்ந்து உயர் நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ள இது தொடர்பான வழக்குகளையும் உச்ச நீதிமன்றத்துக்கு மாற்றக் கோரிய வேண்டுகாள் ஏற்கப்பட்டது.

அனைத்து மனுக்களையும் தொகுப்பாக விசாரணைக்கு ஏற்ற இந்திய உச்ச நீதிமன்றம் செப்டெம்பர் 23 அன்று ஆதார் அட்டை இல்லை என்ற காரணத்தால் யாருக்கும் அரசின் சலுகைகளை மறுக்கக் கூடாது, சட்ட விரோதமாகக் குடியேறிய வெளிநாட்டவர்க்கு ஆதார் அட்டை வழங்கக்கூடாது என ஆதாருக்கு எதிரான வழக்கில் இடைக்கால உத்தரவினைப் பிறப்பித்தது.  இந்த உத்தரவை மீளாய்வு செய்ய வேண்டுமென்று மத்திய அரசு விடுத்த வேண்டுகோளை உச்ச நீதிமன்றம் நிராகரித்தபோதிலும், இறுதி விசாரணையை விரைந்து நடத்தி முடிக்கவேண்டுமென்ற அரசின் கோரிக்கையை ஏற்றிருக்கிறது.

நஷ்டமும் லாபமும் யாருக்கு?

கடந்த நான்கு மாதங்களில் தமிழகம் உள்ளிட்ட பல மாநிலங்களில் ஆதார் குறியீட்டு எண்ணை வங்கியிலும், கேஸ் விநியோகஸ்தர்களிடமும் காத்திருந்து, வரிசையில் நின்று மக்கள் பதிவு செய்தனர்.  உடனடியாகச் சிலருக்கு ரூ.420 மானியத் தொகை வங்கி கணக்கில் ஏற்றப்பட்டது.  அடுத்த மாத சிலிண்டர் ரூ.450 என்பதிலிருந்து ரூ. 941 என முதலில் வசூலிக்கப்பட்டது.  தற்போது சமீபத்திய விலையேற்றத்துக்குப் பிறகு ரூ.1275 செலுத்தி சிலிண்டர் பெற வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

மானியத் தொகை வங்கிக் கணக்குக்கு வர பல நாள்களாகின்றன. இது பற்றி யாரிடம் புகார் தெரிவிக்க வேண்டும் என்பது தெரியாமல் பலர் தவிக்கின்றனர்.  ரூ.1275 செலுத்தி சிலிண்டர் பெற்றவர்களுக்கு எவ்வளவு மானியமாக வரப்போகிறது என்பது கேள்விக்குறியாக உள்ளது.

மறுபுறம் ஆதார் எண் கிடைக்காதவர்கள், எண் கிடைத்து நேரமின்மை காரணமாக வங்கியில், கேஸ் விநியோகஸ்தர்களிடம் பதிவு செய்யாதவர்களுக்கு ரூ.450 முதல் 500 விலையில் (மானிய விலையிலேயே) சிலிண்டர் கிடைக்கிறது.  இந்த விவரம் பரவியதாலும், நீதிமன்றத் தடை என்பது பரவலாக தெரியவந்ததாலும், மக்கள் ஆதாருக்குப் பதிவு செய்துகொள்வதைக் குறைத்துக்கொண்டுள்ளனர்.

இந்தியாவில் இதுவரை 24 கோடி பேர் ஆதார் அட்டை பெற்றுள்ளனர் என்கிறது ஒரு புள்ளி விவரம். இந்தத் திட்டத்தின் நோக்கமாக காங்கிரஸ் அரசு சொல்வது என்ன? போலி ரேஷன் அட்டைகள் காரணமாக உணவு, எரிவாயு மானியச் செலவுகள் அதிகரிப்பதைத் தடுப்பதும், மக்கள் நலத் திட்டங்களில் இடைத் தரகர்கள் கமிஷன் அடிப்பதைத் தடுத்து முழுத் தொகையையும் மக்களுக்குச் சேர்ப்பதும்தான் அரசின் நோக்கம் என்று சொல்லப்படுகிறது.
ஆனால் உங்கள் பணம் உங்கள் கையில் என்ற இந்தத் திட்டத்தின் உண்மை நோக்கம் என்ன தெரியுமா? உணவு தானியங்கள், மண்ணெண்ணை, எரிவாயு போன்ற பொருள்களை வெளிச் சந்தையில் வாங்கிக் கொள்ளுமாறு கூறி அதற்கான அரசு மானியத்தை வங்கிகள் வழியாக வழங்குவது. இந்த மானியத்தை ஆதார் அட்டை மூலம் பெற்றுக்கொள்ளச் செய்வது. பொருள்களின் விலையைச் சந்தையே தீர்மானித்துக் கொள்ளும்படிவிட்டுவிட வேண்டியது. உலக வங்கியின் வழிகாட்டுதலும்கூட இதுவேதான். அதனை அமல்படுத்துவதற்கான முதல்படிதான் ஆதார் என்கின்றனர் மனித உரிமை ஆர்வலர்கள்.

ஒரு மனிதனின் அடையாளத்துக்கான நிரூபணமாக ரேஷன் அட்டை, வங்கிக் கணக்கு, கடவுச் சீட்டு, ஓட்டுனர் உரிமம், வாக்காளர் அட்டை போன்ற சுமார் 15 ஏற்பாடுகள் அங்கீகரிக்கப்பட்டிருக்கும்போது, பயோமெட்ரிக் அட்டைக்கான அவசியம் என்ன வந்தது? இதற்கான தெளிவான விடையை அரசால் சொல்ல இயலவில்லை.  எனவேதான் ஆதார் அட்டை என்பது கட்டாயமல்ல என்று ஒருபுறம் கூறிக்கொண்டே எரிவாயு பெறுவது முதல் அனைத்துக்கும் ஆதார் அவசியம் என்று மறைமுகமாக நெருக்கடி கொடுத்து வருகிறது அரசு.
உரிமை மீறலும் அபாயமும்

ஆதார் அட்டைக்காக 10 விரல் ரேகைகளையும் கருவிழியையும் பதிவு செய்கிறார்கள். ஒரு குற்றவாளியின் கைரேகை, கருவிழியை விசாரணை நோக்கத்துக்காகப் பதிவு செய்வதாக இருந்தாலே, நீதிமன்றத்தில் அனுமதி பெறவேண்டும், அதுவும் குற்றம் சுமத்தப்பட்டவரிடம் மட்டும்தான் எடுக்க முடியும். அவ்வாறிருக்க தனியார் நிறுவனம்மூலமாக எந்த அனுமதியும் இல்லாமல் மக்களின் அடையாளங்களைப் பதிவு செய்கின்றனர். இத்தனை கோடி மக்களின் தனிப்பட்ட விவரங்களை ஒரு தனியார் நிறுவனம் சேகரிப்பது இந்த நாட்டின் பாதுகாப்புக்கு மிகப்பெரும் ஆபத்து. அரசாங்கம் கேட்டுக் கொள்ளாமல், நீதிமன்றம் அனுமதிக்காமல் இந்த விவரங்களை வேறு யாருக்கும் வழங்கமாட்டோம் என்று நந்தன் நீல்கேணி சொல்கிறார்.  ஆனால் அதற்கு எந்த உத்திரவாதமும் கிடையாது.

மானியங்களை ரத்து செய்யச் சொல்லி பன்னாட்டு நிறுவனங்கள் மன்மோகன் சிங்குக்கும், ப.சிதம்பரத்துக்கும் நெருக்கடி கொடுக்கின்றன. பன்னாட்டு நிறுவனங்களுக்கு விசுவாசமாக இருக்க விரும்பும் காங்கிரஸ் அரசு படிப்படியாக அரசின் பொறுப்புகளிலிருந்து தன்னை விலக்கிக்கொள்கிறது.
மற்றொருபுறம், பயோமெட்ரிக் அடையாள அட்டை என்ற இந்தத் திட்டம் பல வகையான அடையாள அட்டைகளுக்குப் பதிலாக அனைத்தும் அடங்கிய ஒரே அட்டை வழங்கும் திட்டம் என சொல்லப்பட்டாலும், அமெரிக்கா, தென் ஆப்பிரிக்கா, பிலிப்பைன்ஸ் போன்ற நாடுகளில் முயற்சிக்கப்பட்டு நடைமுறை தோல்வி காரணமாக கைவிடப்பட்டுள்ளது என்பதை நம் நினைவில் கொள்ளவேண்டும். குறைந்த மக்கள் தொகை கொண்ட இந்த நாடுகளிலேயே இத்திட்டத்தைச் செயல்படுத்த முடியவில்லை என்றால், 132 கோடி மக்கள் கொண்ட இந்தியாவில் இதை வெற்றிகரமாக செயல்படுத்துவது சாத்தியமே இல்லை என்பதுதான் நிபுணர்களின் வாதமாக உள்ளது.
பலர் தங்கள் பதிவை மேற்கொள்ளாத நிலையில் தற்போது மானியத் தொகை என்பது பதிவு செய்தவரின் வங்கிக் கணக்கில் நேரடியாகச் செலுத்தப்படுவதற்குப் பதிலாக மாதந்தோறும் எண்ணிக்கையைக் கேட்டறிந்து தனியார் கேஸ் விநியோகஸ்தர்களிடம் மானியத் தொகை அளிக்கப்படுகிறது. அது சில தினங்கள் அவர்களால் வியாபார சுழற்சிக்கு பயன்படுத்திக்கொள்ளப்பட்ட பிறகு ஒன்றுக்கும் மேற்பட்ட முறை முறையீடு வந்தபிறகே குறிப்பிட்டவர்களின் வங்கிக் கணக்கில் செலுத்தப்படுகிறது என்கிற குற்றச்சாட்டும் பலமாக எழுந்து வருகிறது.

எது எவ்வாறு இருப்பினும் நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கி வருவதால் இந்தப் பதிவு கட்டாயம் என்பது வரும் தினங்களில் சற்று தளர்த்தப்படலாம்.  நாட்டின் பாதுகாப்பு, தனிமனித சுதந்தரம், இதனால் எழப்போகும் அபாயங்கள் போன்றவற்றுடன் தொடர்புடைய இந்த விவகாரத்தில் இந்திய உச்ச நீதிமன்றம் என்ன இறுதி தீர்வு சொல்லப்போகிறது என்பதில் அடங்கியிருக்கிறது ஆதார் அவசியமா என்னும் ஆதாரக் கேள்விக்கான பதில்.
மேற்கொண்டு அறிய :  www.myaadharcard.in 
ஆதார்
மாநில வாரியான பதிவுகள்
1.            ஆந்திரப் பிரதேசம்     48211987
2.            மகாராஷ்டிரா 40594739
3.            கர்நாடகா          16005232
4.            கேரளா               14960247
5.            மத்தியப் பிரதேசம்     13003418
6.            டெல்லி              11931668
7.            பஞ்சாப்              10770895
8.            உத்தரப் பிரதேசம்       9876143
9.            ராஜஸ்தான்    9828678
10.          ஜார்கண்ட்        9087250
11.          தமிழ்நாடு         7098470
12.          குஜராத்              5839794
13.          மேற்கு வங்கம்              5798885
14.          இமாச்சலப் பிரதேசம்               4348234
15.          ஒடிசா 4167719
16.          திரிபுரா               2909942
17.          ஹரியானா     2460568
18.          பிகார்   2100568
19.          கோ       1091597
20.          உத்தரகண்ட்   1008242

No comments:

Post a Comment

TIYA

WEBSITE DESIGNED BY: NOORUL IBN JAHABER ALI WEBSITE CONTROLLED BY: DOT COLORS
sourceNOORUL IBN JAHABER ALI Copyright © 2015

Theme images by Bim. Powered by Blogger.