டீசல் மற்றும் பேட்டரியில் இயங்கும் ஹைபிரிட் வால்வோ பஸ்களை விரைவில் பெங்களூர் மாநகர போக்குவரத்துக் கழகம்(பிஎம்டிசி) சோதனை முறையில் இயக்க உள்ளது.சுற்றுச்சூழலுக்கு உகந்ததாகவும், அதிக எரிபொருள் சேமிப்பை வழங்கும் வகையில் தொழில்நுட்பம் கொண்ட இந்த பஸ்கள் போக்குவரத்து துறையில் புதிய மாற்றத்தை உருவாக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது
டீசல் எஞ்சினில் பஸ் ஓடிக்கொண்டிருக்கும்போது பேட்டரி சார்ஜ் ஆகும் தொழில்நுட்பத்தை கொண்டது. பேட்டரி முழுமையாக சார்ஜ் ஆனவுடன் இந்த பஸ் தானாகவே எலக்ட்ரிக் மோட்டாரில் இயங்கும். பேட்டரியில் சார்ஜ் தீர்ந்துபோகும்போது மீண்டும் டீசல் எஞ்சினில் இயங்க ஆரம்பித்துவிடும். மற்ற எலக்ட்ரிக் தொழில்நுட்பம் போன்று தனியாக சார்ஜ் செய்ய வேண்டிய அவசியம் இருக்காது. இதன் பேட்டரி பஸ் ஓடும்போது சார்ஜ் ஆகும் என்பது குறிப்பிடத்தக்க சிறப்பு அம்சம். பேட்டரி முழுமையாக சார்ஜ் ஆவதற்கு 6 முதல் 8 மணி நேரம் பிடிக்கும். ஒருமுறை சார்ஜ் ஆனவுடன் 280 கிமீ தூரத்துக்கு பேட்டரி ஆற்றலில் செல்லும். முற்றிலும் குளிர்சாதன வசதி கொண்ட இந்த பஸ் இந்தியாவிலேயே முதன்முறையாக பெங்களூர் மாநகர போக்குவரத்து கழகத்தால் இயக்கப்பட உள்ளது.
ஒவ்வொரு பஸ்சும் ரூ.1.3 கோடி விலை கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பஸ்கள் மூலம் பிஎம்டிசி.,யின் டீசல் நுகர்வு வெகுவாக மிச்சப்படுத்தப்படும் வாய்ப்பு கிட்டும்.
நாட்டின் எரிபொருள் தேவையில் 80 சதவீதம் இறக்குமதி செய்யப்படுகிறது. இதில், கர்நாடக போக்குவரத்து துறையால் இயக்கப்படும் அரசு பஸ்களுக்கு 54 கோடி லிட்டர் டீசல் பயன்படுத்தப்படுகிறது.
கர்நாடகத்தில் சராசரியாக ஒரு அரசு பஸ் லிட்டருக்கு 4.42 கிமீ மைலேஜ் தருவதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த நிலையில், விரைவில் இயக்கப்பட உள்ள ஹைபிரிட் டீசல் வால்வோ பஸ்கள் மூலம் எரிபொருள் தேவை ஓரளவு குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. புதிதாக களமிறக்கப்பட உள்ள பஸ்கள் 30 சதவீத டீசலை மிச்சப்படுத்தும் என்றும், சுற்றுச்சூழல் சீர்கேடுகளையும் குறைக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment