இந்தியாவின் ஆக்ராவில் தாஜ்மகாலுக்கு அடுத்தபடியாக சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் இடம், மைசூர் அம்பாவிலாஸ் அரண்மனைதான்.
மைசூர் அரண்மனை கட்டப்பட்டு இந்த ஆண்டுடன் நூறாண்டுகள் நிறைவடைகிறது. மைசூர் யதுவம்ச மன்னர்களின் வரலாற்றைக் கூறும் மைசூர் அரண்மனை 1897-ம் ஆண்டு அக்டோபர் மாதம் கட்ட துவங்கப்பட்டது.
பதினைந்து ஆண்டு கால மனித உழைப்பிற்குப் பின்னர் 1912-ம் ஆம் ஆண்டில் கட்டி முடிக்கப்பட்டது. இதற்கான செலவு 41 லட்சத்து 47 ஆயிரத்து 913 ரூபாய்.
உடையார் மன்னர்களின் புகழுக்கு எடுத்துக்காட்டாக விளங்கும் இந்த அரண்மனையை மேற்பார்வை பார்த்து கட்டுவதற்கு உறுதுணையாக இருந்தவர் அரசி கெம்ப நஞ்சம்ணி வாணிவிலாச சன்னிதானா ஆவர்.
1399-ஆம் ஆண்டில் யதுவம்சத்தை சேர்ந்த யதுராயா மன்னரால் மைசூர் ராஜ்யம் உருவாயிற்று. உடையார் மன்னர்கள் வழிவந்த சாமராஜ உடையாரின் மகள் தேவராஜ அம்மணி, யதுராயா மன்னரைத் திருமணம் செய்து மைசூரில் குடிபுகுந்தார்.
யதுராயா மன்னர்கள் காலத்திலேயே நிறுவப்பட்ட மைசூர் அரண்மனை, ரணதீரா கண்டீரவா நாகராஜ உடையார் ஆட்சிக் காலத்தில் மின்னலால் தாக்கப்பட்டு சிதிலமடைந்ததால் புதிய அரண்மனை கட்டப்பட்டது.
உண்மையிலேயே அவர் புதிதாக ஓர் அரண்மனையைக் கட்டினாரா அல்லது பழைய அரண்மனையையே சீரமைத்தாரா என்பது குறித்து சரியான தகவல் இல்லை.
1760-ம் ஆண்டு மன்னராக இருந்த கிருஷ்ணராஜ உடையார் இந்த அரண்மனையைப் பராமரிப்புக்காக ஹைதர் அலியிடம் ஒப்படைத்ததாக வரலாற்றில் குறிப்பிடப்பட்டிருந்தது.
1793-ம் ஆண்டு ஹைதர் அலி இறந்தவுடன் மைசூர் மன்னர்களை தோற்கடித்த திப்பு சுல்தான் அப்பகுதியில் சுல்தானாக ஆட்சி புரிந்ததாகவும் கூறப்பட்டுள்ளது.
திப்பு சுல்தான் மரணத்திற்குப் பின்னர் ஐந்து வயதான கிருஷ்ணராஜ உடையாருக்கு நசர்பாத் அருகில் பந்தல் அமைக்கப்பட்டு முடிசூட்டு விழா நடந்ததாக 1799-ம் ஆண்டு ஜூன் 14-ம் தேதி கர்னல் வெல்லஸ்லி அவரது சகோதரர் எர்ல் ஆஃப் மோர்னிங்டனுக்கு எழுதிய கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
இந்த மாபெரும் அரண்மனைக்கு பின்னால் ஒரு சோகமான கதை உண்டு. 1867-ம் ஆண்டு பிப்ரவரி 28-ம் தேதி இளவரசி ஜெயலட்சுமி அம்மணிக்கும் சர்தார் காந்தராஜ் அர்ஸþக்கும் திருமணம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
பழைய அரண்மனையில் நடந்த இந்த விழாவில் உற்சாகமும் கலகலப்பும் குடிகொண்டிருந்தது. அன்று மாலை அந்த பழைய அரண்மனை தீப்பிடித்து எரிந்து சாம்பலாயிற்று. நூற்றுக்கணக்கில் ஏற்றிவைக்கப்பட்டிருந்த விளக்குகள் தவறி விழுந்து தீப்பிடித்து எரிந்ததாகவும், திருமண நிகழ்ச்சியின்போது நடத்திய ஹோமம் காரணமாக தீப்பற்றியதாகவும் காரணங்கள் கூறப்பட்டன.
அருகில் இருந்த தொட்டகரே ஏரியிலிருந்து பொதுமக்கள் தண்ணீரைக் கொண்டு வந்து தீயை அணைத்தனர். பெங்களூரில் இருந்து தீயணைப்பு வண்டிகள் வருவதற்குள் அரண்மனை முழுவதுமாக எரிந்து சாம்பலாயிற்று.
அரண்மனை தீப்பிடித்து எரிந்து முடிவதற்குள் நகைகள், தங்கம், வெள்ளிப் பொருள்கள், புத்தகங்கள், ராஜமகுடம், ஆயுதங்கள் மற்றும் மதிப்பு வாய்ந்த பொருள்களனைத்தையும் முடிந்தவரை அரண்மனை ஊழியர்கள் கொண்டு வந்து அரண்மனை முன்புள்ள மைதானத்தில் குவித்தனர். இதை கண்டு மனம் தளராத அரசி, அதே இடத்தில் புதிய அரண்மனையைக் கட்டுவதென தீர்மானித்தார்.
புதிய அரண்மனை கட்டுவதற்காக நூற்றுக்கணக்கான வரைபடங்களைக் கொண்டு வரச் சொன்னார். அவற்றில் சிம்லாவில் உள்ள வைஸ்ராய் மாளிகையை வடிவமைத்த ஆர்கிடெக் இர்வின் தயாரித்த பிளான் அரசிக்கு மிகவும் பிடித்திருந்தது.
முந்தைய அரண்மனை தீப்பற்றி எரிந்த அனுபவத்தின் காரணமாக, அரண்மனை எளிதில் தீப்பிடிக்க முடியாத அளவில் கட்டுமானப் பொருள்கள் பயன்படுத்தப்பட்டன. தீயணைப்பு கருவிகளும் பொருத்தப்பட்டன. அரண்மனை முழுவதுமாக கட்டி முடித்தவுடன் 1932-ம் ஆண்டில் சில சிறிய மாறுதல்கள் செய்யப்பட்டன. அதனால் இப்போதைய அரண்மனையின் அழகு இருமடங்காயிற்று.
பார்த்தவுடன் இப்படியும் ஒரு கம்பீரமான கலைநயம் மிக்க அரண்மனையா? என்று வியக்க வைத்தது.
இந்திய-சராசெனிக் நாகரீகத்தை பிரதிபலிக்கும் வகையிலும், ஹொய்சலா மற்றும் கிரேக்க சிற்ப சாஸ்திரங்களை அடிப்படையாக வைத்தும் அரண்மனை வடிவமைக்கப்பட்டது. இந்த மூன்று மாடி அரண்மனையைக் கட்ட பெருமளவில் கிரானைட் கற்கள் பயன்படுத்தப்பட்டன.
இந்திய-சராசெனிக் நாகரீகத்தை பிரதிபலிக்கும் வகையிலும், ஹொய்சலா மற்றும் கிரேக்க சிற்ப சாஸ்திரங்களை அடிப்படையாக வைத்தும் அரண்மனை வடிவமைக்கப்பட்டது. இந்த மூன்று மாடி அரண்மனையைக் கட்ட பெருமளவில் கிரானைட் கற்கள் பயன்படுத்தப்பட்டன.
மூன்றாவது மாடிக்கு மேல் அமைந்துள்ள கோபுரங்கள் நான்காவது ஐந்தாவது மாடிகளாக கருதப்பட்டன. கோபுரங்கள் மீது தங்கத் தகடுகள் பொருத்தப்பட்டன. தரை மட்டத்திலிருந்து கோபுரம் வரை 145 அடி உயரமாகும். மிகப் பெரிய நுழைவு வாயில், திறந்த வெளி ஹால்கள், மாட மாளிகை, கூட கோபுரங்கள் என பிரம்மாண்டமாக கட்டப்பட்ட இந்த அரண்மனைக்குள் ஆயுத அறை, நூலகம், லிஃப்ட் வசதி, வேட்டை அறை, பிரத்யேக படுக்கை அறைகள் என அனைத்தும் மூன்றாவது மாடியில் அமைந்துள்ளன.
கல்யாண மண்டபம், இரண்டு தர்பார் ஹால், இசை மேடை, பொம்மைகள் கண்காட்சி அறை, வைரங்கள் பதித்த அரசரின் மணி மகுடம் வைக்க தனி அறை, கோவில்கள் என அனைத்தும் இங்கு உள்ளன. அரண்மனை முழுக்க கலைநயத்துடன் வடிவமைக்கப்பட்ட தூண்கள், சிற்பங்கள், திரைகள் நிறைந்துள்ளன.
உள்ளூர் கட்டுமானப் பொருள்களையே பயன்படுத்தி கட்டப்பட்டிருந்தாலும் ஜெய்ப்பூர் இத்தாலியிலிருந்தும் கிரானைட் கற்கள் வரவழைக்கப்பட்டன.
நன்றி : சித்தார் கோட்டை
No comments:
Post a Comment