தொலை தொடர்பு வசதி குறைந்த காலமது. அதே போன்று பயண காலமும் அதிகம் தேவைப்பட்ட காலமது... அந்த சூழலில் சென்னையிலிருந்து மூன்று நாள் பயணம் மேற்கொண்டு பம்பாய் சென்ற நம்மவர். அரபு நாட்டு பயண கனவுடன் காத்திருக்கும் நாட்கள்... பதட்டமான நாட்கள், காரணம் போலி ஏஜண்டுகளின் அட்டகாசம் நிறைந்த காலமது எழுபதுகளில் அரபு நாட்டுக்கு ஆட்கள் தேவை அதிகமாக தேவைப்பட்ட காலமாக இருந்தமையால் விசா கிடைக்க அதிக நாட்கள் எடுத்துக்கொள்வதில்லை. நல்ல கம்பெனிகள் பயணம் மேற்கொள்ள தேவையான அனைத்து ஏற்பாடுகளையும் செய்து கொடுத்து நலமாய் அழைத்துச்செல்வர்.
அரபு நாடு சென்ற நம்மவர்களின் வாழ்கையில் மொழி பிரச்சனை மூன்று மாதம் வரை நீடிக்கும். அது போன்ற சந்தர்ப்பங்களில் நிகழந்த நிகழ்வுகள் நகைச்சுவையான நிகழ்வுகள் நண்பர் மு.செ.மு. சபீர் பின்னூட்டத்தில் குறிப்பிட்ட நிகழ்வு போன்றது .மொழி தெரியாமல் அரபி இடும் கட்டளைக்கு எதிர்மறையான செயல்களை செய்து அரபியின் கோபத்திற்கு ஆளாகும் நிலை தவறு மொழி பிரச்சனையால் என்பதை உணர்ந்து இரு மொழி தெரிந்த ஊழியரால் வழி நடத்தபடுவதும் உண்டு.
தரமான, ஊட்டமான உணவு, பழவகைகள் என எல்லாம் மிக மலிவாக கிடைத்த சந்தோசத்தில் ஒருபுறம், கை நிறைய சம்பளம் மறுபுறம் இவைகளால் குடும்பத்தை பிரிந்த சோகம் குறைந்திருக்கும்.
அந்த காலகட்டம் தொலைப்பேசி மூலம் பேசுவது என்பது இயலாத காரியம். கடிதம் சென்றடைய இரண்டு வாரம் ஆகும். வீட்டிலிருந்து வரும் கடிதம் உழைத்து வரும் நம்மவருக்கு ஒத்தடம் கொடுப்பதாக இருக்கும். ஒவ்வொருவருக்கும் வெவ்வேறு விதமான சூழலை சுட்டி காட்டும் கடிதங்கள் ஒருவர் கடிதத்தை படித்து கொண்டிருக்கும்போதே அழுவார். மற்றவரோ கடிதம் கண்டு சிரிப்பார். இப்படி பலதரப்பட்ட மனநிலை காணப்படும் சூழல் வேறு சிலரோ வேலை பார்த்து விட்டு வந்த மனச்சோர்வில் அயர்ந்து தூங்கி விட்டு விடிந்து கடிதம் படிப்போம் என தலையைனைஅடியில் வைத்து நிதானமாக படிப்பவரும் உண்டு.
ஒன்றாய் உறங்கி ஒன்றாய் உணவுண்டு ஒரு குடும்பமாய் வாழும் சூழலில் மாதங்கள் நாட்களாய் ..வருடங்கள் மாதங்களை போல மிக வேகமாக கரைந்து ஓடும்... [ ஆனால் தலைவனை பிரிந்து வாடும் மனைவிக்கு ஒரு நாள் வருடமாக காட்சி அளிக்கும் அது பற்றி வரும் வாரங்களில் காண்போம் ] சம்பளம் கிடைத்த மறு நிமிடமே வங்கி மூலம் காசோலையாக மாற்றி ஊர் வந்து சேரும்.
பணம் கிடைத்தது என்ற செய்தி கிடைக்கும் வரை கடிதம் வரவை எதிர்பார்த்து காத்திருப்பர். இப்படி ஒரு வருடம் கழிந்து விடும் ஊர் நினைவு நம்மவரை தொற்றிகொள்ளும் ஊருக்கு பணம் அனுப்புவதை பகுதியாக குறைத்து கொண்டு பொருட்கள் சேர்க்க ஆரம்பிப்பார்கள் அப்படி அவர்கள் சேர்க்கும் பொருட்கள் தனது பயணத்திற்கு இடையூறாக இருக்கும் என்பதை அறியாத அவர்கள் பிள்ளைகளின் விளையாட்டு பொருள் முதல் வயதான பாட்டிகளுக்கு தேவையான பொருள் வரை வாங்கி குவிப்பார்கள்.
தொழிலாளர்கள் ஒட்டு மொத்தமாக தங்குவதற்கு நகருக்கு வெளியே கேம்ப் எனப்படும் தொழிலாளிகளின் குடியிருப்பு இருக்கும். வேலை முடிந்து இருப்பிடம் மறுநாள் வேலை இப்படியே நம்மவரின் வாழ்க்கை நகர்ந்து செல்லும். வார விடுமுறையில் தொழிலாளிகள் கடை வீதிகளுக்கு சென்று தனக்கு தேவையான பொருளை வாங்க செல்வர். கடை வீதியில் உள்ள மலையாளிகள் மிக தந்திரமாக ஊருக்கு ஒதுக்கு புறத்தில் உள்ள கேம்ப்லிருந்து வந்திருக்கிறார்கள் என்பதை பேச்சு வாக்கில் தெரிந்து கொண்டு அவர்களிடம் பொருட்களை அதிகமான விலைக்கு விற்பார்கள் பாவம் ரத்த பாடுபட்டு உழைத்து சேர்த்த பணத்தை விரயம் செய்கிறோம் என்று அறியாமல் அள்ளி கொடுத்து விட்டு வருவார்கள்.
இப்படியே இரண்டரை வருடம் கழிந்து விடும். ஊருக்கு செல்ல வேண்டும் என்ற விடுப்பு கேட்பார்கள். இதுதான் சந்தர்ப்பம் என்று சில ஓநாய்கள் காத்திருக்கும், அதாவது மேனேஜர் என்றழைக்கப்படும் மலையாளிகள் பணம் பார்க்க சந்தர்ப்பத்திற்கு இந்த அப்பாவிகளின் வேலைக்கு உலை வைக்கும் சதி தான் அது ! என்ன சதி !? அடுத்த வாரம் காண்போம்...
[ வளைகுடாப்பயணம் தொடரும்... ]
'பத்திரிக்கைத்துறை நிபுணர்'
அதிரை சித்திக்
No comments:
Post a Comment