சென்னை: உத்தரகண்ட் நிவாரண நிதிக்கு ரூ. 10 லட்சம் அளிப்பதாக தேமுதிக தலைவர் விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,
தென்மேற்கு பருவ மழையின் தீவிரம் காரணமாக வட மாநிலங்களிலான உத்தரகண்ட், இமாச்சலப் பிரதேசம், ஹரியானா ஆகியவற்றில் வெள்ளப் பெருக்கும், நிலச்சரிவுகளும் ஏற்பட்டு அதன் காரணமாக பலத்த சேதங்கள் ஏற்பட்டுள்ளன. குறிப்பாக உத்தரகண்ட் மாநிலத்தில் உள்ள புண்ணியஸ்தலங்களான கேத்ரிநாத், பத்ரிநாத், கங்கோத்ரி, யமுனோத்ரி போன்ற இடங்களில் பெய்த பெரு மழையினால் கடும் நிலச்சரிவு, வெள்ளம் காரணமாக பெரும்பாலேனார் உயிரிழந்துள்ளனர். அதில் அதிக அளவில் புண்ணியஸ்தலங்களுக்கு சென்ற பக்தர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
பல நகரங்கள், கிராமங்கள் உருக்குலைந்து போய் உள்ளன. அதை பார்க்கின்ற போது மிகப் பெரிய நில நடுக்கத்திலும், சுனாமியிலும் ஏற்பட்ட பாதிப்பு போல் உள்ளது. அதன் மூலம் பல கோடிக்கணக்கான மதிப்புள்ள சொத்துகள் நாசமடைந்துள்ளது. இந்த பாதிப்புகளில் இருந்து உத்தரகண்ட் மாநிலம் மீண்டு பழைய நிலைக்கு வருவதற்கு பல மாதங்கள் ஆகும் என்று சொல்லப்படுகிறது.
வெள்ள பாதிப்பினாலும், நிலச்சரிவாலும் தீவுகளுக்குள் சிக்கிய மனிதர்கள் போல் ஆயிரக்கணக்கானோர் சிக்கியுள்ளனர். அவர்களை மீட்பதற்கு அந்த மாநில அரசும், மத்திய அரசும் போர்க்கால நடவடிக்கையில் ஈடுபட்டு இருந்தாலும், இன்னும் ஆயிரக்கணக்கானோர் மீட்கப்படாமல் உள்ளனர். அவர்கள் உடனடியாக மீட்கப்பட வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.
மேலும் இந்த இயற்கை சீற்ற பேரழிவில் இறந்தவர்களுக்கும், அவர்களின் குடும்பத்தார்களுக்கும் தேமுதிக சார்பில் எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். இந்த இயற்கை பேரழிவில் இருந்து பாதிக்கப்பட்ட மக்களை காத்திடவும், அவர்களுடைய வாழ்வாதாரத்தை பாதுகாத்திடவும், அவர்களுக்கு உதவுகின்ற வகையில் எனது சார்பில் அந்த மாநிலத்திற்கு 10 லட்சம் ரூபாயை நிவாரணநிதியாக வழங்குகின்றேன் என்று அவர் அதில் தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment