Latest News

  

ஐந்து விரல்களும்... ஆறறிவு மனிதனும்...



ஐந்து விரல்களும் ஆறறிவு மனிதனும், வித்தியாசமான தலைப்பு என்றாலும் இது ஒரு வித்தியாசமான விழிப்புணர்வுக்கான சிறிய கட்டுரை. சமையல் ஒன்றுதான் சுவை மட்டும் சற்று வேறுபாடாக இருக்கும், சுவைதான் வேறுபாடே தவிர புரதச் சத்துக்கள் வேறுபடாது. நம்பிக்கையோடு படிக்கலாம் [ புசிக்கலாம் ]

இந்த தலைப்பை நான் தேர்ந்தெடுத்ததற்கு காரணம் மனிதன் ஆறறிவு பெற்றவன்தான், இருந்தாலும் அவன் அவனைப் பற்றியும், அவனுடைய வாழ்க்கையைப் பற்றியும், சமூகத்தைப் பற்றியும் வித விதமாக விளங்கிக் கொண்டதுதான் பிரச்சனை, யானையைப் பார்த்த குருடன் எப்படி விளங்கி இருப்பானோ அதைப் போன்று எதையுமே முழுமையாக இந்த மனிதன் விளங்கியது இல்லை, அடுத்தவனை விளங்க விட்டதும் இல்லை.

இறைவன் படைத்த உயிரினங்களிலேயே தான் ஒரு விஷேஷித்தவன் என்று மனிதன் நன்கு அறிவான். மேலும் எல்லோரும் ஒரே எண்ணிக்கையிலான உடல் உறுப்புக்களை பெற்று இருந்தாலும் அதில் சில சில வித்தியாசங்கள்  இருப்பதை பார்க்கின்றான். அந்த வித்தியாசத்தை ஏன் இறைவன் கொடுத்தான் என்று சரியாக உணர்ந்து பாராமல் அதை வைத்தே கேளிக்கையாகவும், நையாண்டியாகவும் பேசி வருகின்றான்.

குடும்பத்தில் பிரச்சனை, சமூகத்தில் பிரச்சனை, கல்விக் கூடங்களில் பிரச்சனை, நட்பு வட்டாரங்களில் பிரச்சனை, ஊரில் பிரச்சனை, அரசாட்சியில் பிரச்சனை, இன்னும் ஏராளமான பிரச்சனைகளுக்கு அவன் எடுத்துக்கொள்வது இந்த ஐந்து விரல்களை மட்டும்தான். யெஸ், அதைதான் சொல்ல வந்தேன். அதாவது, ஏதாவது சில சில பிரச்சனைகள் வந்தால் அவன் சொல்லுவது ஐந்து விரல்களும் ஒன்றாகவா இருக்குது, சரிதான் போங்கப்பா, உங்க வேலையைப் பாருங்கப்பா. நீங்களும் பார்க்கலாம் பல இடங்களில் இது மாதிரி பேசுவதை.

நான் சொல்லவந்த கருத்து என்னவென்றால், உண்மையிலும் மெய்யாகவே ஐந்து விரல்களும் ஒரே அளவில் இல்லைதான், இரண்டு கைகளில் மற்றும் இரண்டு கால்களில், ஆனால் அவற்றுக்குள் உள்ள ஒற்றுமையை நாம் பார்க்க வேண்டும்.

எனக்கு தெரிந்த ஒரு சில ஒற்றுமையை உங்களுடன் இங்கு பகிர்ந்து கொள்ள விரும்புகின்றேன். உணவு உட்கொள்ளும்போது ஐந்து விரல்களும் ஒன்றாக இணைகின்றது, ஆபத்திலிருந்து பாதுகாக்க இணைகின்றது, எழுதும்போது இணைகிறது, நடப்பதற்கு ஒன்றாக இணைந்து செயல் படுகிறது. மேலும் தாய் வயிற்றிலிருந்து பிறக்கும் குழந்தையை கையேந்தி பெற்றுக்கொள்ள இரண்டு கைகளில் உள்ள ஐந்து விரல்களும் ஒத்துழைக்கின்றது, எத்தனையோ நன்மையான காரியங்களுக்கு எல்லாம் இந்த விரல்கள் இணைகின்றது.

இந்த ஐந்து விரல்களும் ஒரே மாதிரியாக இருந்திருந்தால் என்ன செய்ய முடியும் ? அதுதான் இறைவன் படைப்பின் இரகசியம்.

நம் மத்தியில் இருக்கும் மனிதர்களும் இப்படித்தான், எல்லோரும் ஒரே மாதிரியாக இருப்பார்கள் என்று எதிர்பார்க்க முடியாது. அப்படியும் இப்படியும்தான் இருக்கின்றார்கள், மனிதனுக்குள் இருக்கின்ற ஏற்றத் தாழ்வுகள் அடியோடு ஒழிய வேண்டும், நன்மையாக முடிய வேண்டிய கணக்கில் அடங்கா எத்தனையோ காரியங்கள் முடியாமல் கிடக்கின்றது.
பறப்பன, ஊர்வன, நீந்துவன, கால்நடைகள், தாவரங்கள் இவைகளெல்லாம் மனிதனைவிட அறிவில் குறைந்து காணப்பட்டாலும், செயல்களில் உயர்ந்து காணப்படுகின்றன.

மனிதன் மனம் திருந்த வேண்டும், ஏற்றத் தாழ்வுகள் அடியோடு ஒழிய வேண்டும், ஒற்றுமை தழைத்து ஓங்கவேண்டும், மனித சமூகம் நிம்மதியாக வாழ வேண்டும், இறைவன் படைப்பில் எல்லோரும் சமம் என்று உணர வேண்டும், ஆண்கள் பெண்கள் உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும், இன்னும் எத்தனை வேண்டும் ? வேண்டும், வேண்டும், உலக மக்கள் அனைவரும் புரிதல்களில் ஒன்றாகி ஒற்றுமையுடன் வாழவேண்டும்.

வாழ்க வளமுடன்
அன்புடன்,

மனித உரிமைக்காவலர்
K.M.A. ஜமால் முஹம்மது.
Consumer & Human Rights.
S/o. K.M. Mohamed Aliyar (Late)
நன்றி : சமூக விழிப்புணர்வு பக்கங்கள் 

No comments:

Post a Comment

TIYA

WEBSITE DESIGNED BY: NOORUL IBN JAHABER ALI WEBSITE CONTROLLED BY: DOT COLORS
sourceTemplateism Copyright © 2015

Theme images by Bim. Powered by Blogger.