Latest News

NDA பட்டப் படிப்புடன் ராணுவ அதிகாரி வேலை!



பிளஸ் டூ படித்த மாணவர்களுக்கு இலவசப் பயிற்சி அளித்து பட்டமும் வழங்கி முப்படைகளில் வேலையும் அளிக்கிறது புனேயில் உள்ள நேஷனல் டிபன்ஸ் அகாதெமி. ராணுவத்தில் அதிகாரிகளாகச் சேர விரும்பும் மாணவர்கள் விண்ணப்பிக்க வேண்டிய நேரம் இது.ராணுவத்தில் அதிகாரிகள் நிலையில் இந்தியர்களை உருவாக்க வேண்டும் என்பதற்காக தொடங்கப்பட்ட நேஷனல் டிபன்ஸ் அகாதெமி 1954ம் ஆண்டு முதல் புனேயில் உள்ள கண்டக்வாஸ்லா ஏரி அருகே உள்ள பிரமாண்டமான வளாகத்தில் செயல்பட்டு வருகிறது. 

நல்ல வசதியுடன் கூடிய வகுப்பறைகள், நூலகங்கள், விளையாட்டு மைதானங்கள், நீச்சல் குளங்கள், அணிவகுப்பு மைதானம்...என்று ராணுவப் பயிற்சிக்கு உரிய அனைத்து வசதிகளும் இங்கு உள்ளன. இங்கு படித்த மாணவர்கள் பாதுகாப்புப் படையின் பல்வேறு பிரிவுகளில் முக்கியப் பொறுப்புகளை வகித்து இந்தக் கல்வி நிறுவனத்துக்குப் பெருமை சேர்த்து வருகிறார்கள்.

நேஷனல் டிபன்ஸ் அகாதெமியில் உள்ள மொத்த  இடங்களின் எண்ணிக்கை 335. இதில் ராணுவப் பிரிவின் கீழ் 195 இடங்களும் கடற்படைப் பிரிவின் கீழ் 35 இடங்களும் விமானப்படைப்பிரிவின்கீழ் 66 இடங்களும் உள்ளன. நேஷனல் டிபன்ஸ் அகாதெமியில் சேரும் மாணவர்களுக்கு மூன்று ஆண்டு பயிற்சி அளிக்கப்படும். பயிற்சியின் முடிவில் மாணவர்களுக்கு அவர்களது படிப்பைப் பொருத்து பி.ஏ. அல்லது பி.எஸ்சி. பட்டங்களை டில்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகம் வழங்கும். நேவல் அகாதெமியில் சேரும் மாணவர்கள் 4 ஆண்டு பி.டெக். படிப்பில் சேர்க்கப்படுவார்கள். இப்படிப்பை முடித்ததும் இருக்கும் காலி இடங்களின் எண்ணிக்கையைப் பொருத்து கடற்படையில் எக்ஸிகியூட்டிவ் மற்றும் டெக்னிக்கல் பிரிவு பணிகளில் சேர்க்கப்படுவார்கள்.

பிளஸ் டூ வகுப்பில் எந்தப் பாடப்பிரிவை எடுத்துப் படித்த மாணவர்களும் தரைப்படையில் சேரலாம். கடற்படை மற்றும் விமானப்படைப் பிரிவுகளில் சேர பிளஸ் டூ வகுப்பில் கணிதம், இயற்பியல் ஆகிய பாடப்பிரிவுகளை எடுத்துப் படித்திருக்க வேண்டும். தற்போது பிளஸ் டூ தேர்வு எழுத இருக்கும் மாணவர்களும் இந்த நுழைவுத் தேர்வு எழுத விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பதாரர்கள் இந்தியப் பிரஜையாக இருக்கவேண்டும். திருமணமாகாத ஆண்கள் மட்டும் விண்ணப்பிக்கலாம். 1995-ஆம் ஆண்டு ஜனவரி 2-ஆம் தேதிக்கு முன்னதாகவோ அல்லது 1997-ஆம் ஆண்டு ஜூலை முதல் தேதிக்குப் பிறகோ பிறந்தவர்கள் விண்ணப்பிக்க முடியாது. இந்தப் படிப்புகளில் சேர்ந்து படிக்க உடல் தகுதியும் முக்கியம். விண்ணப்பதாரர்கள் தாங்கள் என்.டி.ஏ.வில் சேருவதற்கு முன்னுரிமை கொடுக்கிறார்களா அல்லது நேவல் அகாதெமியில் சேர்ந்து படிக்க முன்னுரிமை கொடுக்கிறார்களா என்பதையும் குறிப்பிட வேண்டும். அத்துடன் என்.டி.ஏ.வில் எந்தப் பிரிவில் சேர்ந்து படிக்க விரும்புகிறார்கள் என்பதையும், தங்களது முதல் விருப்பம் என்.டி.ஏ.வில் படிப்பதா அல்லது நேவல் அகாதெமியில் படிப்பதா என்பதைப் பற்றியும் தெளிவாகக் குறிப்பிட வேண்டும்.

நேஷனல் டிபன்ஸ் அகாதெமி மற்றும் நேவல் அகாதெமி நுழைவுத்தேர்வை மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்துகிறது. இத்தேர்வில் இரண்டு பிரிவுகள் உள்ளன. முதல் இரண்டரை மணி நேரம் நடைபெறும் கணிதப் பாடத் தாளுக்கு 300 மதிப்பெண்கள் வழங்கப்படும். ஜெனரல் எபிலிட்டி டெஸ்ட்டுக்கு இரண்டரை மணி நேரம். இதற்கு 600 மதிப்பெண்கள்.

கணிதத்தில் அல்ஜிப்ரா, மேட்ரிக்ஸ் அண்ட் டெட்டர்மினன்ட்ஸ், ட்ரிகினாமெட்ரி, அனலிட்டிக்கல் ஜியாமிட்ரி, டிபரன்ஷியல் கால்குலஸ், இன்டரகிரல் கால்குலஸ் அண்ட் டிபரன்ஷியல் ஈக்குவேஷன்ஸ், வெக்டர் அல்ஜிப்ரா, ஸ்டாட்டிஸ்டிக்ஸ் அண்ட் புராபபிலிட்டி ஆகிய பாடப்பிரிவுகளிலிருந்து வினாக்கள் இருக்கும். ஜெனரல் எபிலிட்டி டெஸ்ட்டில் பகுதி ஏ பிரிவில் ஆங்கிலம் தொடர்பான வினாக்கள் இருக்கும். இதற்கு 200 மதிப்பெண்கள். பகுதி பி பிரிவில் பொது அறிவு தொடர்பான வினாக்கள் இருக்கும். இயற்பியல், வேதியியல், பொது அறிவியல், புவியியல், நடப்புச் செய்திகள் (கரண்ட் அபையர்ஸ்) ஆகியவை கொண்ட பொது அறிவுப் பிரிவுக்கு 400 மதிப்பெண்களாகும். அப்ஜெக்ட்டிவ் முறையில் கேட்கப்படும் இந்தத் தேர்வில் தவறான பதில்களுக்கு நெகட்டிவ் மதிப்பெண்கள் வழங்கப்படும்.

இந்த எழுத்துத் தேர்வில் தேர்ச்சி பெறும் மாணவர்கள் நேர்முகத் தேர்வுக்கு அழைக்கப்படுவார்கள். உடற் தகுதித் தேர்வும் மருத்துவத் தேர்வும் உண்டு. அதிலும் தகுதி பெறும் மாணவர்கள் மட்டுமே நேஷனல் டிபன்ஸ் அகாதெமியில் சேர முடியும். இப்படிப்பில் சேரும் மாணவர்களிடம் கட்டணம் எதுவும் வசூலிக்கப்படமாட்டாது. மாணவர்களுக்கு தங்குமிடம் உணவு வசதி சீருடை, புத்தகங்கள் ஆகியவை இலவசம். இங்கு படிக்கச் சேரும் மாணவர்கள் படிப்பை இடையிலேயே விட்டுச் செல்வதாக இருந்தால் பயிற்சிக் கட்டணத்தை அரசுக்குச் செலுத்திய பிறகே படிப்பை விட்டு விட்டுச் செல்ல முடியும். இதுகுறித்து இப்படிப்பில் சேரும்போதே இதற்கான ஒப்பந்தத்தில் மாணவரும் பெற்றோரும் கையெழுத்திட்டு அளிக்க வேண்டும்.

மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் என்டிஏ நுழைவுத் தேர்வு வருகிற ஏப்ரல் 14-ஆம் தேதி நடைபெற உள்ளது. அகர்தலா, அகமதாபாத், ஐஸ்வால், அலகாபாத், பெங்களூரு, பரேலி, போபால், சண்டீகர், சென்னை, கட்டாக், டேராடூன், தில்லி, தார்வாத், திஸ்பூர், காங்டாக், ஹைதராபாத், இம்பால், இடாநகர், ஜெய்ப்பூர், ஜம்மு, ஜோர்ஹாட், கொச்சி, கொஹிமா, கொல்கத்தா, லக்னோ, மதுரை, மும்பை, நாக்பூர், பனாஜி, பாட்னா, போர்ட் பிளேர், ராய்ப்பூர், ராஞ்சி, சம்பல்பூர், ஷில்லாங், சிம்லா, ஸ்ரீநகர், திருவனந்தபுரம், திருப்பதி, உதய்பூர், விசாகப்பட்டினம் ஆகிய நகரங்களில் இத்தேர்வை எழுதலாம். மாணவர்களுக்கு எழுத்துத் தேர்வைத் தொடர்ந்து நேர்முகத் தேர்வு இருக்கும். அதையடுத்து தகுதியுடைய மாணவர்கள் இந்தப் படிப்புக்குத் தேர்வு செய்யப்படுவார்கள்.

இத்தேர்வு எழுத விரும்பும் மாணவர்கள் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை ஆன்லைன் மூலம் ஜனவரி 21-ஆம் தேதிக்குள் கிடைக்கும்படி விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பக் கட்டணம் ரூ.100. தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர், ஜேசிஓ, என்சிஓ, ஓஆர் போன்ற அதிகாரிகளின் குழந்தைகள் கட்டணம் செலுத்த வேண்டியதில்லை. கட்டணத்தைச் செலுத்த வேண்டிய முறை குறித்த விவரங்கள் இணையதளத்தில் விரிவாகத் தெரிவிக்கப்பட்டுள்ளன. பிளஸ் டூ படித்து முடித்ததும் மேற்கொண்டு படித்து விட்டு, இந்தியப் பாதுகாப்புப் படையில் அதிகாரிகளாகப் பணிபுரிய வேண்டும் என்ற ஆர்வம் இருக்கிறதா உங்களுக்கு? அதற்கான என்டிஏ நுழைவுத் தேர்வை எழுத விண்ணப்பிக்க வேண்டிய நேரம் இது.

விவரங்களுக்கு: www.upsconline.nic.in

 Thanks to:
பொன். தனசேகரன்
http://www.puthiyathalaimurai.com/this-week/814

நன்றி : முஜீப்.காம்

No comments:

Post a Comment

TIYA

WEBSITE DESIGNED BY: NOORUL IBN JAHABER ALI WEBSITE CONTROLLED BY: DOT COLORS
sourceNOORUL IBN JAHABER ALI Copyright © 2015

Theme images by Bim. Powered by Blogger.