நேரத்தை அறிந்து கொள்வதற்காக நம் முன்னோர்கள பலர் இயற்கையையும், சில சாதனங்களையும் தங்களின் வாழ்வின் நடைமுறையில் பயன்படுத்தி வந்தனர். குறிப்பாக சூரியன் சந்திரன் போன்றவற்றின் சுழற்சி முறையிலிருந்து அன்றாட கால அளவை கணக்கிட்டும் வந்தனர். இப்படி படிப்படியாக நாகரிகம் வளர வளர புதுப்புது சாதனங்கள் பலவற்றை கண்டுபிடித்து அவற்றை நம் வாழ்வில் பயன்படுத்த தவறியதில்லை. அவ்வாறு கண்டுபிடிக்கப்பட்ட கருவிகளில் ஒன்றுதான் மின்சார சங்கு.
இவை ஆங்கிலேயர்களின் ஆட்சி காலத்தின் போது, ஆங்கிலேய அதிகாரிகளும், மக்களும் நேரத்தை தெரிந்து கொள்ள, ஊருக்கு பொதுவான இடத்தில் மின்சார சங்கு அமைக்கப்பட்டு, தினமும் அதிகாலை 5 மணி, காலை 8 மணி, மதியம் 1 மணி, மாலை, 6 மணி மற்றும் இரவு 9 மணி போன்ற நேரங்களில் சங்கு ஒலிக்கப்படுகிறது. ஒரு நிமிட கால அளவைக் கணக்கில் கொண்டு ஒலிக்கப்படும் ஓசை ஏறக்குறைய 10 கிலோ மீட்டர் சுற்று வட்டார பகுதிகளில் வசிக்கக்கூடிய பொதுமக்களின் காதில் விழக்கூடியது.
முந்தைய காலக்கட்டத்தில் மின்சார சங்கின் மூலம் ஒலிப்பரப்படும் ஓசையினால் உறங்கிக்கொண்டு இருப்பவர்களை தட்டி எழுப்பவும், அன்றாட பணிகளில் மூழ்கி கிடப்போருக்கு நினைவூட்டவும் பயன்பட்டன. ஆனால் இன்றைய பொழுதில் அறிவியலின் அபரிதமான வளர்ச்சியால் இன்று நேரத்தை அறிந்து கொள்வது நமக்கு கடினமான வேலையில்லை என்றாலும் விஞ்ஞானத்தின் அபரித வளர்ச்சியால் உருவாக்கப்பட்ட கையடக்க கடிகாரங்கள், அலைபேசிகள், ஐபோன் போன்றவற்றால் கால நேரத்தை நாம் அறிந்து வருகின்றோம்.
பழைமையை மறக்காமல், மின்சார செலவினங்களையும் பொருட்படுத்தாமல் மின்சார சங்கின் மூலம் அன்றாடம் ஒலி எழுப்பும் பணிக்கென்று ஊழியர் ஒருவரை நியமனம் செய்து உள்ளாட்சி அமைப்புகள் சிறப்பாக தங்களின் சேவையை செய்துவந்தாலும், இவற்றின் மூலம் பெறப்படும் ஓசை நம்மின் காதைக்கிழிப்பது போல் உணர்கின்றோம். பச்சிளம் குழந்தைகள் வீரிட்டு அழும் குரலை ஆங்காங்கே நாம் கேட்க முடியும். நோயாளிகள் அதிர்ச்சியடைந்து மன உளைச்சலுக்கு ஆளாகிவிடுவதும், இவற்றை வெறுத்து ஒதுக்குமளவுக்கு வணிகர்களிடத்தில் நிறைய மாற்றங்கள் காணப்படுவதும் உண்டு. இதனைச் சுற்றியுள்ள வழிபாட்டுத்தளங்களுக்கும் இடையுறாக இருக்கின்றன என்பதையும் நம்மால் மறுக்க முடியவில்லை.
ஏன் இந்த மாற்றம் !? பழசை நாம் வெறுக்கின்றோமா !?
சேக்கனா M. நிஜாம்
இறைவன் நாடினால் ! தொடரும்...
நன்றி : சமூக விழிப்புணர்வு பக்கங்கள்
No comments:
Post a Comment