வரக்கூடிய டிசம்பர் 21ஆம் தேதி உலகம் அழியப்போகின்றதா? என்ற கேள்விக்குறியோடு பத்திரிக்கைகளும், தொலைக்காட்சி செய்தி சேனல்களும் ஏற்படுத்திய பீதிதான் தற்போது முக்கிய இடத்தைப் பிடித்த பரபரப்பு செய்தி.
டிசம்பர் 21ஆம் தேதி உலகம் அழியும் என்று சொல்கின்றார்களே! இவர்கள் சொல்லும் இந்த கட்டுக்கதை உண்மையில் சாத்தியமா? அவ்வாறு எதிர்காலத்தில் நடக்கவிருக்கும் செய்திகளை யாராவது சொல்ல இயலுமா என்ற சிந்திக்கும் திறனை இவர்கள் இழந்ததுதான் இத்தகைய செய்திகளை இவர்கள் வெளியிடுவதற்கு காரணமாக அமைந்துள்ளது.
மறைவான விஷயங்களை எவராலும் அறிய இயலாது :
நாளை என்ன நடக்கவுள்ளது?. அடுத்த நிமிடம் என்ன நடக்க இருக்கின்றது? என்பதை அறியும் ஆற்றல் எந்த மனிதருக்கும் இல்லை. இதை சிந்திக்கும் திறன் படைத்த யாரும் விளங்கிக்கொள்ளலாம். அப்படி இருக்கும்போது டிசம்பர் 21ஆம் தேதி உலகம் அழியப்போகின்றது என்ற செய்தி எப்படி மற்ற மனிதர்களுக்குத் தெரியும் என்ற சாதாரண சிந்தனைத்திறன் இருந்தாலே இது மிகப்பெரிய கட்டுக்கதை என்பதை நாம் விளங்கிக் கொள்ளலாம்.
வல்ல இறைவன் தனது திருமறையில் கூறிக்காட்டுகின்றான்:
யுக முடிவு நேரம் பற்றிய அறிவு அல்லாஹ்விடமே உள்ளது. அவன் மழையை இறக்குகிறான். கருவறைகளில் உள்ளதை அவன் அறிகிறான். தான், நாளை சம்பாதிக்கவுள்ளதை எவரும் அறிய மாட்டார். தாம், எங்கே மரணிப்போம் என்பதையும் எந்த உயிரினமும் அறியாது. அல்லாஹ் நன்கறிந்தவன்; நுட்பமானவன்.
அல்குர்-ஆன் 31 : 34
மேற்கண்ட ஐந்து விஷயங்களையும் படைத்த இறைவனைத்தவிர வேறு யாராலும் அறிந்து கொள்ள இயலாது.
மற்றொரு இடத்தில் அல்லாஹ் சொல்லிக்காட்டுகின்றான்:
(முஹம்மதே) யுக முடிவு நேரம் பற்றி அது எப்போது ஏற்படும்? என உம்மிடம் கேட்கின்றனர். அது பற்றிய விளக்கம் உம்மிடம் எங்கே இருக்கிறது? அதன் முடிவு உமது இறைவனிடமே உள்ளது. அதை அஞ்சுவோருக்கு நீர் எச்சரிப்பவரே.
அல்குர்-ஆன் 79 : 42முதல் 45வரை
மறைவான செய்திகளை தனது தூதர்களுக்கு அல்லாஹ் அறிவித்துக் கொடுத்திருக்கின்றான். அப்படி சில மறைவான செய்திகளை தனது தூதருக்கு அறிவித்துக் கொடுத்த இறைவன், தனது தூதருக்குக் கூட உலக அழிவு நாள் எப்போது வரும் என்ற செய்தியை அறிவித்துத்தரவில்லை என்றால் வேறு எந்த மனிதருக்காவது இந்த செய்தியை அறிந்து கொள்ள இயலுமா?
அதுமட்டுமல்லாமல், வல்ல இறைவன் தனது திருமறையில் கூறியிருக்கக்கூடிய முன்னறிவிப்புகளின் அடிப்படையிலும், நபிகளார் கூறிக்காட்டியுள்ள முன்னறிவிப்பின் படியும் உலக முடிவு நாள் என்பது இரண்டு மூன்று நாட்களில் நடந்து முடிந்துவிடாது. அது வருவதற்குண்டான சில அடையாளங்களை அல்லாஹ்வும், அவனது தூதர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களும் சொல்லிச் சென்றுள்ளார்கள். எண்ணற்ற சிறிய அடையாளங்களும், மாபெரும் பத்து அடையாளங்களும் நிகழாதவரை உலக அழிவுநாள் ஏற்படாது என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்
அந்த பத்து அடையாளங்களாவன :
1 – புகை மூட்டம்
2 – தஜ்ஜால்
3 – ஈஸா நபியின் வருகை
4 – யஃஜுஜ், மஃஜுஜ் கூட்டத்தினரின் வருகை
5 – அதிசயப் பிராணி
6 – மேற்கில் சூரியன் உதிப்பது
7, 8, 9 – மூன்று பூகம்பங்கள்
10 – பெரு நெருப்பு
மேற்கண்ட பத்து அடையாளங்கள் நிகழாதவரை யுக முடிவு நாள் ஏற்படாது. (குறிப்பு : உலக அழிவு நாள் ஏற்படப்போவதற்கு முன் நடக்கும் நிகழ்வுகள் குறித்தும், அது குறித்த முழுமையான முன்னறிவிப்புகள் குறித்தும் முழுவதுமாக அறிய விரும்புவோர் சகோதரர் பீஜே அவர்கள் எழுதியுள்ள “கியாமத் நாளின் பத்து அடையாளங்கள்” என்ற நூலை பார்வையிடவும்)
இவை அனைத்தும் நிகழ்வதற்கு முன்பாகவே உலக அழிவு நாள் ஏற்படும் என்று யாரேனும் சொன்னால் அவர் பொய்யர் என்று சந்தேகத்திற்கு இடமில்லாமல் சொல்லிவிடலாம்.
டிசம்பர் 21ஆம் தேதிக்குப்பிறகும் உலகம் அழியாமல் இருக்கும் எனபதே உண்மை. இந்த அறிவு இல்லாமல் மக்களிடம் பீதியைக் கிளப்பி ஊடகங்கள் பரபரப்பை ஏற்படுத்தி காசு பார்க்கின்றன.
மாயன் காலண்டர் என்னும் மடத்தனமான காலண்டர்:
டிசம்பர் 21ஆம் தேதி உலகம் அழியப்போகின்றது என்பதற்கு இவர்கள் சொல்லும் காரணம்தான் மிகவும் வேடிக்கையானது. மாயன் காலண்டர் எனும் காலண்டர் பிரகாரம் 2012ஆம் ஆண்டின் டிசம்பர் 21ஆம் தேதியுடன் உலகம் அழிந்துவிடும் என்பதுதான் அவர்கள் கூறும் வேடிக்கையான காரணம்.
அது என்ன மாயன் காலண்டர்?:
கிறிஸ்து பிறப்பதற்கு இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன், மாயா என்றோர் இனம் தென்அமெரிக்காவில் இருந்ததாம். மாயா இனத்தைச் சேர்ந்தவர்கள் வானவியல் சாஸ்திரங்களிலும், கட்டடக் கலையிலும், கணித சூத்திரங்களிலும் கைதேர்ந்தவர்களாக இருந்தனராம். அதற்கு ஒரே சாட்சிதான் மாயன் காலண்டராம்.
தென்அமெரிக்காவில் வாழ்ந்த மாயா சமூகத்து மக்கள் பயன் படுத்திய காலத்தின் கணக்கு முறைகளைக் கொண்டு இந்தக் காலண்டர் உருவாக்கப்பட்டதாம். கி.மு. 3113 தொடங்கி கி.பி. 2012 டிசம்பர் 21-ம் தேதி மாயன் காலண்டர் முடிவுக்கு வருகிறது. அதற்கு பிறகு அந்த காலண்டரில் தேதிகள் இல்லையாம். வான சாஸ்திரங்களைக் கரைத்துக் குடித்த(?) மாயா இனத்தைச் சேர்ந்தவர்கள், 2012-ம் ஆண்டு டிசம்பர் 21-ம் தேதியுடன் காலண்டரை முடித்துக் கொள்ள என்ன காரணம்? “அதற்குப் பிறகு இந்த உலகமே இருக்காது என்பதுதான் மாயன் காலண்டர் சொல்லும் ரகசியம்” என்று பக்கம் பக்கமாக எழுதி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்கள் பத்திரிக்கையாளர்கள்.
மாயன் என்ற மூடர்கள் கூட்டம் தங்களது காலண்டரில் 2012 ஆம் ஆண்டின் டிசம்பர் 21ஆம் தேதிக்குப் பிறகு 22ஆம் தேதியை குறிப்பிடாததால் உலகம் அழியப்போகின்றது என்று எவனாவது நம்பினால் அவனைவிட மிகப்பெரிய முட்டாள் இந்த உலகத்தில் யாரும் இருக்க இயலாது. மாயன் கூட்டம் என்ற மூடக்கூட்டம் முட்டாள் கூட்டம்தான் என்பது டிசம்பர் 22ஆம் தேதி நிரூபணமாகிவிடும்.
இந்த கூறுகெட்ட கூட்டம் கூறுவது எப்படி உள்ளது என்றால், சிறுகுழந்தைகள் கையில் காலண்டரை வைத்துக் கொண்டு தினம் தினம் ஒரு டெய்லி காலண்டர் தேதியை தேதிவாரியாக கிழிப்பதற்கு பதிலாக மொத்தமாக ஒரு மாதத்தின் தேதியை முன்கூட்டியே கிழித்துவிட்டு, ஒருமாதம் கடந்து விட்டது என்று சொன்னால் அது எப்படி இருக்குமோ அதுபோலத்தான் இதுவும் உள்ளது.
மேலும் நம்ம ஊர் பத்திரிக்கையாளர்களுக்குச் சொல்லவே வேண்டாம். வெறும் வாய்க்கு அவுல் கொடுத்தது போல, ஒரு புரளி விஷயம் கிளப்பிவிடப்பட்டால் தங்களால் இயன்ற அளவு அதை பரப்பி புளகாங்கிதம் அடைவார்கள். மக்கள் பீதியடைவதில் அவர்களுக்கு என்னே சந்தோசம்?.
உள்ளூர் புரளி:
உலகம் அழியப்போகின்றது என்ற புரளி கிளம்பியதும்தான் கிளம்பியது நம்ம தமிழகத்தில் நடக்கும் நிகழ்வுகளோடு அதை முடிச்சுப்போட்டு பரப்பிவிட்டு அதில் லாபம் அடையும் நிகழ்வுகளும் ஆங்காங்கே அரங்கேறின.
கடலூரில் நடந்த கூத்து:
இந்த பரபரப்பில் கடலூர் மாவட்டம் வடலூரில் உள்ள வள்ளலார் தீபம் அணைந்ததாகவும், அதனால் உலகம் அழியப்போகின்றது என்றும் வதந்தியை பரப்பி விட்டனர்.
வள்ளலார் தான் இறந்த பிறகும் தீபமாக காட்சி தருகின்றார் எனவும், இந்த தீபம் அணைந்து விட்டதாகவும், இது உலக அழிவிற்கு அறிகுறி என்றும் மக்கள் பேசத் துவங்கினர். இந்த செய்தி காட்டுத் தீ போல கடலூர் மாவட்டம் முழுவதும் பரவியது. கடலூர் மாவட்டத்தை யொட்டியுள்ள தஞ்சை மாவட்டத்தை தாண்டியும் இந்த வதந்தி பரவியது. இதனையடுத்து வடலூர், நெய்வேலி, குறிஞ்சிப்பாடி என நகர் புறங்களில் மட்டுமின்றி மாவட்டங்களில் உள்ள பெரும்பாலான கிராமங்களில் பெண்கள் விளக்கேற்றி வழிபட்டனர்.
உலகை அழிவில் இருந்து காப்பாற்ற வள்ளலார் இந்த அருட்பெரும் ஜோதியை ஏற்றி வைத்தார். அது அணைந்து போனதால் அதற்கு பரிகாரமாக வீடுகள் தோறும் விளக்கு ஏற்றியதாக பெண்கள் தெரிவித்தனர். ஏற்கனவே 2012 டிசம்பர் மாதம் உலகம் அழியப்போகிறது என்று புரளி கிளம்பியுள்ள நிலையில் தற்போது வள்ளலார் விளக்கு அணைந்து போனதாக எழுந்த வதந்தி மக்களை அதிர்ச்சியிலும், குழப்பத்திலும் ஆழ்த்தியுள்ளது என்றும் பத்திரிக்கைகள் பரபரப்புடன் எழுதின.
வள்ளலார் என்ற மனிதரே உயிர் வாழ முடியாமல் செத்துவிட்ட பிறகு அவர் ஏற்றிவைத்த தீபம் இருந்தால் என்ன? அணைந்தால் என்ன என்று கூட இவர்களுக்குச் சிந்திக்கத் தெரியவில்லை. அவர் மிகப்பெரிய அற்புதம் செய்யக்கூடிய அளவிற்கு ஆற்றல் பெற்று தெய்வத்தன்மை பெற்றவராக இருந்திருந்தால் சாகாமல் உயிரோடல்லவா இருந்திருக்க வேண்டும். அவர் செத்துப்போய் விட்டார் என்பதே அவருக்கு எந்த ஆற்றலும் இல்லை என்பதை காட்டுகின்றதா இல்லையா? இந்த ஓர் அடிப்படை அறிவுகூட இல்லாமல் மக்களும் அறியாமையில் இருக்கின்றார்கள். ஊடகங்களும் அறியாமையில் திளைக்கின்றார்கள்.
தங்கள் பங்குக்கு புருடா விட்ட புண்ணியவான்கள்(?):
இந்த பரபரப்பு புரளி குறித்து பத்திரிக்கையாளர்கள் ஜோசியக்காரர்களிடம் சென்று குறிகேட்டு அதையும் வெளியிட்டுள்ளார்கள்.
உலகம் அழியும் என்று சொல்லப்படுவது குறித்து பிரபல ஜோதிடரான கே.பி.வித்யாதரனைச் சந்தித்து கேட்டார்களாம். அதற்கு அவர் கொடுத்த புரூடா இதோ:
“சனி, ராகு இரண்டும் மக்களுக்குத் தொல்லையை உண்டாக்கக்கூடிய கிரகங்கள். இந்த இரண்டு கிரகங்களும் ஒன்று சேர்வது அபூர்வம். ஆனால் இப்போது சேர்ந்து இருக்கின்றன. இதனால் பேரழிவுகள் நிச்சயம் இருக்கும். விபத்துகள் அதிக எண்ணிக்கையில் நிகழும். மனசாட்சிக்கு விரோதமான செயல்கள் நடக்கும்.
2014 ஜூன் மாதம் வரை இந்த இரண்டு கிரகங்களும் ஒன்று சேர்ந்து இருக்கின்றன என்பதால், அதுவரை மக்கள் கவனமாக இருக்க வேண்டும். குறிப்பாக மேஷம், துலாம், மீனம் ஆகிய ராசிக்காரர்களுக்குதான் இந்தக் கிரக மாற்றம் அதிக அளவிலான பிரச் னைகளையும் சோதனைகளையும் கொடுக்கும்.
இந்தக் காலகட்டத்தில் பிறக்கும் குழந்தைகள் அசாதாரண திறமையுடன் இருப்பார்கள். ஆனாலும், குழந்தைகளின் உடல்நலனில் அக்கறை காட்டுவது அவசியம். மற்றபடி ஒரே நாளில் உலகம் அழியும் என்று சொல்வதற்கு வாய்ப்பே இல்லை. நம் ஜோதிடத்திலும் அப்படிக் குறிப்பிடவில்லை” என்று அவர் சொன்னாராம்.
பேரழிவுகள் ஏற்படும் என்று சொல்லிவிட்டு அதில் மேஷம், துலாம், மீனம் ராசிக்காரர்களைத்தான் அது பாதிக்கும் என்று சொல்வதிலிருந்தே இது எவ்வளவு பெரிய கடைந்தெடுத்த பொய் என்பதை அனைவரும் எளிதில் விளங்கிக் கொள்ளலாம். ஒரு மிகப்பெரிய சுனாமியோ, பூகம்பமோ வருவதாக வைத்துக் கொள்வோம். அதில் இவர் குறிப்பிட்ட மேஷம், துலாம், மீனம் ராசிக்காரர்கள் மட்டும்தான் சாவார்களா? வேறு ராசிக்காரர்களோ, அல்லது ராசியே பார்க்காதவர்களெல்லாம் சாகமாட்டார்களா என்ன?
இந்த ஜோதிடக்காரர்களிடத்திலேயே கொள்ளையடிக்கும் நிகழ்வுகள் நடந்து இவர்கள் போய் காவல்துறையில் புகார் கொடுத்த சம்பவங்கள் எல்லாம் நடந்துள்ள நிலையில் இவர்கள் உலக அழிவு குறித்து ஜோசியம் சொல்வது உண்மையிலேயே மகா காமெடிதான்.
இதே போல இது குறித்து சென்னை வானிலை ஆராய்ச்சி மையத்தின் இயக்குநர் ரமணனிடமும் கேள்வி கேட்டுள்ளனர் பத்திரிக்கையாளர்கள். அது சந்தேகம்தான் என்று அவர் தனது பங்குக்கு கருத்துத் தெரிவித்துள்ளார். மழை வருமா? வராதா என்பதையே சரியாகச் சொல்லத்தெரியாதவர்கள் உலக அழிவு நாளைப் பற்றி சொல்லப்போகின்றார்களா என்ன? அந்த கேள்விக்கும் வரும் ஆனா வராது என்ற பாணியில்தான் அவர் பதிலளித்துள்ளார்.
கி.பி இரண்டாயிரமாம் ஆண்டு உலகம் அழியப்போகின்றது என்று இதற்கு முன்பாக இதுபோல ஒரு புரளியை கிளப்பினார்கள். அதுபோல இப்போது இந்தப் புரளியை கிளப்பிவிட்டுள்ளார்கள்.
இப்படி உலகமே மூடநம்பிக்கையிலும், பீதியிலும் உரைந்துள்ள இவ்வேளையில் உண்மையான முஸ்லிம்களுக்கு இந்த புரளி எந்த பாதிப்பையும் ஏற்படுத்தவில்லை என்பதே இஸ்லாம்தான் இறைவனின் மார்க்கம் என்பதற்கு இன்னுமொரு ஆதாரம்.
No comments:
Post a Comment