Latest News

அலர வைக்கும் மின்சாதனங்கள் ! அசர வைக்கும் டிப்ஸ் !!



மின்சாரம் இல்லாமல் இன்றைய வாழ்வே இல்லை. நமக்கு வரமாகக் கிடைத்திருக்கிற மின்சாரத்தை, சாபமாக்கிக் கொள்ளாமல் அதை சரியாகப் பயன்படுத்தும் விதம் பற்றி எடுத்துச் சொல்கிறார்கள் நிபுணர்கள்.

மின்சாதனப் பொருள்களை வாங்கும் முன் கவனிக்க வேண்டிய விஷயங்கள் பற்றிச் சொல்கிறார்,

ஐ.எஸ்.ஐ. முத்திரை இருக்கிறதா என்று பார்த்தே மின்சாதன பொருட்களை வாங்குங்கள்.

மூன்று பின்கள் உள்ள பிளக்கை பயன்படுத்துங்கள். ஸ்விட்ச் பாக்ஸ் தரைமட்டத்திலிருந்து 4 அடி உயரத்துக்கு மேல் இருக்கும்படி பொருத்துங்கள். விபரம் தெரியாத குழந்தைகளின் பாதுகாப்புக்கு இதுவே சிறந்த வழி.

ஸ்விட்ச் பாக்ஸை பொறுத்தவரை பாதுகாப்பான நிறைய வகைகள் இப்போது கிடைக்கின்றன. உதாரணமாக, பிளக்கில் 'பின்' செருகும்போது துவாரப் பகுதி திறந்தும், பின்னை வெளியே எடுக்கும்போது துவாரம் தானாகவே மூடும்படியான க்ளோசிங் வகை ஸ்விட்ச் பாக்ஸ்கள் உள்ளன. அவை மிகவும் பாதுகாப்பானவை.

டி.வி, ஃப்ரிட்ஜ், ஏ.சி. போன்ற மின்சாதனப் பொருட்களுக்கு ஸ்டெபிலைசர் வைப்பது மிகவும் பாதுகாப்பானது.

மின்சாதனங்களை பயன்படுத்தும்போது கவனிக்க-வேண்டிய முக்கிய விஷயங்களைப் பற்றிய தன் கருத்துக்களை பகிர்ந்துகொண்டார் தமிழ்நாடு மின்சார வாரியத்தைச் சேர்ந்த பொறியாளர் ஒருவர்.

முக்கியமான மின்சாதனங்களுக்கு [ஃப்ரிட்ஜ், ஏ.சி., கம்ப்யூட்டர், டி.வி. போன்றவை..] தனித் தனியாக 'எர்த் கனெக்ஷன்' கொடுப்பது பாதுகாப்பானது. எர்த் கொடுக்கும் போது அது சரியான முறையில் [ ஆறடிக்குக் குறையாத ஆழம் தோண்டி, உள்ளே கரித்துகள்கள், உப்பு, ஆற்று மணலைப் போட்டு'எர்த்' கொடுக்கவேண்டும் ] கொடுக்கப்பட்டுள்ளதா என்பதை கவனிக்கவேண்டும். எர்த் கொடுத்த இடத்தில் எப்போதும் ஈரப்பதம் இருக்கும்படி பார்த்துக்கொள்ள வேண்டும். அவ்வப்போது எர்த் சரியாக இருக்கிறதா என்று பரிசோதிக்கவேண்டும்.

பிளாட்ஃபார கடைகளில் மின்சார பொருட்களை வாங்கவே கூடாது. தரமான ப்ராண்டட் பொருட்களை உபயோகிப்பதே சிறந்தது. மின்சாதனங்கள் பழுதுபட்டால், அவற்றுக்குரிய நிறுவனங்களில் கொடுத்துத்தான் சரிசெய்ய வேண்டும்.

வெவ்வேறு மின்சாதன பொருட்களுக்கு தனித் தனி 'பின்'களையே பயன்படுத்தவேண்டும். ஒரே பின்&ல் பல 'பிளக்'குகளை செருகிவைக்கக் கூடாது. தீய்ந்துபோன ஸ்விட்ச்சுகளை பயன்படுத்துவது, ஒயரை சீவிவிட்டு பின்னுக்குள் செருகி வைப்பது போன்றவற்றை செய்யவே கூடாது. சில சமயங்களில் ஸ்விட்ச் பாக்ஸில் கரையான் கூடு கட்டியிருக்கும். மழைக்காலத்தில் அது ஈரப்பதமாகி, விபத்து நிகழ அதிக வாய்ப்புண்டு. எலெக்ட்ரீஷியனை அழைத்து, கரையான் கூட்டை எடுத்துவிட வேண்டும்.

லேசாக ஷாக் வருகிற மாதிரி தெரிந்தால்கூட, சரி செய்யாமல் அப்பொருளை பயன்படுத்தவே கூடாது.

கிரைண்டர், மிக்ஸி, கெய்ஸர், ஹீட்டர் [ தண்ணீருக்குள் போட்டு சூடு செய்யும் கருவி ], டேபிள் ஃபேன் உள்ளிட்ட பொருட்களை துருப்பிடிக்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும். துருவின் மூலமாக வெளியே மின்சாரம் கசியக் கூடும்.

மின்பழுதுகளை சரிசெய்ய லைசன்ஸ் வாங்கிய எலெக்ட்ரீஷியன்களையே அழைக்க வேண்டும். நமது சொந்தத் திறமைகளை பரிசோதிக்கும் இடம் அது இல்லை என்பதையும் உணர வேண்டும். தொடர்ந்து ஒரே எலெக்ட்ரீஷியனையே கொண்டு பழுது பார்ப்பது நல்லது. அவருக்கு வீட்டின் மின் கட்டமைப்பு நன்கு தெரிந்திருக்கும் என்பதால், குறைபாட்டை முழுவதுமாக சரிசெய்ய முடியும்.

பாத்ரூமில் ஈரப்பதம் இருந்து கொண்டேயிருப்பதால், அங்கு பயன்படுத்தப்படும் மின்சாதனங்களுக்கான ஸ்விட்ச் பாக்ஸ் வெளியில் இருக்கவேண்டியது அவசியம். ஹீட்டர், கெய்ஸரை நிறுத்திய பின்னரே குளிக்கச் செல்ல வேண்டும்.

கூடுதல் பாதுகாப்புக்கு E L C B [ Earth Leaker Circle Breaker ] என்ற கருவியை மெயின்னில் பொருத்திக் கொள்ளலாம். எங்காவது சின்ன மின்கசிவு இருந்தால்கூட மொத்தமாக மின்சாரம் துண்டிக்கப்பட்டு, இரண்டே நிமிடத்தில் மீண்டும் அதுவாகவே 'ஆன்' ஆகிவிடும் வசதி இந்தக் கருவியில் உண்டு. இந்த சிக்னலால் மின்கசிவைக் கண்டுபிடித்து உடனடியாக சரி செய்துவிடலாம்.''

மின் தாக்குதலுக்குள்ளானவரின் அருகிலிருப்பவர் செய்யவேண்டிய முதலுதவிகள் பற்றிச் சொல்கிறார் பொது மருத்துவ நிபுணர் டாக்டர் கணேசன்.

மின்சாரம் தாக்கியவரை தொடவே கூடாது. மின்சாரம் பாயாத ரப்பர்,மரக்கட்டை முதலான பொருட்களைக் கொண்டு அவரை விடுவிக்க வேண்டும். அதற்கு வாய்ப்பில்லையெனில், மெயினை ஆஃப் செய்து மின்சாரத்தை நிறுத்தவேண்டும்.

மின்சாரம் தாக்கியவர் நினைவின்றி இருக்கும்போது அவருக்கு உடனடியாக தண்ணீர் கொடுக்கக் கூடாது.அப்படிச் செய்தால், தண்ணீர் சுவாசக் குழாய் வழியாகச் சென்று மேலும் பிரச்னைகள் ஏற்படும். மின்சாரத்தால் தீக்காயம் ஏற்பட்டிருந்தால், காயத்தின் மேல் குளிர்ந்த தண்ணீரை ஊற்றவேண்டும்.

மின்கசிவு உள்ள இடத்தில் தண்ணீர் தேங்கியிருந்தால், அதில் காலை வைக்கவே கூடாது.

ஈரம் உள்ள இடத்தில் மின்கசிவு இருப்பின், எத்தனை அவசரமாக இருந்தாலும் ரப்பர் செருப்பு போட்டுக்கொண்டு தான் அருகில் செல்ல வேண்டும்.

மின்சாரம் உடலில் பாய்ந்த உடன் இதயம் நின்றுவிடும் அபாயம் இருக்கிறது. அதனால், இடது மார்புப் பகுதியை அழுத்தி இதயத்தை இயங்கச் செய்யவேண்டும். அந்த நபர் மூர்ச்சையாகியிருந்தால், வாய் வழியாக செயற்கை சுவாசம் கொடுக்க வேண்டும். பிறகு வாய் இறுக்கமாக மூடிக்கொள்ளாதவாறு நீளமான பொருளில் அல்லது ஒரு ஸ்பூனில் துணியைச் சுற்றி பற்களுக்கு இடையே வைத்து, உடனடியாக மருத்துவமனைக்குக் கொண்டு செல்ல வேண்டும்.

K.M.A. ஜமால் முஹம்மது
Consumer & Human Rights.
S/o K.M.Mohamed Aliyar(late)

நன்றி : சேக்கனா M. நிஜாம்

1 comment:

  1. அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ் ) ஜமால் காக்கா தாங்கள் நல்லதொரு தகவலை தந்தமைக்கு மிக்க நன்றி நல்ல தகவல் இதை எல்லோரும் படித்து தெரிந்து கொள்ள வேண்டிய விசையம். தங்கள் ஈமெயில் அட்ரசை அனுப்பிதரம்வும்.

    ReplyDelete

TIYA

WEBSITE DESIGNED BY: NOORUL IBN JAHABER ALI WEBSITE CONTROLLED BY: DOT COLORS
sourceNOORUL IBN JAHABER ALI Copyright © 2015

Theme images by Bim. Powered by Blogger.