அப்போது எனது பேச்சு ‘எக்ஸ்க்ளுசிவ்’ பற்றி அமைந்தன. தொழில்துறையில் எனக்கு பிடிக்காத வார்த்தை என்றால் அது ‘எக்ஸ்க்ளுசிவாகத்தான் இருக்கும் காரணம் உற்பத்தியாளர்கள் ‘எக்ஸ்க்ளுசிவ்’ என்ற பெயரில் தங்களின் நிறுவனங்களில் உற்பத்தி செய்யக்கூடிய ஒரு பொருளின் ஏக போக உரிமத்தை நிபந்தனையின் அடிப்படையில் ஒரு குறிப்பிட்ட சந்தைகளின் வாடிக்கையாளர்களுக்கு மட்டும் வழங்குவதே ! இவ்வாறு செய்வதனால் வாடிக்கையாளர்கள் அப்பொருளை விருப்பம் போல் விலையை நிர்ணயித்து சந்தைகளில் விற்பனை செய்வதற்குரிய வழிமுறைகள் ஏராளமாக இருப்பதும், இதனால் பாதிக்கப்படுவது நுகர்வோராகவும் இருக்கின்றனர்.
விற்பனையைப் பொறுத்து அதேபொருளை உற்பத்தியாளருடன் மீண்டும் விற்பனை ஒப்பந்தம் [Sales Contract ] செய்யும் போது அப்பொருளுக்குண்டான விலையை கணிசமான அளவு உயர்த்துவதற்குரிய வாய்ப்புகள் அமைந்து விடுகின்றன. இதற்கும் மேலாக ‘எக்ஸ்க்ளுசிவ்’ க்கான ஒப்பந்தமிட்டும் அவற்றை உற்பத்தியாளர்கள் எல்லை மீறும் போதும் விற்பனையாளர்கள் மிகுந்த பாதிப்புக்குள்ளாவார்கள் என்பதை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.
இது ஒரு ஏமாற்று வேலை என்று நான் கருதுவதால் ‘எக்ஸ்க்ளுசிவ்’ என்ற வார்த்தை தொழில்துறையில் எனக்கு பிடிக்காமலே போய்விட்டது. இதனால் அவர்களுடன் இதைப்பற்றிய பேச்சு தொடர்வதை நான் தவிர்த்துக்கொண்டேன்.
அடுத்து எனது பார்வை காட்சிக்கு வைக்கப்பட்டிருந்த புதிய மாடல்கள் மீது பட்டன. இங்கே ஒன்றைக் குறிப்பிட ஆசைப்படுகிறேன். சீன தேசத்திலுள்ள உற்பத்தியாளர்களில் குறிப்பிட்ட சில நிறுவனங்களைப் பொறுத்த வரையில் அவர்களால் தயாரிக்கப்பட்ட புதிய மாடல்களை இது போன்ற பொருட்காட்சி சந்தைகளில் பார்வைக்கு வைப்பதை தவிர்த்துக் கொள்கின்றனர். காரணம் அதே பொருளை சிறு சிறு நிறுவனங்கள் மூலம் குறைந்த விலையில் உற்பத்தி செய்து பெரும் நஷ்டத்தை ஏற்படுத்திவிடுவார்கள் என்கிற பயம். இதனால் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ள பொருட்களைக்கூட புகைப்படங்கள் எடுப்பதற்கு வாடிக்கையாளர்களுக்கு அனுமதி மறுக்கப்படுகின்றன.
தொழில் துறையை பொறுத்த வரையில் வியாபார மொழி [ Business Language ] என்ற ஒன்றை தெளிவாக நாம் அறிந்துகொண்டால் இத்துறையில் நீண்ட காலத்திற்கு கோலோச்சுவதற்கு கண்டிப்பாக அவை உதவும். குறிப்பாக புதிய தொழில் முனைவோருக்கு மிகவும் பயனுள்ளதாகவும் அமையும்.
இறுதியாக கையில் வைத்துள்ள நோட் புத்தகத்தில் அவர்களால் தரப்பட்ட புதிய விலைகளின் குறிப்புகளை எடுத்துக்கொண்டு விடைபெறும் போது அவர்களின் வேண்டுகோள்ளாக என்னை அவர்களின் தொழிற்சாலைக்கு வருகை தரும்படி அன்புடன் அழைத்தனர். அவர்களால் விடப்பட்ட அன்பு அழைப்பை ஏற்றுக்கொண்டு இங்கே மூன்று கட்டங்களாக நடைபெறும் வணிகச்சந்தையின் முதல் கட்டத்தில் கிடைக்கும் இடைவெளியின் முதல் நாளை அவர்களுக்காக ஒதுக்கினேன். அவர்களும் எனது வீட்டிலிருந்து என்னை அழைத்து செல்வதற்குரிய அனைத்து ஏற்பாடுகளும் செய்வதாகக்கூறினர்.
ஸ்ஸீ” “ ஸ்ஸீ “ Xie Xie [ நன்றி வருகிறேன் ] எனச்சொல்லி மகிழ்ச்சியோடு விடை பெற்றுக்கொண்டு அடுத்த நிறுவனத்தின் பூத்திற்கு சென்று கொண்டு இருந்தேன். அப்போது எனக்கு எதிரே இன்ப அதிர்ச்சி ஓன்று காத்திருந்தன...
அது என்ன இன்ப அதிர்ச்சி !?
சேக்கனா M. நிஜாம்
இறைவன் நாடினால் ‘பயண அனுபவங்கள்’ தொடரும்...
No comments:
Post a Comment