Latest News

[ 2 ] கல்விக்கூடங்கள் எப்படி இருக்க வேண்டும் ?


[ கல்விக்கூடங்கள் எப்படி இருக்க வேண்டும் ? - பகுதி - 1 ]
 [ கல்விக்கூடங்கள் எப்படி இருக்க வேண்டும் ? - பகுதி - 3 ]

முதலுதவி :
1. பள்ளிகளில் ஆபத்துக் காலங்களில் முதலுதவி செய்ய ஏதுவாக முதலுதவி பெட்டிகள் அனைத்து மருத்துவ பொருட்களுடன் அமைக்கப்படல் வேண்டும். மேலும் காலாவதியான மருந்துகள் ஏதும் சேமிக்கப்படவில்லை என்பதை உறுதி செய்ய வேண்டும்.

2. பள்ளி மாணவர்களின் இரத்தவகை, நீண்ட நாள் நோய் சார்ந்த குறிப்புகள், மருந்து ஒவ்வாமை மற்றும் குடும்ப மருத்துவர் போன்ற உடல்நலம் சார்ந்த பதிவுகள் பேணப்பட வேண்டும்.

3. ஓட்டுனர்/உதவியாளர்களுக்கு முதலுதவிப் பயிற்சி அழித்திட வேண்டும்.
மாணவர்கள் கூடும் நேரங்களில் :

ஆய்வகம் :
1. ஆய்வகத்தில் எரிவாயு உருளைகள் [ Gas Cylinders ] பயன்படுத்தும் போது மாணவர்கள் அவற்றினைக் கையாளாத வகையில் மிகவும் பாதுகாப்பாக காற்றோட்டமுள்ள தனி அறையில் வைத்துப் பராமரிக்கப்பட வேண்டும். அவைகளை ஆய்வகத்தில் சேமித்து வைத்தல் கூடாது.

வளாகம் / வகுப்பறை :
1. பள்ளிகளில் விளையாட்டு மைதானங்கள் மற்றும் காலி இடங்களில் கூர்மையான பொருட்கள் துருப்பிடித்த ஆணிகள், கம்பு போன்றவைகள் அகற்றப்பட்டு மாணவர்களின் பாதுகாப்பு உறுதி செய்யப்பட வேண்டும். விளையாட்டுக் கருவிகள் உடைந்த நிலையில் ஓட்டப்பட்டதாகவும் துருப்பிடித்தும் திருகு கழன்ற நிலையில், உயவு [ Lubrication ] இன்றி இருப்பின் உடனுக்குடன் மாற்றப்பட வேண்டும். விளையாட்டு வகுப்பு துவக்கத்தில் உடற்கல்வி ஆசிரியர் விளையாட்டு கருவிகளை சரியாக உள்ளதா ? என சரிபார்த்துப் பிறகே விளையாட அனுமதிக்க வேண்டும். எக்காரணத்தினை முன்னிட்டும் வில் விளையாட்டு ஆசிரியர் துணையின்றி விளையாடக்கூடாது. வீர விளையாட்டுகள் பள்ளி நிலையில் அவசியம் இல்லை பாடத்திட்டத்தில் வரையறுக்கப்பட்ட விளையாட்டுகளை விளையாடும் சமயம் தகுந்த பாதுகாப்பு / முதலுதவி வசதியுடன் மாணவர்கள் குறுக்கும் நெடுக்குமாகப் போகாதபடி எச்சரிக்கையுடன் பார்த்து கவனமாக விளையாட வேண்டும்.

2. உணவு இடைவேளையின்போது குழந்தைகள் ஆரோக்கியமான முறையில் அமர்ந்து மத்திய உணவு சாப்பிடுகிறார்கள் என்பதை மேற்பார்வையிட வேண்டும். அதற்கான வசதி ஏற்படுத்தி இருக்க வேண்டும். வகுப்பில் உள்ள வருகை புரிந்த மாணவர்கள் குழந்தைகள் அனைவரும் பள்ளியை விட்டுச் சென்றுள்ளனர் என்பதனை அந்தந்த வகுப்பு ஆசிரியர்கள் [ சிறு இடைவேளை, உணவு இடைவேளை, உடற்கல்வி வகுப்பு பள்ளி நேரம் முடிந்த பிறகும் ] உறுதி செய்த பிறகே பள்ளியைவிட்டுச் செல்ல வேண்டும்.

3. பள்ளி முடிந்தவுடன் மாணவர்களிடையே ஏற்படும் நெரிசலைத் தவிர்க்க மாடிப்படிகள், நுழைவாயில் ஆகிய பகுதிகளில் மாணவர்களை ஆசிரியர்கள் ஒழுங்குபடுத்த வேண்டும். மாணவர்கள் வெளியேறும் பகுதி போக்குவரத்துச் சாலையாக இருப்பின் போக்குவரத்தினை ஒழுங்குபடுத்தி மாணவர்களுக்கு பாதுகாப்பு ஏற்படுத்த தக்க முன்னேற்பாடுகள் செய்திட வேண்டும்.

4. சிறு நீர் இடைவேளை மற்றும் உணவு இடைவேளை நேரங்களில் மேல்தளங்களில் மாணவர்களை ஆசிரியர்கள் ஒழுங்குபடுத்த வேண்டும்.

5. மாணவர்கள் / குழந்தைகள் தங்களது காலணிகளை வகுப்பில் ஓர் ஓரமாக கழட்டி வைத்துவிட்டு மீளவும் அணிந்து கொள்ளும் சமயம் காலனிக்குள் ஏதேனும் விஷப்பூசிகள் சென்று தங்கி இருந்திருப்பின் அக்குழந்தையில் உயிருக்கு பாதிப்பு ஏற்படும் என்பதால் தக்க பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்திட வேண்டும். காலணிகளை முடிந்தவரை கழட்டாமல் இருப்பது நலம்.

6. பள்ளிகளில் மாணவர்கள் எண்ணிக்கை 1500 க்கு மேல் இருப்பின் முறையான முழுநேர மருத்துவ சேவை வசதிகள் ஏற்படுத்த வேண்டும்.

வாகனம் :
வாகனங்களை இயக்குவது பள்ளி நிர்வாகங்களின் சொந்த பொறுப்பாகும். மாணவர் / மாணவியர் பயன்படுத்தும் வாகனங்கள் தொடர்பாக கீழ்க்கண்ட விதிமுறைகளை அனைத்து பள்ளிகளும் பின்பற்றப்பட வேண்டும்.

1. தமிழ்நாடு மோட்டார் வாகன சிறப்பு விதிகள் 2012 அரசு இதழில் வெளியிடப்படும். அது வெளியிடப்படும் நாள் [ 31-08-2012 ] முதல் உடனடியாக அமலுக்கு வரும். இது தமிழ்நாட்டில் உள்ள எல்லா பள்ளி வாகனங்களுக்கும் பொருந்தும். 

2. மோட்டார் வாகன விதிப்படி அனைத்து பள்ளி வாகனங்களுக்கும் அனுமதி வழங்கப்படும். உதவியாளர்கள், மாவட்ட குழு, பள்ளி நிர்வாகம், பெற்றோர் ஆசிரியர் கழகம், பள்ளி குழு, சிறப்புபடை ஆகியவை குறித்து விளக்கம் அளிக்க வேண்டும். 

3. பள்ளிக்கூட பஸ்களை வேறு எந்த பயன்பாட்டுக்கும் பயன்படுத்தக்கூடாது. பள்ளி பேருந்துகள் முறையாக போக்குவரத்து துறையிடம் அனுமதி பெற்றிருக்க வேண்டும். 

4. பள்ளிக்கூட வாகனங்களை இயக்கும் ஓட்டுநர்கள் முறைப்படி உரிய உரிமம் பெற்றிருக்க வேண்டும். மேலும் அவர்கள் வாகனங்களை ஓட்டுவதில் குறைந்த பட்சம் 5 ஆண்டுகள் அனுபவம் பெற்றிருக்க வேண்டும். டிரைவர்கள் போக்குவரத்து விதிமுறைகளை மீறி தண்டனை பெற்றிருக்க கூடாது. கண்டிப்பாக அவர்கள் காக்கி உடை அணிந்திருக்க வேண்டும். அதில் டிரைவரின் பெயர் கொண்ட பேட்ஜ் அணிய வேண்டும். பள்ளி வாகனங்களுக்கான அனுமதிக்கப்பட்ட வேகத்தைவிட அதிக வேகத்துடன் வாகனங்களை இயக்க கூடாது. 

5. ஒவ்வொரு பள்ளி வாகனத்திலும் கண்டிப்பாக உதவியாளர்கள் இருக்க வேண்டும். அவர்கள் அந்த வாகனத்திலேயே செல்ல வேண்டும். அவர்கள் கண்டக்டர்களுக்கு உரிய உரிமம் பெற்றிருக்க வேண்டும். உதவியாளர் பொறுப்பில் இருப்பவர்கள் 21 முதல் 50 வயதுக்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும். அவர்கள் மாணவ-மாணவிகளை கையாள்வதற்கு போதுமான பயிற்சிகள் பெற்றிருக்க வேண்டும். 

பள்ளி குழந்தைகளை பஸ்சில் ஏற்றி வருவது முதல் மாலையில் மீண்டும் பெற்றோரிடம் ஒப்படைக் கும்வரை உதவியாளர்கள் தகுந்த பொறுப்புடன் செயல்பட வேண்டும். மாணவிகள் மட்டுமே செல்லும் வாகனமாக இருக்கும் பட்சத்தில் அந்த வாகனங்களில் பெண் உதவியாளர்கள் நியமிக்கப்பட வேண்டும். 

6. பள்ளி வாகனங்கள் சரியாக பராமரிக்க படவேண்டும். ஒவ்வொரு பள்ளி பேருந்தும் செமிசலூன் டைப்பாக இருக்க வேண்டும். டெம்போ வேன் போன்று இல்லாமல் வாகனங்கள் முழுமையாக மூடப்பட்டிருக்க வேண்டும். பள்ளி பேருந்துகள், வாகனங்கள் அனைத்துக்கும் மஞ்சள் வர்ணம் பூசப்பட்டிருக்க வேண்டும். 

தூரத்தில் இருந்து பார்க்கும்போதே இது பள்ளி வாகனம் என்று தெரியும் அளவுக்கு பெரிய அளவில் பள்ளியின் முத்திரை பொறிக்கப் பட்டிருக்க வேண்டும். மாணவ-மாணவிகள் ஏறி இறங்கும் கதவுகள் எளிதாக திறக்கும் வகையில், எளிதாக மூடும் வகையிலும் இருக்கிறதா- என்பதை தினமும் உறுதி செய்துகொள்ள வேண்டும். 

7. பள்ளி பேருந்துகள் மற்றும் வாகனங்களில் அனுமதிக்கப்பட்ட அளவுக்கு அதிகமாக குழந்தைகளை ஏற்றிச்செல்லக்கூடாது. ஒவ்வொரு பள்ளி வாகனங்களிலும் லாக் புக் பராமரிக்கப்பட வேண்டும். அந்த புத்தகத்தில் டிரைவர் தினமும் குறிப்பு எழுத வேண்டும். பஸ்சில் ஏதேனும் பழுதுகள் ஏற்பட்டிருந்தால் அதுபற்றி டிரைவர்கள் தவறாமல் லாக்புக்கில் எழுதி வைக்க வேண்டும். 

8. பள்ளி பேருந்துகளை ஆய்வு செய்வதற்கு சிறப்பு கமிட்டி அமைக்கப்படும். அந்த கமிட்டியில் பள்ளி நிர்வாகிகள், கல்வித் துறையினர், போலீசார், பெற்றோர் ஆசிரியர் கழக நிர்வாகிகள், போக்குவரத்து அதிகாரிகள் இடம் பெறுவார்கள். இந்த கமிட்டி மாதந்தோறும் பள்ளி பேருந்துகளை ஆய்வு செய்யும். இந்த கமிட்டியில் இருப்பவர்கள் டிரைவர்கள் குறிப்பு எழுதும் லாக் புத்தகத்தை வாங்கி சரிபார்க்க வேண்டும். அந்த புத்தகத்தில் பள்ளி பஸ்கள் பற்றி டிரைவர் ஏதேனும் குறிப்புகள் எழுதியிருந்தால் அதை பள்ளி நிர்வாகத்தின் கவனத்துக்கு கொண்டு வந்து அதை சரிசெய்ய அறிவுறுத்த வேண்டும். 

9. மாவட்ட அஎளவிலும் கமிட்டிகள் அமைக்கப்பட்டு பள்ளி பேருந்துகள் ஆய்வு செய்யப்படும். இந்த கமிட்டியில் வட்டார போக்குவரத்து அதிகாரி, போலீஸ் துணை சூப்பிரண்டு, மாவட்ட கல்வி அதிகாரி, மோட்டார் வாகன ஆய்வாளர் ஆகியோர் இடம்பெற்றிருப்பார்கள். இந்த கமிட்டி மாதம் ஒருதடவை கூடி பள்ளி பேருந்துகளை ஆய்வு செய்வார்கள். பள்ளி பேருந்துகள் விதிமுறைகளுக்கு உட்பட்டு இயக்கப்படுகிறதாப என்பதை உறுதி செய்வார்கள். இந்த கமிட்டியினர் பறக்கும் படையாகவும் செயல் படலாம். இதன் மூலம் பள்ளி பேருந்துகளில் செல்லும் மாணவ- மாணவிகளின் பாதுகாப்பு உறுதி செய்யப்படும். பள்ளி வாகனங்களை முறையாக பராமரிக்கா விட்டால் வட்டார போக்கு வரத்து அலுவலகத்துக்கு இது தொடர்பான தகவல்களை அனுப்பி கடும் நடவடிக்கை எடுக்க பரிந்துரை செய்ய  இந்த கமிட்டிக்கு அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளது. 

10. பெற்றோர் ஆசிரியர் கழகத்தை சேர்ந்தவர்களும் பள்ளி வாகனங்களை ஆய்வு செய்ய மாதம் ஒருதடவை கூடி ஆலோசிக்க வேண்டும். தங்கள் கருத்துக்களை மற்றும் புகார்களை அவர்கள் பள்ளி முதல்வரிடம் தெரிவிக்க வேண்டும். இந்த புகார்கள் பள்ளி கமிட்டிக்கு அனுப்பப்பட வேண்டும். பள்ளி கமிட்டி பெற்றோர் ஆசிரியர் கழகத்தினர் கூறும் குறைகளை உடன்குடன் நிவர்த்தி செய்ய உரிய நடவ டிக்கை எடுக்க வேண்டும். 

11. பள்ளி வாகனங்களுக்கு சான்றிதழ் வழங்குவதற்கு வட்டார போக்குவரத்து அலுவலத்தில் ஒரு கமிட்டி அமைக்கப்படும். மண்டல இணை போக்குவரத்து ஆணையர் தலைமையில் இந்த கமிட்டி செயல்படும். பள்ளி வாகனங்களின் தகுதி சான்றிதழ் குறித்து இந்த கமிட்டிதான் இனி முடிவு செய்யும். 
நன்றி : 
சேக்கனா M. நிஜாம்
இறைவன் நாடினால் ! தொடரும்...

1 comment:

  1. தம்பி நிஜாம் நல்லதொரு பதிவை தந்தமைக்கு நன்றி இதையெல்லாம் நமதூர் நிறுவனர்கள் செய்வார்களா என்பது தான் கேள்விகுறி ?

    ReplyDelete

TIYA

WEBSITE DESIGNED BY: NOORUL IBN JAHABER ALI WEBSITE CONTROLLED BY: DOT COLORS
sourceNOORUL IBN JAHABER ALI Copyright © 2015

Theme images by Bim. Powered by Blogger.