Latest News

[ 1 ] கல்விக்கூடங்கள் எப்படி இருக்க வேண்டும் ?


தொலைந்த பொருளை தேடுவது போல் வாழ்க்கையில் கல்வியை தேடிக்கொண்டே இருங்கள்' என்று நபிகள் நாயகம் [ஸல்] அவர்களின் கூற்றுப்படி சமூக மேம்பாட்டுக்கும், மாற்றத்துக்கும் வித்திடக் கூடியவைகளாக கல்வி ஒரு முக்கிய பங்கை வகிக்கின்றன.  

இப்படி கல்வியின் முக்கியத்துவத்தையும், கற்பதின் அவசியத்தையும் கருத்தில் கொண்டே மாணவர்களின் கல்வி தரத்தை உறுதி செய்யும் வகையில் 5ம் வகுப்பு வரை 30 மாணவர்களுக்கு ஒரு ஆசிரியரும், 6ம் வகுப்பில் இருந்து 8ம் வகுப்பு வரை 35 மாணவர்களுக்கு ஒரு ஆசிரியரும் நியமிக்க கட்டாய கல்வி உரிமை சட்டத்தில் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. இவற்றை அமுல்படுத்தும் நோக்கில் அடுத்த கல்வியாண்டில் இருந்து அனைத்து அரசு ஆரம்ப பள்ளிகள் மற்றும் நடுநிலைப்பள்ளிகளில் 30 மாணவர்களுக்கு ஒரு ஆசிரியர் என்ற திட்டத்தை கல்வித்துறை துவங்க உள்ளது.

சரி விசயத்துக்கு வருவோம்...

1. இப்படி சமூகத்தில் கல்வி ஒரு முக்கிய பங்குவகிப்பதால் அவற்றைக் கற்பிக்கும் கூடங்கள் எவ்வாறு இருக்க வேண்டும் ?

2. அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகள், தனியார் பள்ளிகளில் பின்பற்ற வேண்டிய நடைமுறைகள் என்ன ? 

3. மாணாக்கர்களின் பாதுகாப்புகளில் பள்ளிகளின் கடமைகள் என்ன ?

போன்றவற்றைப் பார்ப்போம்.

கட்டிடங்கள் :
1. பள்ளிகளில் கட்டிட வரைபட அனுமதி உரிய அலுவலரிடம் பெற்ற பின்னரே கட்டிடங்கள் கட்டப்படவேண்டும்.

2. பள்ளி வளாகத்திற்குள் அமைந்துள்ள திறந்த வெளிக் கிணறு, கீழ்நிலை மற்றும் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டிகள், செப்டிங் டாங்க் ஆகியன நல்ல முறையில் பராமரிக்கப்பட்டு பாதுகாப்பாக மூடப்பட்டிருக்க வேண்டும்.

3. பள்ளிக் கட்டிடத்தின் மேற்கூரைக்குச் [ Terrace ]  செல்லும் வழி மூடப்பட்டு பூட்டப்பட்டிருக்க வேண்டும்.

4. பள்ளி வளாகத்திற்குள் சாதாரண கதவுகள் தான் அமைக்க வேண்டும். இழுவைக் கதவுகள், உருளைக் கதவுகள் ஆகியவை கண்டிப்பாகத் தவிர்க்கப்பட வேண்டும்.

5. மாடிப்பகுதியில் பாதுகாப்பான தடுப்புச் சுவர் போதிய உயர்த்திற்கு ஏற்படுத்த வேண்டும்.

6. பள்ளி ஆய்வகத்தில் வெப்பம் வெளியேற வெப்பப்போக்கி [ Exhaust Fan ] அமைக்க வேண்டும்.

7. மாடிபடிக்கட்டுகளில் உள்ள கைப்பிடி அமைப்பின் மீது மாணவர்கள் சறுக்கி விளையாடுவதை தவிர்க்க, உரிய பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்கொள்வதுடன் வகுப்பிற்குள்ளும். வெளியேயும் ஆசிரியர் கண்காணிப்புப் பணியில் இருத்தல் வேண்டும்.

குடிநீர் :
1. பாதுகாப்பான குடிநீர் தரப்பட வேண்டும், குடிநீர் சேமித்து வைக்கும் தொட்டிகள் தூய்மையான முறையில் இருத்தல் வேண்டும். எப்பொழுது யாரால் எப்படி சுத்தம் செய்யப்பட்டது என்பதற்கான பதிவேடு பராமரிக்கப்பட வேண்டும். குடிநீர் உரிய முறையில் சுத்திகரிக்கப்பட்டு பாதுகாப்பான முறையில் விநியோகிக்கப்பட வேண்டும்.

2. மேலும் 20 மாணவர்களுக்கு 1 குழாய் என்ற வீதத்தில் குடிநீர் குழாய்கள் ஏற்படுத்தப்பட்டிருத்தல் வேண்டும்.

3. பாத்திரங்கள் கழுவ, கை, கால்கள் கழுவ 20 மாணவர்களுக்கு 1 குழாய் என்ற அளவில் தண்ணீர் வசதி ஏற்படுதப்படிருத்தல் வேண்டும். தரை வழுக்கல் இன்றி அமைக்கப்பட்டு பராமரிக்கப்பட வேண்டும்.

கழிப்பிடங்கள் :
1. 20 மாணவர்களுக்கு 1 சிறுநீர் கழிப்பறை மற்றும் 50 மாணவர்களுக்கு 1 மலக் கழிப்பறை என்ற அளவில், போதிய இடைவெளியில் கழிப்பறைகள் காற்றோட்டம் / போதிய வெளிச்சத்துடன் பாதுகாப்புடன் அமைக்கப்பட்டிருத்தல் வேண்டும். இவை அன்றாடம் தூய்மையாகப் பேணப்பட வேண்டும். கிருமி நாசினி தெளித்து ஆரோக்கியமான முறையில் பயன்படுத்தப்பட வேண்டும். குறிப்பாக வகுப்பறையை ஒட்டிய கடைசியாக அமைக்கப்படவேண்டும். தனியே மைதானத்திலோ அல்லது ஆள் நடமாட்டம் இல்லாத பகுதியிலோ அமைதல் கூடாது. கட்டிட உறுதி / உரிமச் சான்றுகள் கழிப்பறைகளுக்கும் அவசியம்.

2. கழிப்பறைகள் தண்ணீர் குழாய் வசதியுடன் கூடியதாக இருத்தல் வேண்டும்.

3. தண்ணீர்த் தொட்டிகள் மாணக்கர்களால் திறக்க முடியாதபடி மூடப்பட்டு இருக்க வேண்டும். மழலையர் மற்றும் தொடக்க நிலை வகுப்பு குழந்தைகள் நடத்தாட்டிகள் உதவியுடன் கழிவறைக்குச் சென்று வர ஏற்பாடுகள் செய்துதர வேண்டும்.

மின்சாரம் :
1. அனைத்து இடங்களிலும் மின்சார இணைப்புகள், மின்சாவி [ Switches ]போன்றவை பாதுகாப்பாக அமைக்கப்பட்டிருக்க வேண்டும்.

2. பள்ளிகளில் உள்ள மின்சார சாதனங்கள் அவ்வப்போது பழுது நீக்கி அவற்றின் பாதுகாப்புத் தன்மை குறித்து அங்கீகரிக்கப்பட்ட மின் அலுவலரின் [ Licenced  Electrical Inspectors ] சான்று பெற்றிருத்தல் வேண்டும்.

3. உடைந்த / சிதிலமடைந்த கட்டடங்கள், சுவர்கள், அருந்த / துண்டித்த நிலையில் மின்சார ஒயர்கள் இருப்பின் அவைகள் உடனடியாக நீக்கம் செய்யப்பட வேண்டும். அதுகாறும் மாணவர்கள் / பணியாளர்கள் அவ்விடம் செல்லாமல் இருக்க பாதுகாப்பான முறையில் உரிய தடுப்பு அமைப்பு ஏற்பாடுகள் செய்யப்படவேண்டும்.

இருக்கைகள் :
1. மாணவர்கள் அமரும் பெஞ்சுகள் பின்புறம் முதுகு சாய்வகம் உள்ள முறையில் அமைக்கப்பட வேண்டும்.

2. பெஞ்சு, டெஸ்க் ஆகியவற்றில் கூரிய முனைகள் இல்லாத வண்ணம் அமைக்கப்பட்டிருக்க வேண்டும். எக்காரணங்கொண்டும் அமர்ந்தால் ஆடக்கூடிய மற்றும் உடைந்த நிலையிலான இருக்கைகள் பயன்படுத்தக்கூடாது. அவை உடனடியாக நீக்கம் செய்யப்பட வேண்டும்.

சேக்கனா M. நிஜாம்
இறைவன் நாடினால் ! தொடரும்...
[ கல்விக்கூடங்கள் எப்படி இருக்க வேண்டும் ? - பகுதி - 2 ] 
[ கல்விக்கூடங்கள் எப்படி இருக்க வேண்டும் ? - பகுதி - 3 ]
Posted by சமூக விழிப்புணர்வு பக்கங்கள் at 6:58 AM

No comments:

Post a Comment

TIYA

WEBSITE DESIGNED BY: NOORUL IBN JAHABER ALI WEBSITE CONTROLLED BY: DOT COLORS
sourceNOORUL IBN JAHABER ALI Copyright © 2015

Theme images by Bim. Powered by Blogger.