டெல்லி: முன்னாள் மத்திய அமைச்சர் ஏ.ராசாவின் நெருங்கிய நண்பரான சாதிக் பாட்ஷா, கொலை செய்யப்படவில்லை என்று சிபிஐ கூறியுள்ளது. மேலும் இந்த வழக்கை முடித்துக் கொள்வதாகவும் அது தெரிவித்துள்ளது.
2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கில் ராசா கைது செய்யப்பட்ட பின்னர் அவரது நெருங்கிய நண்பரான சாதிக் பாட்ஷாவும் விசாரணை வளையத்திற்குள் கொண்டு வரப்பட்டார். தீவிர விசாரணை, நிறுவனங்களில் ரெய்டு என்று சாதிக் பாட்ஷா உட்படுத்தப்பட்டிருந்த நிலையில் சென்னையில் உள்ள தனது வீட்டில் வைத்து அவர் பிணமாக கண்டெடுக்கப்பட்டார். தூக்கில் தொங்கிய நிலையில் அவரது உடல் காணப்பட்டது.
முதலில் இதை போலீஸார் தற்கொலை என்று வழக்குப் பதிவு செய்தனர். ஆனால் சாவில் மர்மம் இருப்பதாகவும், சாதிக் பாட்ஷா கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்றும் பின்னர் சந்தேகங்கள் கிளம்பின. இதையடுத்து வழக்கை சிபிஐக்கு மாற்றினர். கடந்த 17 மாதங்களாக இந்த வழக்கை விசாரித்து வந்தது சிபிஐ. தற்போது வழக்கை முடித்துக் கொள்வதாக சிபிஐ கூறியுள்ளது.
இதுதொடர்பாக சிபிஐ வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், சாதிக் பாட்ஷா தற்கொலையில் எந்த சந்தேகமும் இல்லை. அவர் கொலை செய்யப்பட்டதற்கான ஆதாரம் எதுவும் இல்லை. பிரேத பரிசோதனை அறிக்கையும், டெல்லியில் உள்ள அகில இந்திய விஞ்ஞான மருத்துவக்கழக ஆஸ்பத்திரியின் நிபுணர்கள் குழு நடத்திய தீவிர ஆய்வும் அவர் தற்கொலை செய்து கொண்டதாகவே தெரிவிக்கின்றன.
அவர் தற்கொலை செய்வதற்கு முன்னதாக எழுதிய கடிதத்தில் உள்ள கையெழுத்து அவருடையதுதான் என்று தடய அறிவியல் நிபுணர்களும் தெரிவித்து உள்ளனர். ஆகவே, சாதிக்பாட்ஷா தற்கொலைதான் செய்து கொண்டுள்ளார். அவர் கொலை செய்யப்பட்டதற்கான முகாந்திரம் இல்லை என்று கூறப்பட்டுள்ளது.
இதன் மூலம் பாட்ஷா மர்ம மரண வழக்கை முடிவுக்குக் கொண்டு வந்துள்ளது சிபிஐ.


No comments:
Post a Comment