Latest News

வெளி மாநிலங்களில் இருந்து 600 மெகாவாட் மின்சாரம் வாங்க தமிழகம் முடிவு


சென்னை: தமிழகத்தில் தற்போது நிலவி வரும் கடும் மின் பற்றாக்குறையை சமாளிக்க, வெளி மாநிலங்களில் இருந்து 600 மெகாவாட் மின்சாரம் வாங்கி கொள்ள தமிழ்நாடு மின்சார வாரியத்திற்கு, மின்சார ஒழங்கு முறை ஆணையம் அனுமதி அளித்துள்ளது.
தமிழகத்தில் தற்போது நிலவி வரும் கடும் மின் பற்றாக்குறை காரணமாக, அறிவிக்கப்படாத மின்வெட்டு அமலில் உள்ளது. இதனால் தொழிற்சாலைகள், சிறு மற்றும் குறுந்தொழில்கள் ஆகியவை பாதிக்கப்பட்டுள்ளன. மேலும் பொதுமக்களிடையே கடும் அதிருப்தியும் ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில் தமிழகத்தில் தற்போது நிலவி வரும் மின் பற்றாக்குறையை சமாளிக்க, வெளி மாநிலங்களில் இருந்து மின்சார வாங்க தமிழ்நாடு மின்சார வாரியம் கோரிக்கை விடுத்தது. அதற்கு மின்சார ஒழங்கு முறை ஆணையம் அனுமதி அளித்துள்ளது.
இது குறித்து மின்சார வாரியத்துறை அதிகாரிகள் கூறியதாவது,
தமிழகத்திற்கு தேவையான மின்சாரத்தில் தெர்மல் பவர் கார்ப்பரேஷன் மூலம் 1,905 மெகாவாட், புனல் மின் நிலையங்கள் மூலம் 370 மெகாவாட், எரிவாயு மின்நிலையங்கள் மூலம் 150 மெகாவாட், தனியார் மின் நிறுவனங்கள் மூலம் 740 மெகாவாட் பெறப்படுகிறது.
மத்திய அரசின் தேசிய அனல்மின் கழகம் மூலம் 850 மெகாவாட், தேசிய அணுமின் கழகம் மூலம் 375 மெகாவாட், நெய்வேலி அனல் மின்நிலையம் மூலம் 850 மெகாவாட், தமிழகம் மற்றும் பிற மாநிலங்களில் இருந்து 500 மெகாவாட் மின்சாரம் வாங்கப்படுகிறது. இதன் மூலம் 5,740 மெகாவாட் மின்சாரம் தற்போது கிடைத்து வருகிறது. காற்றாலைகள் மூலம் சராசரியாக 2,400 மெகாவாட் உட்பட 8,140 மெகாவாட் மின்சாரம் தான் தற்போது கிடைக்கிறது.
ஆனால் தமிழகத்தின் மொத்த தேவை சராசரியாக 12 ஆயிரம் மெகாவாட்டாக உள்ளது. 3,860 மெகாவாட் மின் பற்றாக்குறையை போக்க, காற்றாலைகள் உதவும் என்பதில் உத்தரவாதம் இல்லை. மேலும் காற்று வீசும் காலம் இன்னும் 2 மாதங்களில் முடிவடைய உள்ளதால், தமிழகத்தில் மின் உற்பத்தி பெரிதும் பாதிக்கப்படும்.
நடப்பு ஆண்டில் தென்மேற்கு பருவ மழை பொய்த்து போனதால், கடந்த ஜூன் முதல் செப்டம்பர் வரை 85 கோடி யுனிட் மின்சாரம் மட்டுமே உற்பத்தி செய்யப்பட்டுள்ளது. இதனால் 129 கோடி யுனிட் மின்சாரம் இழப்பு ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் தனிநபர் மின் நுகர்வு அளவும் 8 சதவிதத்தில் இருந்து 9 சதவீதமாக உயர்ந்துள்ளது.
தமிழகத்தில் வழக்கமாக அதிகபட்சமாக மின்நுகர்வு நேரம் மாலை 6 மணியில் இருந்து இரவு 8.30 மணி வரை இருந்தது. தற்போது அந்த நேரம் மாற்றப்பட்டு இரவு 11 மணியை தாண்டியும் மின்நுகர்வு செய்யப்படுகிறது. இந்த நேரத்தில் 2,500 மெகாவாட் வரை மின்சாரம் பயன்படுத்தப்படுகிறது.
எனவே தமிழகத்தில் மின்சார பற்றாக்குறையை போக்க 2012-13ம் ஆண்டில் தமிழக அரசு ரூ.3020 கோடியே 25 லட்சம் மானியம் அளித்துள்ளது. அத்துடன் தமிழ்நாடு மின்சார வாரியத்தின் உடனடி தேவைக்காக தற்போது முன் பணமாக ரூ.ஆயிரம் கோடி தமிழ்நாடு மின்சார வாரியத்திற்கு தமிழக அரசு வழங்கி உள்ளது.
இதன்மூலம் செப்டம்பர் கடைசி வாரத்தில் இருந்து அக்டோபர் முதல் 2 வாரங்களுக்கு தேவையான மின்சாரத்தை சமாளிக்க போர்க்கால நடவடிக்கையை தமிழ்நாடு மின்சார வாரியம் எடுத்து வருகிறது. இதற்காக வெளி மாநிலங்களிலிருந்து 10,300 மில்லியன் யுனிட் வாங்க கடந்த மே மாதம் ஒப்புதல் கேட்டு மின்சார ஒழுங்குமுறை ஆணையத்திற்கு ஒப்புதல் கோரப்பட்டது.
இதை பரிசீலித்த ஆணையம் 2012ம் மே மாதத்தில் இருந்து வரும் 2013 மே மாதம் வரை 4 ஆயிரம் மில்லியன் யுனிட் வரை மின்சாரம் வாங்க அனுமதி அளித்துள்ளது. இதில் 500 மில்லியன் யுனிட் மின்சாரம் பெறப்பட்டுள்ளது.
மீதமுள்ள 3,500 மில்லியன் யுனிட் அதாவது 600 மெகாவாட் மின்சாரத்தை இந்த மாதத்தில் இருந்து 2013 மே மாதம் வரையுள்ள 8 மாதங்களுக்கு யுனிட் ரூ.4.13 முதல் ரூ.5 வரை கட்டணத்தில் வாங்கி கொள்ள அனுமதித்துள்ளது. இதற்காக ஆந்திரா, குஜராத், ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் இருந்தும் மின்சாரம் வாங்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது என்றனர்.

No comments:

Post a Comment

TIYA

WEBSITE DESIGNED BY: NOORUL IBN JAHABER ALI WEBSITE CONTROLLED BY: DOT COLORS
sourceNOORUL IBN JAHABER ALI Copyright © 2015

Theme images by Bim. Powered by Blogger.