சென்னை: சென்னை திருவல்லிக்கேணியில் நேற்று காலை 2 மாடி கட்டிடம் இடிந்து விழுந்த விபத்தில் இருவர் பலியானார்கள். அதில் குடியிருந்த 7 குடும்பங்களை சேர்ந்தவர்கள் இடிபாடுகளில் சிக்கியுள்ளதால் அவர்களின் கதி என்ன என்று தெரியவில்லை. விபத்தில் சிக்கிய வீடு மிகவும் பழமையானது. மேலும் 50 வருடங்களுக்கு முன்பு மண்ணால் கட்டப்பட்டதாகும். பாழடைந்து போயிருந்த அந்த வீட்டில் 25க்கும் மேற்பட்டோர் வசித்து வந்தனர் என்பதால் உயிரிழப்பு அதிகமாகுமோ என்ற பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயில் அருகே உள்ள சுங்குவார் தெருவில் 2 அடுக்கு மாடி கட்டிடம் இருந்தது. 50 ஆண்டுகள் பழமையான இந்த கட்டிடம், தியாகராஜன் (45) என்பவருக்கு சொந்தமானதாகும். இங்கு 15 குடும்பங்கள் வாடகைக்கு வசித்து வந்தன. இந்த கட்டிடத்தின் தரை தளமும் முதல் மாடியும் மண் மற்றும் செங்கற்களால் கட்டப்பட்டதாகும். சமீபத்தில் 2,வது மாடி கட்டப்பட்டுள்ளது. மண் வைத்து கட்டப்பட்டதால் கட்டிடம் பலவீனமாக இருந்துள்ளது. இதையடுத்து, கட்டிடத்தையொட்டி பில்லர்கள் அமைத்து, பலப்படுத்த தியாகராஜன் திட்டமிட்டார்.
பள்ளம் தோண்டியதால் விரிசல்
அதற்காக வீட்டை சுற்றி பில்லர் அமைப்பதற்காக பள்ளம் தோண்டும் பணி கடந்த சில நாட்களாக நடந்து வந்தது. பள்ளம் தோண்டியபோது, தியாகராஜன் வீட்டு கட்டிடத்தின் பல இடங்களில் விரிசல் ஏற்பட்டுள்ளது. இதனால் பயந்துபோன சிலர், வீடுகளை காலி செய்துவிட்டு வேறு இடத்துக்கு சென்றுவிட்டனர். தியாகராஜன் உள்பட 7 குடும்பங்கள் மட்டும் வசித்து வந்தன.
இதனிடையே இன்று காலை 7.30 மணிக்கு, தியாகராஜன் வீடு இருந்த கட்டிடம், திடீரென இடிந்து பக்கத்தில் இருந்த அச்சகம் மீது விழுந்தது. பயங்கர சத்தம் கேட்டதால் அப்பகுதி மக்கள் வீடுகளில் இருந்து பதறியடித்து வெளியே ஓடிவந்தனர். சிறிது நேரத்தில் மாடி கட்டிடம் முழுவதும் இடிந்து கிடந்ததைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். அதில் வசித்து வந்த 7 குடும்பங்களை சேர்ந்த அனைவரும் இடிபாடுகளில் சிக்கினர்.
இடிபாடுகளுக்குள் சிக்கியவர்களில் மஞ்சு, பாரதி ஆகிய இருவரும் பலியானது உறுதி செய்யப்பட்டது. அவர்களது உடல்களை மீட்கும் பணி தொடர்ந்து நடந்தது. தியாகராஜன் மற்றும் பார்த்தசாரதி ஆகியோரின் நிலை என்னவென்று தெரியவில்லை.
கட்டிட உரிமையாளர் தியாகராஜனுக்கு துரை என்ற மகன் உள்ளார். இவருக்கு திருமணமாகி பிரியா என்ற மனைவியும், 2 வயதில் ஒரு மகனும் உள்ளனர். இவர்கள் 3 பேரும் துபாயில் வசித்து வருகிறார்கள். சம்பவம் பற்றி துரைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுபற்றி தகவல் கிடைத்ததும் போலீசாரும் தீயணைப்பு வீரர்களும் விரைந்து வந்து மீட்பு பணிகளில் ஈடுபட்டனர். இடிபாடுகளில் சிக்கியுள்ளவர்களை மீட்க கடுமையாக போராடி வருகின்றனர். அவர்களுடன் அந்த பகுதி மக்களும் மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
சமூக நலத்துறை அலுவலகத்தில் அதிகாரியாக பணியாற்றும் அமிர்தலிங்கத்தின் மனைவி பாரதி (50), மகன் பார்த்தசாரதி (23) ஆகியோரும் இடிபாடுகளில் சிக்கி உயிருக்கு போராடுகின்றனர். அவர்களை மீட்க மக்கள் போராடி வருகின்றனர். இடிபாடுகளில் பலர் சிக்கியிருப்பதால் பலி எண்ணிக்கை அதிகரிக்கும் என்று அஞ்சப்படுகிறது. 7 குடும்பங்களை சேர்ந்த குழந்தைகள் உள்பட 25,க்கும் மேற்பட்டோர் கட்டிட இடிபாடுகளில் சிக்கியிருக்கலாம் என்று தெரிகிறது.
மீட்புப் பணியில் தாமதம்
சம்பவம் குறித்து திருவல்லிக்கேணி போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். உயர் அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு விரைந்துள்ளனர். சென்னை மாநகராட்சி மேயர் சைதை துரைசாமி நேரில் வந்து மீட்பு பணிகளை பார்வையிட்டுச் சென்றார்.
அந்தப் பகுதியில் மக்கள் திரண்டுள்ளதால் பெரும் பரபரப்பும் பதற்றமும் நிலவுகிறது. கட்டிடம் இடிந்து விழுந்த இடம் மிகவும் குறுகலான தெரு என்பதால் மீட்பு பணிகளில் தொய்வு ஏற்பட்டுள்ளது. ஆம்புலன்ஸ், பொக்லைன் உள்ளிட்ட வாகனங்கள் உள்ளே வர முடியவில்லை. போலீசாரும் தீயணைப்பு வீரர்களும் கடப்பாரை, கட்டை, கம்பிகளை பயன்படுத்தி இடிபாடுகளை உடைத்து இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.
ஒருவரின் உடல் மீட்பு
கட்டிட இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்க அங்கு ஜே.சி.பி. எந்திரம் வரவழைக்கப்பட்டது. அது குறுகிய சந்து என்பதால் ஜே.சி.பி. எந்திரத்தால் உள்ளே செல்ல முடியவில்லை. இதனால் மீட்பு பணியில் பாதிப்பு ஏற்பட்டது. எனினும் தீயணைப்பு படையினர் போராடி ஒரு பெண்ணின் உடலை மீட்டனர். மற்றொரு பெண்ணின் உடலை மீட்கும் பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். முன்னெச்சரிக்கையாக இடிபாடுகளில் சிக்கியவர்களை அடையாளம் காண மோப்ப நாய் வரவழைக்கப்பட்டுள்ளது. அவர்களை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்ல ஆம்புலன்ஸூம் தயார் நிலையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.


No comments:
Post a Comment