Latest News

  

வெளிநாடு வாழ் இந்தியர்கள் தங்கம் கொண்டு வர மீண்டும் கட்டுப்பாடு


ஜெத்தா: வெளிநாடு வாழ் இந்தியர்கள் இந்தியாவுக்கு தங்க நகைகள் கொண்டு வர மீண்டும் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது வெளிநாடு வாழ் இந்தியர்களை ஆத்திரமடையச் செய்துள்ளது.

45 ஆண்டுகள் பழமை வாய்ந்த சுங்க சட்டத்தை இந்திய அரசு மறுபடியும் அமல்படுத்தியுள்ளது. அதன்படி வெளிநாடுகளில் வாழும் இந்திய ஆண்கள் தங்கள் ஊருக்கு வருகையில் ரூ.10,000 மதிப்புள்ள தங்க நகையும், பெண்கள் ரூ.20,000 மதிப்புள்ள நகைகளையும் மட்டுமே சுங்க வரியின்றி எடுத்து வர முடியும்.

தற்போதுள்ள தங்க விலையைப் பார்க்கையில் ஆண்கள் 3.5 கிராமும், பெண்கள் 7.1 கிராம் தங்க நகைகள் மட்டுமே எடுத்து வர முடியும். அதை விட அதிக தங்க நகைகள் கொண்டு வந்தால் நகையின் மதிப்பில் 10 சதவீதம் மற்றும் 3 சதவீத வரி செலுத்த வேண்டும். முன்பெல்லாம் 10 கிராம் தங்க நகைக்கு ரூ.300 வரியாக செலுத்தினால் போதும் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த சட்டம் அமலுக்கு வந்தது தெரியாமல் ஏராளமான தங்க நகைகள் கொண்டு வந்த வெளிநாடு வாழ் இந்தியர்கள் விமான நிலையங்களில் சிக்கினர்.

தனது குடும்பத்தாரை இந்தியாவில் கொண்டுபோய் விட்டுவிட்டு அமீரகம் திரும்பிய விஜு நாயர் சவூதி கெசட் பத்திரிக்கைக்கு தெரிவித்ததாவது,

எங்களின் நெருங்கிய உறவினரின் மகள் திருமணப் பரிசாக தங்க நகைகளை என் மனைவி இந்தியா கொண்டு சென்றார். கொச்சி விமான நிலையத்தில் எங்களை நிறுத்தி எங்களிடம் எவ்வளவு தங்க நகைகள் உள்ளது என்று விசாரித்ததும் அதிர்ச்சி அடைந்தோம். நகைகளுக்கு எக்கச்சக்க சுங்கத் தீர்வை செலுத்த நாங்கள் விரும்பவில்லை. அதனால் நகைகளை விமான நிலையத்திலேயே வைத்து விட்டு ஊருக்கு சென்றோம். அந்த நகைகள் என் மனைவி அடுத்த மாதம் அமீரகம் திரும்பும்போது எடுத்து வருவார் என்றார்.

இந்த சட்டப்படி வழக்கமாக 40 முதல் 50 கிராம் தங்க நகைகள் அணியும் இந்திய பெண்கள் இனி ஒரு தங்க மோதிரம் மட்டுமே அணிந்து செல்ல முடியும் என்று அப்துல் ஜமீல் என்பவர் தெரிவித்துள்ளார்.

இந்த புதிய சட்டம் நடைமுறைக்கு ஒத்துவராது என்றும், முரண்பாடானது என்றும் சவூதி அரேபியாவில் உள்ள கேரள சங்கங்களின் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. இது குறித்து அந்த கூட்டமைப்பின் தலைவர் ஆர். முரளிதரன் சவூதி கெசட் பத்திரிக்கையிடம் கூறுகையில்,
வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கான இந்த சட்டத்தை இந்திய அரசு வேண்டும் என்றே மீண்டும் அமல்படுத்தியுள்ளது. அதில் அடிக்கடி இநதியா வரும் வளைகுடா நாடுகளில் உள்ள இந்தியர்களை குறிவைத்து இந்த சட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது என்றார்.

நன்றி : தட்ஸ்தமிழ்

No comments:

Post a Comment

TIYA

WEBSITE DESIGNED BY: NOORUL IBN JAHABER ALI WEBSITE CONTROLLED BY: DOT COLORS
sourceTemplateism Copyright © 2015

Theme images by Bim. Powered by Blogger.