இந்தியாவில் அனைத்து தபால் நிலையங்களும் இணையதளம் மூலம் இணைக்கப்படும் என்று மத்திய தொலைத் தொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை இணையமைச்சர் சச்சின் பைலட் தெரிவித்தார்.
சென்னை பழைய மகாபலிபுரம் சாலை கந்தன்சாவடியில் அல்காடெல் லூசென்ட் நிறுவனத்தின் ஒருங்கிணைந்த ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு மையத்தை மத்திய இணையமைச்சர் சச்சின் பைலட் திங்கள்கிழமை திறந்து வைத்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: இந்தியாவில் இப்போது 93 கோடி செல்போன்கள் பயன்பாட்டில் உள்ளன. 1996 முதல் 2006 வரை உள்ள 10 ஆண்டுகளில் செல்போன்களின் எண்ணிக்கை வேகமாக உயர்ந்துள்ளது.
இப்போது 'ஸ்மார்ட் போன்' எனப்படும் நவீன செல்போன்கள் மூலம் செய்திகள், வங்கி சேவைகள், இணையதளம் ஆகிய வசதிகளைப் பெறமுடிகிறது. இதன் பயன் எல்லையற்றது. இப்போது 'டெலி டென்சிட்டி' எனப்படும் தொலைபேசி பயன்பாட்டின் அடர்த்தி 77 சதவீதமாக உள்ளது. இது 1995-ல் வெறும் 1 சதவீதமாக இருந்தது. இணையதளப் பயன்பாட்டில் உலகில் சீனா, அமெரிக்காவுக்கு அடுத்தபடியாக இந்தியா 3-ம் இடம் வகிக்கிறது. பொதுமக்களுக்கு பாதுகாப்பான சைபர் தளத்தை அமைத்துக் கொடுப்பது அரசின் கடமை.
இந்தியாவில் உள்ள அனைத்து கிராம தலைமையிடங்களும் "ஃபைபர் ஆப்டிகல்' தொழில்நுட்பத்தின் மூலம் இணைக்கப்படும். இதற்கு ரூ. 20,000 கோடி செலவாகும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. முதல் கட்டமாக 2 லட்சத்து 50 ஆயிரம் கிராமங்கள் இதன் மூலம் இணைக்கப்படும்.
இந்தியாவின் அனைத்து தபால் நிலையங்களும் இணையதளம் மூலம் இணைக்கப்படும். இப்போது 22 கோடி அஞ்சல் துறை சேமிப்பு கணக்குகள் உள்ளன.
அனைத்து மொழிகளிலும்....:
'ஃபைபர் ஆப்டிகல்' இணைப்புகளுக்கு மாநில அரசுகள் கட்டணத்தை ரத்து செய்யவேண்டும் என்று கோரப்பட்டுள்ளது. இதற்கு மாநில அரசுகள் சம்மதம் தெரிவித்தால் பணிகள் தொடங்கப்படும். மத்திய அரசின் 22 அலுவல் மொழிகளிலும் இணைய சேவையை வழங்கவேண்டும். உள்ளூர் மொழிகளில் செயல்படக்கூடிய மென்பொருள்கள் தயாரிக்கப்பட வேண்டும்.
முக்கிய ஆவணங்கள், சான்றிதழ்கள் ஆகியவை உள்ளூர் மொழிகளில் கிடைக்கச் செய்யவேண்டும். தகவல் தொழில்நுட்பம் என்றால், படித்த நகரவாசிகளுக்கு மட்டுமல்ல. அது கிராமத்தில் வசிக்கும் விவசாயிகள், மீனவர்கள் ஆகியோருக்கும் பயன்பட வேண்டும். இதற்கு உள்ளூர் மொழியில் வழங்கப்படும் சேவைகளை ஊக்குவிக்க வேண்டும்.
தகவல் தொழில்நுட்பத்தில் இந்தியாவின் உள்நாட்டு உற்பத்தியின் ஏற்றுமதி மதிப்பு 30,000 கோடி டாலர்கள். இது அடுத்தாண்டு 17 சதவீதம் உயரும்.
இந்தியாவின் தகவல் தொழில்நுட்பம் சார்ந்த பொருள்கள் மற்றும் சேவைகளின் ஏற்றுமதியில் 63 சதவீதம் அமெரிக்காவுக்கு செல்கிறது. மற்ற நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்ய வேண்டும்.
தகவல் தொடர்பு, கணினி பயன்பாடுகள், தகவல் சேவைகள் ஆகியவற்றின் ஏற்றுமதி மட்டும் ஆண்டுக்கு 4,500 கோடி டாலர்களாக உள்ளது. இது இன்னும் 10 ஆண்டுகளுக்குள் பல மடங்கு உயரும்.
ஸ்பெக்ட்ரம் என்பது இயற்கை வளம். அது மக்களுக்காகப் பயன்பட வேண்டும். ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடுகளில் நியாயமான விலை நிர்ணயம் செய்யவேண்டும் என்றார் அவர்.
உடன், நிறுவனத்தின் இந்தியப் பிரிவு நிர்வாக இயக்குநர் மற்றும் தலைவர் முனிஷ் சேத், தகவல் தொடர்பு மற்றும் நிகழ்ச்சிகள் பிரிவு மூத்த மேலாளர் ஹிரண்மய சௌத்ரி ஆகியோர் இருந்தனர்.
No comments:
Post a Comment