டெல்லி: ஜனாதிபதி தேர்தலுக்கான வாக்குப் பதிவு நாளை நடைபெறவுள்ளது.
எம்பிக்கள், எம்எல்ஏக்கள் வாக்களிக்கும் இந்தத் தேர்தலின் ஓட்டுப்பதிவு நாளை காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறுகிறது.
இந்தத் தேர்தலில் காங்கிரஸ் கூட்டணி சார்பில் பிரணாப் முகர்ஜியும், பாஜக-அதிமுக கூட்டணி சார்பில் பி.ஏ.சங்மாவும் போட்டியிடுகின்றனர்.
வாக்குச்சீட்டு முறையில் எம்.பி, எம்.எல்.ஏக்கள் ஓட்டு போட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. எம்.பிக்கள் நாடாளுமன்ற வளாகத்தில் வாக்களிப்பர்.
எம்.எல்.ஏக்கள் அந்தந்த மாநிலத்தில் உள்ள அரசு தலைமைச் செயலகங்களில் வாக்களிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தேர்தல் ஆணையத்திடம் முன் அனுமதி பெற்றுள்ள எம்.பிக்கள் சொந்த மாநிலத்திலேயே எம்எல்ஏக்களுடன் ஓட்டுப் போடலாம்.
நாடாளுமன்றத்திலும் மாநில தலைநகரங்களில் தலைமைச் செயலகங்களிலும் அமைக்கப்பட்டுள்ள வாக்குச் சாவடிகளில் பணிபுரிவதற்காக தேர்தல் அதிகாரிகள் மற்றும் ஊழியர்களுக்கு ஏற்கனவே பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது.
வாக்களிக்க வரும் எம்.பி. அல்லது எம்.எல்.ஏ. வாக்குச் சாவடிக்குள் சென்றதும் அவரது அடையாள அட்டை மற்றும் பெயர் சரி பார்க்கப்படும். இதையடுத்தே அவருக்கு வாக்குச் சீட்டு கொடுக்கப்படும்.
இந்தத் தேர்தலில் கைவிரலில் அடையாள மை எதுவும் இடப்பட மாட்டாது.
ஓட்டுப்போட எம்.பி, எம்.எல்.ஏக்கள் வாக்குச்சாவடிக்குள் வரும்போது அவர்களை வீடியோவில் பதிவு செய்யவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஆனால், வாக்குச்சாவடிக்குள் கண்காணிப்பு கேமரா எதுவும் வைக்கப்படாது.
ஓட்டுப்போடுவது எப்படி என்பது குறித்து எம்.பி, எம்.எல்.ஏக்களுக்கு ஏற்கனவே தேர்தல் கமிஷன் மூலம் விளக்கக் கடிதங்கள் அனுப்பப்பட்டுள்ளன.
வாக்களிக்க செல்பவர்கள் செல்போன் கொண்டு போகக்கூடாது. ஓட்டுப்பதிவு முடிந்ததும் ஓட்டுப் பெட்டி சீல் வைக்கப்படும். மாநிலங்களில் இருந்து ஓட்டுப்பெட்டிகள் டெல்லிக்கு அனுப்பப்படும். 22ம் தேதி ஓட்டுக்கள் எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்படும்.
சென்னையில் முதல்வர் ஜெயலலிதா உள்ளிட்ட 234 தமிழக எம்.எல்.ஏக்களும், இங்கு வாக்களிக்க அனுமதி பெற்ற 14 அ.தி.மு.க. எம்.பிக்கள், ஒரு தி.மு.க. எம்.பியும் ஓட்டு போடவுள்ளனர்.
வாக்குச் சீட்டில் பிரணாப், சங்மா ஆகிய இரு வேட்பாளர்களும் 1, 2 என்ற எண்களால் மட்டுமே குறிப்பிடப்படுவர். அவர்களது பெயர்கள் இடம் பெறாது.
தமிழக தலைமை தேர்தல் அதிகாரி பிரவீன்குமார், உதவித் தேர்தல் அதிகாரியும் தமிழக சட்டமன்ற செயலாளருமான ஜமாலுதீன் ஆகியோர் தேர்தலுக்கான ஏற்பாடுகளை செய்து வருகிறார்கள். தேர்தல் ஆணையம் பார்வையாளராக சுஜித் குலாட்டியை அனுப்பியுள்ளது.
ஜனாதிபதி வேட்பாளர்களான பிரணாப் முகர்ஜி சார்பில் ஒரு ஏஜெண்டும், சங்மா சார்பில் ஒரு ஏஜெண்டும் ஓட்டுப்ப திவு நடைபெறும் அறைக்குள் அனுமதிக்கப்படுவார்கள்.
No comments:
Post a Comment