இண்டேன்' நிறுவனத்தின் தானியங்கி தொலைபேசி பதிவு வசதி (ஐ.வி.ஆர்.எஸ்.,) மூலம், வாடிக்கையாளர்களுக்கு தெரியாமல், காஸ் சிலிண்டர் முன்பதிவு நடப்பதாக புகார் எழுந்து உள்ளது.முறைகேடு செய்ய வாய்ப்பு:தொலைபேசி முன்பதிவில், வாடிக்கையாளர்கள், தங்கள் முகவரின் தொலைபேசி எண் மற்றும் வாடிக்கையாளர் எண்ணை பதிவு செய்து, சிலிண்டர் முன்பதிவு செய்யலாம். அதாவது, இந்த விவரங்களை அறிந்த யார் வேண்டுமானாலும், பதிவு செய்து விடலாம்.இதனால், சிலிண்டர் வினியோகம் செய்பவர்கள் மற்றும் முகவர் அலுவலகங்களில் பணிபுரிவோர், சிலிண்டர்களை முறைகேடாக பயன்படுத்த வாய்ப்பு உள்ளது. இதுகுறித்து, சென்னை இண்டேன் முகவர் ஒருவர் கூறும்போது, ""ஐ.வி.ஆர்.எஸ்., பதிவு முறையில், முறைகேடுகள் நடக்க வாய்ப்பு இருக்கலாம். தங்களின் அனுமதியின்றி சிலிண்டர் பதிவு செய்யப்பட்டால், வாடிக்கையாளர்கள் புகார் அளிக்கலாம். இக்குறைபாடுகள் குறித்து, ஐ.ஓ.சி., நிறுவனத்திற்கு விரைவில் தெரிவிப்போம்'' என்றார்.
இதனால் பாதிக்கப்பட்ட, சென்னை, குரோம்பேட்டையை சேர்ந்த, "இண்டேன்' வாடிக்கையாளர் ஒருவர் கூறியதாவது:சில நாட்களுக்கு முன், என் வாடிக்கையாளர் எண்ணை குறிப்பிட்டு, சிலிண்டர் பதிவு செய்யப்பட்டுள்ளதாக, குறுந்தகவல் வந்தது. அதை கண்டு அதிர்ச்சி அடைந்தேன். என் அலைபேசியிலிருந்து பதிவு செய்ய முயன்றபோது, ஏற்கனவே பதிவு செய்யப்பட்டதாக பதில் வந்தது.இதனால், சிலிண்டர் வினியோகம் செய்வோர், வாடிக்கையாளர்கள் சார்பில் சிலிண்டர் பதிவு செய்து, அவற்றை முறைகேடாக பயன்படுத்துகின்றனரோ என்ற சந்தேகம் எழுகிறது.இவ்வாறு அவர் கூறினார்.
No comments:
Post a Comment