Latest News

அந்த மாணவனின் கையில் யார் கத்தியைக் கொடுத்தது?



நேற்றைய தொலைக்காட்சிகளிலும், இன்றைய பத்திரிகைகளிலும் இதுவே முக்கிய செய்தி. தன்னை நோக்கி கத்தியுடன் வந்த மாணவன் இர்ஃபானைப் பார்த்து டீச்சர் உமாமகேஸ்வரிக்கு வந்த பயமும், பதற்றமும் ஒட்டு மொத்த சமூகத்திற்கும் இன்று வந்திருக்கிறது. அதனை  எதிர்கொள்ள, தப்பிக்க அல்லது முறியடிக்க  கூடவே சிந்தனைகளும் முளைக்கின்றன.

“அந்தச் சிறுவன் ஒரு மனநல நோயாளி”,  “அவனைத் தூக்கில் போட வேண்டும்”,  “வளர்ப்பு சரியில்லை எனவே பெற்றோரையும் தண்டிக்க வேண்டும்”,  “சினிமாக்களும், தொலைக்காட்சிகளும்தான் இதுபோன்ற வன்செயல்களுக்கு வித்திடுகின்றன” இப்படியான கருத்துக்கள் அதிகமாக வெளிப்பட்டுக்கொண்டு இருக்கின்றன.

“யாரும் பெயில் கிடையாது என்னும் பெயரை சம்பாதிக்க  பள்ளிகள் மாணவர்களுக்கு கொடுக்கும் நெருக்கடிகளே காரணம்”,   “ மார்க்குகளை மட்டுமே முக்கியமாகக் கருதும் இந்தக் கல்விமுறையே காரணம்”, “தொடர்ந்த  கட்டாயங்களால் ஏற்படும் மன அழுத்தம் இதுபோன்ற குற்றங்களுக்கு கொண்டு செல்கிறது” என நிதானமாக கருத்துக்களும் முன்வைக்கப்படுகின்றன.

இவைகள் வெறும் உணர்ச்சிகளின் தரப்பிலிருந்தும் அல்லது  முற்றிலும் அறிவின் தரப்பிலிருந்தும் சமூகத்தின் முன்னே நடத்துகிற உரையாடல்களாகத் தெரிகின்றன.  தற்காலிகமான ஆனால் உடனடியான தீர்வுகளுக்கான அல்லது நிரந்தரத்தீர்வுகளுக்கான  வழிகளை ஆராய்வதாக இருக்கின்றன. இவைகள் யாவிலும் உண்மைகளின் கூறுகள் இருப்பினும், மனித மனங்கள் பற்றி நிறைய பேச வேண்டியிருகிறது நாம். ஒரு கொலை, அதன் பின்னணி, கொலை செய்யப்பட்டவர், கொலை செய்தவர், ஆயுதம்,  சாட்சிகள் என்ற ரீதியில் இதனை ஒரு கேஸ் கட்டுக்குள் அலசிடமுடியாது.

கொலைசெய்யப்பட்ட ஆசிரியையின் மகள் தொலைக்காட்சியில் பேசுவதைப் பார்க்க  கஷ்டமாயிருந்தது. “எங்க அம்மா ரொம்ப நல்லவங்க. எல்லார்ட்டயும் அன்பா இருப்பாங்க” என்று குரல் தழுதழுக்கச் சொல்லும்போது நமக்கும் தொண்டை அடைக்கிறது.  எப்பேர்ப்பட்ட இழப்பு அந்த குடும்பத்துக்கு. இனி அதை யாரால், எப்படி திரும்பக் கொண்டு வந்து சேர்த்துவிட முடியும்? அந்தக் கேவல்களை எப்படி நிறுத்த முடியும்?

“நான் தவறு செய்துவிட்டேன். என்ன தண்டனை வேண்டுமானாலும் கொடுங்கள். நான் என் பெற்றோர்களையும் பார்க்க விரும்பவில்லை” என இர்ஃபான் அளித்துள்ள வாக்குமூலம், அவன் தன்னை உலகிலிருந்தே துண்டித்துக் கொள்ள முயல்பவனாகக் காட்டுகிறது. “அந்த டீச்சர் கதறியது என் கண்ணுக்குள்ளேயே இருக்கிறது” எனச் சொல்வதில் அவன் அடையும் சித்திரவதை இருக்கிறது.

இப்படிப்பட்ட இர்ஃபான் கையில் கத்தியையும் அவனது சிந்தையில் தன் டீச்சரைக் கொல்ல வேண்டும் எனகிற வெறியை யார் திணித்தது? இரண்டுநாளாய் கத்தியை தனது புத்தக்கட்டுக்குள் வைத்து திட்டமிட்டு இருந்திருக்கிறான். தக்க தருணம் எதிர்பார்த்திருக்கிறான். ஒரு குத்து அல்ல. மாறி மாறி குத்தியிருக்கிறான். கையெடுத்துக் கும்பிட்ட பிறகும் குத்தியிருக்கிறான். அவ்வளவு ஆத்திம் அவனுக்குள் எப்படி விதைக்கப்பட்டது? இதுதான் பெரும் ஆச்சரியமாகவும், அதிர்ச்சியாகவும் இருக்கிறது.

பெண்கள் உயர்நிலைப்பள்ளியில் ஆசிரியையாக இருக்கும் என் மனைவி செய்தியை படித்துவிட்டு, “இப்போல்லாம் பிள்ளைங்கள எதுவும் சொல்லவே பயமா இருக்கு. உடனே அழுது தள்ளிருவாங்க. நிப்பாட்டவே மாட்டாங்க.” எனச் சொல்லி வந்தவள், “ஆனா,  எல்லோரையும் பொதுவா சத்தம் போட்டா அமைதியா இருப்பாங்க. அல்லது சிரிக்கக்கூடச் செய்வாங்க” என்றாள்.  “அதே மாதிரி, தனியா அழைத்துப் போய் கடுமையாப் பேசினாலோ, புத்திமதி சொன்னாலோ கேட்டுக்குவாங்க. அழல்லாம் மாட்டாங்க. ஆனா அதுக்குல்லாம் எங்க நேரம்? ஒரு வகுப்பிலேயே நாப்பது ஐம்பது புள்ளைங்க இருக்காங்க” என்றும் சொன்னாள். இந்த இடம்தான் வெளிச்சம் காட்டுவதாக இருக்கிறது.

இன்றைய குழந்தைகள் பொதுவெளியில் தங்களுக்கு ஒரு தோல்வியோ, அவமானமோ நிகழ்ந்தால்  அதனைத்  தாங்கிக்கொள்ள முடியாதவர்களாக இருக்கிறார்கள். தவறுகளை எப்படி யாருக்கும் தெரியாமல் செய்கிறார்களோ அதுபோல  தண்டனைகளையும் மற்றவர்களுக்குத் தெரியாமலேயே அனுபவித்துவிட  தயாராய் இருக்கிறார்கள். வெளிப்படையாய் தங்கள் பலவீனங்களை ஒப்புக்கொள்ள மருக்கிறார்கள். மனித மனத்தின் பொதுவான தன்மைகள் இவற்றிலிருப்பினும் இன்றைய குழந்தைகள் மிக தீவீரமாகவும், நுட்பமாகவும் இவ்விஷயத்தில் இருக்கிறார்கள். ஏனென்றால் உலகில் அவர்கள் தங்களை மட்டுமே மிக அதிகமாக நேசிக்கிறார்கள். அதல் சிராய்ப்புகள் வருவதைக் கூட தாங்கிக்கொள்ள முடிவதில்லை. தங்களிடமிருக்கும் இந்த அன்பை எப்படி உலகம் முழுமைக்கும் அவர்களை பரிமாற வைப்பது என்பதுதான் இன்றைய சமூகத்தின் சவால். நிகழ்காலத்தின் கேள்வி. டீச்சர் உமா மகேஸ்வரியின் மரணம் இரத்தம் சிந்த சிந்த படுகொலையாக நிகழ்த்தப்பட்ட புள்ளி இதுவாகவும் தெரிகிறது.

ஒருவேளை, நேற்று வகுப்பறையில் உட்கார்ந்திருந்த உமாமகேஸ்வரி டீச்சர், அந்த மாணவன் உள்ளே நுழைந்ததும்,  “வா, இர்ஃபான் முதல் ஆளா கிளாஸுக்கு  வந்திருக்கியே. சந்தோஷமாயிருக்கு. இப்படி இருந்தா நீ எவ்வளவோ சாதிக்கலாமே” என்கிற தொனியில் பேசி முகம் மலர்ந்து வரவேற்றிருந்தால் அந்தக் கத்தி இர்ஃபானின் பையிலேயே இருந்திருக்கலாம். உமா மகேஸ்வரி அவர்களும் இப்போது ஒரு வகுப்பில் பாடம் எடுத்துக்கொண்டு இருந்திருக்கலாம். நானும், நேற்றைய பதிவுக்கு nellaiconspiracy என்னும் நண்பர் கேட்டிருந்ததற்கு பதில் சொல்லிக்கொண்டு இருந்திருக்கலாம்.

யோசித்துக்கொண்டே இருக்கிறேன். கேள்விகள் எழுந்துகொண்டே இருக்கின்றன.
நன்றி : தீராத பக்கங்கள்

1 comment:

  1. குழந்தைகளுக்கு மன அழுத்தம் கொடுக்கும் இந்த கல்வி முறையிலிருந்து விடுதலையே கிடையாதா? .கவுன்செல்லிங் கொடுக்கப்பட வேண்டியது பெற்றோருக்கும், ஆசிரியருக்கும் தான்
    மிக முக்கியமாக பள்ளி நிர்வாகத்தை முதலிம் அரசு சீர்படுத்த வேண்டும்

    ReplyDelete

TIYA

WEBSITE DESIGNED BY: NOORUL IBN JAHABER ALI WEBSITE CONTROLLED BY: DOT COLORS
sourceNOORUL IBN JAHABER ALI Copyright © 2015

Theme images by Bim. Powered by Blogger.