சனிக்கிழமை அன்று சசிகலாவின் கணவர் நடராஜன் நில அபகரிப்பு வழக்கில் கைது செய்யப்பட்டதைப் பார்க்கும் போது, வரலாறு திரும்புகிறது என்றே சொல்லத் தோன்றுகிறது. மூன்று மாதங்களுக்கு முன்பு, சசிகலாவின் நெருக்கமான உறவினர்கள் இது போல கைது செய்யப்படுவார்கள் என்று யாராவது சொல்லியிருந்தால், நம்புவதற்கு ஆள் இருந்திருக்க மாட்டார்கள். ஆனால் மன்னார்குடி மாபியாக்கூட்டத்தின் உறுப்பினர்கள் ஒவ்வொருவராக சிறை சென்ற வண்ணம் உள்ளார்கள்.
இந்த மன்னார்குடி மாபியா கும்பல் தங்களிடம் அதிகாரம் இருந்தபோது மற்றவர்களுக்கு அவர்கள் செய்தது, இன்று அவர்களுக்கே திருப்பிக் கிடைக்கிறது. 2001ல் ஜெயலலிதா ஆட்சியில் இருந்தபோது, 2003 ஜுலை மாதம் திடீரென்று மதுரையைச் சேர்ந்த செரினா பானு என்கிற ஜனனி என்கிற பெண் கைது செய்யப்பட்டார். அவரோடு, அவர் தாயார் ரமீஜா மற்றும் அவர்கள் கார் டிரைவர் சதீஷ்குமார் ஆகியோரும் கைது செய்யப்பட்டனர். அவர்கள் காரிலிருந்து 10 கிலோ கஞ்சா கைப்பற்றப்பட்டது. சென்னை நீலாங்கரையில் உள்ள அவர்கள் வீட்டிலிருந்து 1.04 கோடி பணம் பறிமுதல் செய்யப்பட்டது. விமானப்பணிப்பெண் பயிற்சி பெற்றிருந்த செரினா என்கிற அந்தப்பெண் எதற்காக கைது செய்யப்பட்டார், ஏன் கைது செய்யப்பட்டார் என்ற விபரங்கள் மர்மமாகவே இருந்தன.
ஆனால் செரினாவுக்கு ஜாமீன் வேண்டி நீதிமன்றத்தில் ஆஜரான வழக்கறிஞர் யார் தெரியுமா ? தற்போது தொலைத்தொடர்புத் துறை அமைச்சராக இருக்கும் கபில் சிபல். கபில் சிபல் செரினாவுக்காக ஆஜரானதும் ஒட்டுமொத்த பத்திரிக்கை உலகமுமே பரபரப்பாகி இந்த வழக்கை உற்று கவனிக்கத் தொடங்கின. அதற்குப் பிறகு அப்போதைய ஜுனியர் விகடன், குமுதம் ரிப்போர்டர் போன்ற பத்திரிக்கைகள் இந்த வழக்கின் பின் உள்ள மர்மங்களை மறைமுகமாக எழுதத் தொடங்கின. அந்தப் பத்திரிக்கைகள் எழுதியவற்றின் சாராம்சம் என்னவென்றால், செரினா என்ற இந்தப்பெண், சசிகலாவின் கணவர் நடராஜனுக்கு நெருக்கமானவர். அவர் தன் கணவரோடு நெருக்கமாக இருப்பதை விரும்பாத சசிகலா, ஜெயலலிதாவிடம் சொல்லி, காவல்துறையை விட்டு, செரீனா மீது கஞ்சா வழக்கு போட உத்தரவிட்டார். அவரைப்போலவே, காவல்துறையில் சிக்கிய மற்றொருவர், ஜெயலலிதாவின் முன்னாள் வளர்ப்பு மகன் வி.என்.சுதாகரன். சென்னை தியாகராயநகரில் உள்ள வி.என்.சுதாகரன் வீட்டில் கடந்த 2001 ம் ஆண்டு ஜுன் மாதம் 13 ந் தேதி பாண்டி பஜார் போலீசார் திடீர் சோதனை நடத்தினார்கள். அப்போது அங்கிருந்து 16 கிராம் ஹெராயின் என்ற போதைப்பொருள் கைப்பற்றப்பட்டது. அதை தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தினர். பின்னர் வி.என்.சுதாகரனின் அபிராமபுரத்தில் உள்ள அலுவலகத்திலும் போலீசார் சோதனை மேற்கொண்டனர். அங்கிருந்தும் 72 கிராம் ஹெராயின் கைப்பற்றப்பட்டது. போதைப்பொருள் கைப்பற்றப்பட்டது தொடர்பாக சுதாகரன், முகைதீன், பாஸ்கர் மற்றும் ஜலாவுதீன் ஆகிய நான்கு பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு அந்த வழக்கு இன்று வரை நடந்து வருகிறது
இந்த இரண்டு வழக்குகளுமே சசிகலாவின் உத்தரவால் பதியப்பட்டவை. செரினா வழக்கு நடராஜனுடனான அவரது நெருக்கத்தால் அவர் மீது பதியப்பட்டது என்றால், சுதாகரன் வழக்கு ஜெயலலிதா நம்பிக்கையோடு கொடுத்தனுப்பிய பணத்தை கையாடல் செய்ததால் தொடுக்கப்பட்டது என்பது அரசியல் வட்டாரங்களில் பேசப்படும் செய்தி. தன்னிடம் அதிகாரம் இருந்தபோது, தன்னுடைய எதிரிகளை பழிவாங்குவதற்கு காவல்துறையை பயன்படுத்திய சசிகலா, இன்று அதே அதிகாரம் தன்னுடைய குடும்பத்தினரை பதம் பார்ப்பதை நேரடியாக அனுபவித்து வருகிறார்.
முதலில் சசிகலாவின் தம்பி திவாகரன். பின்னர் சித்தப்பா மருமகன் ராவணன். கடைசியாக சசிகலாவின் கணவர் நடராஜன். அடுத்து டாக்டர் வெங்கடேஷ் மற்றும் நடராஜனின் தம்பி ராமச்சந்திரன் என்று தெரிவிக்கிறது காவல்துறை வட்டாரங்கள். தற்பொழுது அதிமுக ஆட்சிக்கு வந்த பிறகு, ராவணனும், திவாரகனும் செய்தி அட்டூழியங்கள் கொஞ்ச நஞ்சம் அல்ல.
மன்னார்குடியில் நேஷனல் ஸ்கூல் என்று ஒரு பள்ளி இருக்கிறது. இந்தப்பள்ளியின் நிர்வாகம் தொடர்பாக இரண்டு பிரிவினருக்கு இடையில் நெடுங்ககாலமாக நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் இருந்து வருகிறது. இதில் ஒரு தரப்பு திமுக ஆதரவு தரப்பு. மற்றொரு தரப்பு திவாகரன் ஆதரவு தரப்பு. திமுக ஆதரவு தரப்பிடம் இந்தப் பள்ளி நிர்வாகம் இருந்து வந்த நிலையில், அந்தப் பள்ளியின் நிர்வாகத்தை ஒரு ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர் பார்த்துக் கொண்டிருக்கிறார். அதிமுக ஆட்சிக்கு வந்ததும் திவாகரன் ஆதரவு தரப்பு பள்ளி நிர்வாகத்தைக் கைப்பற்ற வேண்டும் என்ற நோக்கில், நிர்வாகத்தை கவனித்து வந்த ஓய்வு பெற்ற ஆசிரியர் 4 கோடி ரூபாய் கையாடல் செய்து விட்டார் என்று புகார் அளிக்கின்றனர். அந்தப் புகாரில் ஓய்வு பெற்ற ஆசிரியரை கைது செய்ய வேண்டும் திவாகரன் உத்தரவிட, மன்னார்குடி டிஎஸ்பி அய்யனார், ஆய்வாளர் சேதுமணிமாதவன் ஆகியோர் நள்ளிரவு 1 மணிக்கு ஓய்வுபெற்ற ஆசிரியரின் வீட்டுக்கு சென்று, இரும்பு கேட்டை உடைத்து வீட்டுக்குள் சென்றுள்ளனர். அவரின் திருமணமான பெண் மற்றும் அவரது வயதான மனைவி மட்டும் இருந்துள்ளனர். “எங்கே உங்கள் அப்பா” என்று மிரட்டி விட்டு அவர் இல்லை என்றதும், அந்தப் பெண்ணை போலீஸ் ஜீப்பில் ஏற்றிக் கொண்டு, அவர்களது அடுத்த மகள் இருக்கும் வேதாரண்யத்துக்கு ஜீப் சென்றுள்ளது. அங்கேயும் அவர் இல்லை என்றதும், அவரது இரண்டாவது மகளின் கணவர் ஜீப்பில் ஏற்றப்பட்டுள்ளார். அடுத்த மகள் குடியிருக்கும் நாகப்பட்டினத்துக்கு சென்று, அவரின் கணவரும் ஜீப்பில் ஏற்றப்பட்டுள்ளார். காலை 8 மணிக்கு மகள் மட்டும் விடுவிக்கப்பட்டு, மருமகன்கள் இருவரும் காவல்நிலையத்திலேயே வைக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர் சென்னை உயர்நீதிமன்றத்தில் முன் ஜாமீன் தாக்கல் செய்துள்ளார். இந்த சாதாரண மோசடி வழக்கில், ஜாமீன் வழங்கக்கூடாது என்று தமிழக அரசின் தலைமை வழக்கறிஞர் நவனீதகிருஷ்ணன் ஆஜராகி வாதாடியுள்ளார். ஒரு வாரம் வரை கைது செய்யக் கூடாது என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்து தீர்ப்பை தள்ளி வைக்கிறது. இந்த தைரியத்தில் ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர் மீண்டும் வீட்டுக்கு செல்கிறார். வீட்டுக்கு சென்றவுடன், தலைமை ஆசிரியர் அவர் பணியாற்றிய பள்ளியில் உள்ள ஒருவரை கொலை முயற்சி செய்ததாக அவர் மீது புதிய வழக்கு பதிவு செய்து சிறையில் அடைக்கப்பட்டார்.
இது அத்தனையும், அக்டோபர் 2011 முதல் நவம்பர் 2011 வரை நடைபெற்றவை. இப்படி காவல்துறையை ஆட்டிப்படைத்த திவாகரன்தான் இன்று சிறையில் தன் இருளான எதிர்காலத்தை எண்ணி கவலைப்பட்டுக் கொண்டு இருக்கிறார்.
இந்த அத்தனை வழக்குகளிலும் பின்ணியில் இருப்பவர் முதலமைச்சராக, காவல்துறை மற்றும் சட்டம் ஒழுங்கை தன்னுடைய கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் ஜெயலலிதா. தன் தோழிக்கு பிடிக்கவில்லை என்பதற்காக ஒரு பெண் மீது கஞ்சா வழக்கு. தன் பணத்தை எடுத்துச் சென்று விட்டார் என்பதற்காக மற்றொருவர் மீது ஹெராயின் வழக்கு. தன்னையே பகைத்துக் கொண்டார்கள் என்பதற்காக தற்போது சசிகலா உறவினர்கள் மீது நில அபகரிப்பு வழக்கு.
இந்த அத்தனை நேர்வுகளிலும், சட்டவிரோதமாக பணியாற்றியது யார் என்று கேட்டால் அது தமிழக காவல்துறை அதிகாரிகள் தான். உங்களில் யாராவது ஒருவர் காவல்நிலையம் சென்று, உங்கள் இரு சக்கர வாகனம் தொலைந்து விட்டது என்று புகார் கொடுத்துப் பாருங்களேன். எப்ஐஆர் போடுவதற்குள் தாலியை அறுத்து விடுவார்கள். உங்களுக்கு யாராவது உயர் அதிகாரியோ, பத்திரிக்கையாளரோ, முக்கிய பிரமுகரோ தெரிந்திருந்தால் மட்டுமே எப்ஐஆர் போடப்படும். வேறு ஏதாவது அடிதடி வழக்கு என்று சென்று புகார் கொடுத்தப் பாருங்களேன். உங்களை பஞ்சாயத்து பேசி அனுப்பி வைப்பார்களே தவிர, சாமான்யத்தில் எப்ஐஆர் போட மாட்டார்கள்.
நடராஜனோ, திவாகரனோ, ராவணனோ, இவர்கள் உண்மையில் நில அபகரிப்பில் ஈடுபட்டிருந்தார்களேயானால் இவர்கள் மீது சட்டம் பாய்வதில் யாருக்கும் மாற்றுக் கருத்து இருக்க முடியாது. ஆனால், மணல் குவாரி வாங்குவதற்காக ஒரு கோடி ரூபாய் கொடுத்தேன் திருப்பித் தராமல் மிரட்டினார், மிரட்டி நிலத்தை வாங்கிக் கொண்டார் என்றெல்லாம் போடப்படும் வழக்குகள் உண்மையான வழக்குகளா ? திவாகரன் ராவணன் போன்றோர் செய்த காரியங்களுக்கு அவர்கள் சிறைக்கு செல்ல தகுதியானவர்கள் என்றாலும் கூட பிடிக்காத எதிரிகள் மீது பொய் வழக்கு போடுவதை எப்படி நியாயப்படுத்த முடியும் ?
ஆட்சியாளர்கள் யாரை கைது செய்ய உத்தரவிட்டாலும், அதற்காக ஒரு புகார்தாரரை தயார் செய்து, எப்ஐஆர் போட்டு, உடனே கைது செய்து சிறையில் அடைக்கும் காவல்துறை அதிகாரிகள் அரசு ஊழியர்கள் அல்ல…. அடிமைகள்.
நடராஜனை கைது செய்யும்போது, சென்னையில் அவரை கைது செய்த தஞ்சாவூர் போலீசார் என்ன வழக்கில் கைது செய்வதென்றே முடிவு செய்யவில்லை என்று தகவல்கள் கூறுகின்றன. முள்ளிவாய்க்காலில் இறந்த ஈழத்தமிழருக்காக நினைவிடம் என்று பொங்கல் விழாவில் நடராஜன் அறிவித்திருந்த இடத்தின் சொந்தக்காரரை, விடுதலைப்புலிகளோடு தொடர்பு என்று வழக்கு பதிவு செய்து கைது செய்வோம் என்று மிரட்டி புகார் பெறப்பட்டதாக தகவல்கள் கூறுகின்றன. நடராஜனை கைது செய்து, தஞ்சாவூர் அழைத்துச் சென்று விடியற்காலை 4.30 மணிக்கு இரண்டாம் நீதிமன்ற நடுவர் முன்னிலையில் ஆஜர்படுத்துவதற்கு பதிலாக முதலாம் நீதிமன்ற நடுவர் மாலதி முன்னிலையில் ஆஜர்படுத்தியுள்ளனர். மாலதி, நடராஜனை ரிமாண்ட் செய்வதற்கு மறுத்துள்ளார். முதலாம் நீதிமன்ற நடுவர் முருகன் என்பவர் லீவில் சென்று விட்டார் என்று அவரிடம் கூறியுள்ளார்கள். இல்லை அவர் விடுப்பில் செல்லவில்லை, அவர் நேற்றுதான் விடுப்பு. இன்று விடிந்து விட்டது. இன்று அவர் பணியில் உள்ளார் நான் எப்படி ரிமாண்ட் செய்ய முடியும் என்று மறுத்ததற்கு, முருகனை நாங்கள் லீவில் அனுப்புகிறோம் என்று சொல்லி, முதலாம் நீதிமன்ற நடுவரை விடுப்பில் செல்ல வைத்திருக்கிறார்கள்.
சட்டபூர்வமான உத்தரவுகள் வருகையில் அதை நிறைவேற்றுவது ஒரு காவல்துறை அதிகாரியின் கடமை. ஆனால் அதே நேரத்தில் ஆட்சியாளர்களுக்கு பிடிக்காதவர்கள் மீது பொய் வழக்கு பதிவு செய்யுங்கள் என்று வரும் உத்தரவுகளை நிறைவேற்றும் இந்தக் காவல்துறை அதிகாரிகள் தாங்கள் மக்கள் வரிப்பணத்தில் ஊதியம் பெறுகிறோம் என்ற நினைவில்லாமல், ஜெயலலிதாவின் சொந்தப் பணத்தில் ஊதியம் பெறும் விசுவாசமான பண்ணை அடிமைகளைப் போல நடந்து கொள்வது வேதனையளிக்கும் விஷயம். பொய்வழக்கு பதிவு செய்ய மாட்டேன் என்று ஒரே ஒரு காவல்துறை அதிகாரி கூட மறுப்பதில்லை என்பது, நம் நாட்டில் ஜனநாயக முறைதான் உள்ளதா… அல்லது மகாராணியின் அடிமை ஆட்சி நடைபெறுகிறதா என்ற சந்தேகத்தையே ஏற்படுத்துகிறது.
இப்படி மகாராணியின் விசுவாசமான அடிமைகளாக இருப்பதால்தான், காவல்துறை அதிகாரிகள் அப்பாவிகளைச் சுட்டுக் கொல்லும் போதும், பழங்குடிப்பெண்களை இரவில் கைது செய்து பாலியல் வன்புணர்ச்சிக்கு ஆளாக்கும் போதும், அரசு முன்னின்று அவர்களைக் காப்பாற்றுகிறது.
காவல்துறையினர் மத்தியில் பரவியிருக்கும் இந்த அடிமை மனோபாவம் ஜனநாயகத்தை பீடித்திருக்கும் மிக மோசமான புற்றுநோயே அல்லாமல் வேறு என்ன ?
நன்றி : சவுக்கு
No comments:
Post a Comment