Latest News

தங்கம்! தங்கம்!


லண்டன்: உலகளவில் உள்ள மொத்த தங்கத்தில் 11 சதவீதம் இந்தியர்களிடம் தான் உள்ளதாகவும், இந்தியர்களின் வீடுகளில் உள்ள தங்கத்தின் மதிப்பு 50 லட்சம் கோடியைத் தாண்டும் ($950 billion) என்று தெரியவந்துள்ளது.

Macquarie Research என்ற சர்வதேச நுகர்வோர் ஆய்வு நிறுவனம் நடத்தியுள்ள ஆய்வில் இந்த விவரம் தெரியவந்துள்ளது.

இந்திய வீடுகளில் மட்டும் 18,000 டன் தங்கம் உள்ளது (ஒரு டன் என்பது 1,000 கிலோ. இதன்படி பார்த்தால் இந்தியர்களின் வீடுகளில் உள்ள மொத்த தங்கத்தின் எடை 1.80 லட்சம் கோடி).

இது நாட்டின் ஒட்டுமொத்த உற்பத்தி (GDP) மதிப்பில் 50 சதவீதம் ஆகும். நாட்டின் மக்கள் தொகையில் 8 சதவீதம் பேர் தங்களது சேமிப்பில் பெரும்பாலானதை தங்கத்தில் தான் முதலீடு செய்து வைத்துள்ளனர் என்றும் கூறப்பட்டுள்ளது.

தங்கத்தின் விலையில், கடந்த 2010ம் ஆண்டு ஜனவரி முதல் 2011 செப்டம்பருக்குள் 64 சதவீதம் அதிகரித்துவிட்டது. ஆனாலும், உலகிலேயே மிக அதிகமாக தங்கம் வாங்கும் மக்களும் இந்தியர்கள் தான்.

கச்சா எண்ணெய் மற்றும் மூலதனப் பொருட்களுக்கு (capital goods) அடுத்தபடியாக இந்தியா இறக்குமதி செய்யும் 3வது மிகப் பெரிய விஷயமும் தங்கம் தான். கடந்த 2010ம் ஆண்டில் இந்தியாவின் தங்கம் தேவையில் 92 சதவீதம் இறக்குமதி மூலம் தான் பூர்த்தி செய்யப்பட்டது என்றும் அந்த ஆய்வு தெரிவித்துள்ளது.

தங்கத்தில் முதலீடு செய்வதில் சீன மக்கள், இந்தியர்களுக்கு அடுத்த நிலையில் உள்ளனர்.

பொருளாதார வளர்ச்சியைத் தடையாக மாறி வரும் இந்தியர்களின் தங்க மோகம்

மின்னும் பொன்னைப் பார்ப்பதற்கு பளிச்சென சந்தோஷமாக இருக்கலாம். ஆனால் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சியை இது கடுமையாக பாதிக்கும் அளவுக்குப் போய்க் கொண்டிருக்கிறது என்று பொருளாதார நிபுணர்கள் கூறுகிறார்கள்- இதுதான் அதிர்ச்சியாக உள்ளது.

இந்தியாவின் பொருளாதார வளர்ச்சியைத் தடுக்கக்கூடிய வகையில் இந்தியர்களின் தங்க மோகம் இருப்பதாக உலக தங்க கவுன்சில் கூறியுள்ளது. 2011 ஏப்ரல் - ஜூன் மாதம் வரையிலான காலகட்டத்தில் இந்தியாவின் தங்க இறக்குமதி அளவு 60 சதவீதமாக அதிகரித்துள்ளதாம். பணவீக்கம் படு மோசமாக உள்ள நிலையிலும் கூட மக்கள் அதைப் பொருட்படுத்தாமல் தங்கத்தின் மீது பெருமளவில் செலவித்து வருகின்றனராம்.

இந்தியாவின் இறக்குமதி பொருட்களில், கச்சா எண்ணெய்க்கு அடுத்த இடத்தில், அதாவது 2வது இடத்தில் தங்கம் உள்ளது. இது 2007-08 காலகட்டத்தில் 5வது இடத்தில் இருந்தது.

ஆனால் இப்படி தங்கம் மீதான இந்தியர்களின் மோகத்தால், வளர்ச்சி விகிதம் கடும் பாதிப்பை சந்திக்கிறதாம். தங்கத்தில் பணத்தைப் பெருமளவில் முடக்கி வைப்பதால், பணப் புழக்கம் பெரும் முடக்கத்தை சந்திப்பதாக கூறுகிறது தங்க கவுன்சில். வங்கி லாக்கர்களில் சிவனே என்று தூங்கிக் கொண்டிருக்கும் தங்க நகைகள், பிஸ்கட்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாகவும் அது கூறுகிறது.

இதுகுறித்து எச்டிஎப்சி வங்கியின் தலைமை பொருளாதார நிபுணர் அபீக் பரூவா கூறுகையில், தங்கத்தின் மீது செலவழிக்கப்படும் பணம் கிட்டத்தட்ட வீண் என்றுதான் சொல்ல வேண்டும். இதன் மீதான பணப் புழக்கம், பிற செயல்களுக்குப் பயன்படாமல் முடங்கிப் போய் விடுவதால் தங்கத்திற்காக செலவழிப்பது என்பது கிட்டத்தட்ட வீன் செலவாகவே உள்ளது என்றார்.

உருப்படியான செலவுகளுக்குப் பணத்தை இறைப்பதற்குப் பதில் பெரும்பாலானவர்கள் தங்கத்திற்காக நிறைய செலவழிப்பதால் பிற நிதித் தேவைகளுக்கு போதிய பணம் கிடைக்காத நிலை ஏற்படுகிறது.

பிற நிதி சேமிப்புகள் தற்போது மக்களிடையே குறைந்து விட்டன. தங்கத்தின் மீது சேமிக்கவே அதிக விருப்பம் காட்டுகின்றனர். இதனால் அவர்களுக்குப் பெரிய அளவில் பலன் இல்லை என்பது மக்களுக்குத் தெரியவில்லை என்கிறார் கோடக் வங்கியின் தலைமை பொருளாதார நிபுணர் இந்திரணில் பான். அவர் கூறுகையில், முன்பெல்லாம் நிலம் வாங்குவது, வீடு வாங்குவது, பிக்சட் டெபாசிட் போடுவது, வங்கியில் பணத்தை சேர்த்து வைப்பது உள்ளிட்ட பல்வேறு நிதிச் சேமிப்புகளில் மக்கள் ஆர்வம் காட்டினார்கள். ஆனால் இப்போது தங்கத்திற்கு மாறியுள்ளனர். ஆனால் இது ஜிடிபியின் வளர்ச்சியில் கணிசமான பாதிப்பை ஏற்படுத்தும் என்று அவர்களுக்குத் தெரியவில்லை என்றார்.

தேவையில்லாமல் நமது சேமிப்பு முடங்கி்ப போவதுதான் தங்கத்தின் மீது பணத்தைக் கொட்டுவதால் கிடைக்கும் லாபம் என்பது நிதி ஆலோசகர்களின் கணிப்பு.

மக்களுக்கு திடீரென தங்கத்தின் மீது மோகம் பிறந்ததற்குக் காரணம் உலகளாவிய அளவில் ஏற்பட்ட நிதி நெருக்கடியும், அதிகரித்து வரும் தங்கம் விலையுமே காரணம் என்கிறார்கள். இப்போதே வாங்கி வைத்து விட்டால் நாளை தங்கம் விலை மேலும் கூடும்போது மதிப்பு அதிகரிக்கும் என ம்க்கள் கருதுகிறார்கள். இதனால்தான் தங்கம் பக்கம் மக்கள் கவனம் திரும்பியுள்ளதாக கூறப்படுகிறது.

இந்தியாவில் தங்கம் பெரிய அளவில் உற்பத்தி செய்யப்படுவதில்லை.

பெரும்பாலான தங்கத்தை நாம் வெளியிலிருந்துதான் இறக்குமதி செய்து வாங்கி விற்கிறோம் என்பது குறிப்பிடத்தக்கது.

தங்கத்தின் மீது பணத்தை முடக்குவதை வீடு போன்றவற்றை நாம் அதிகம் வாங்கினால் பணச் சுற்றாவது நிற்காமல் தொடரும் வாய்ப்புகள் உள்ளன என்பது பொருளாதார நிபுணர்களின் கருத்தாகும்.

அதிகரித்து வரும் தங்க முதலீடுகளால் இப்போது பெரியளவில் பாதிப்பு வரவில்லை என்றாலும் கூட, பிற முதலீடுகளில் மக்கள் நாட்டம் குறைந்து பெருமளவில் தங்க முதலீடுகள் அதிகரிக்கும்போது நிச்சயம் அது பொருளாதாரத்தை கடுமையாக பாதிக்கும் என்றும் அவர்கள் எச்சரிக்கிறார்கள்.

source: thatstamil.com

No comments:

Post a Comment

TIYA

WEBSITE DESIGNED BY: NOORUL IBN JAHABER ALI WEBSITE CONTROLLED BY: DOT COLORS
sourceNOORUL IBN JAHABER ALI Copyright © 2015

Theme images by Bim. Powered by Blogger.