இந்த வருடம் முடிவதற்குள் இரண்டு மெகா பிம்பங்கள் நொறுங்கிப் போயிருக்கின்றன. ஒன்று அப்துல் கலாம். இன்னொன்று அண்ணா ஹசாரே. அப்துல் கலாமின் பிம்பமாவது சுமார் பத்து வருடங்கள் தாக்கு பிடித்திருக்கிறது. அண்னா ஹசாரே பிம்பம் 2011 ஆரம்பத்தில் உருவாக்கப்பட்டு வருடக் கடைசியில் கலைந்துவிட்டது.
இரண்டு அசலான மக்கள் பிரச்சினைகளில் இருவரும் எடுத்த நிலைதான் இருவரது பிம்பங்களும் காலியாகக் காரணம்.
கூடங்குளம் அணு உலைப் பிரச்சினையில் ஆயிரக்கணக்கான மக்கள் அன்றாடம் கூடிப் போராடிக் கொண்டிருக்கும்போது, அணு உலை பாதுகாப்பானது என்று அவசர அவசரமாக நற்சான்றிதழ் வழங்க அப்துல் கலாமை மத்திய அரசு ஏவிவிட்டது. பதவியில் இருந்தபோது குஜராத் முஸ்லிம் படுகொலைகள் உட்பட எந்த சமூகப் பிரச்சினையிலும் கறாராகக் கருத்து சொல்லாதவர், இப்போது அணு உலைக்காக ஆக்ரோஷமாக குரல் எழுப்பினார். எங்களை நேரடியாக வந்து சந்தித்துப் பேசுங்கள் என்று கூடங்குளம் மக்கள் எழுப்பிய கோரிக்கையை அவர் கண்டுகொள்ளவே இல்லை. கலாம் வாழ்க்கை முழுக்கவும் ராணுவ சார்பான தொழில்நுட்ப வளர்ச்சியில் மட்டுமே ஈடுபட்டவர். அவர் அணுகுண்டு, அணு உலைகளுக்கு ஆதரவு தெரிவிப்பதில் ஆச்சரியமில்லை. ஆனால் எப்போதும் குழந்தைகளுடன் உட்கார்ந்து போஸ் கொடுத்து மீடியா வளர்த்த பிம்பத்தால் அவரைப் பெரிய சமாதான விரும்பி என்று தவறாக நம்பிய நம் மேல்தான் தப்பு. குழந்தைகளின் புத்தகச் சுமையைக் கூடக் குறைக்க அவர் எதுவும் செய்ததில்லை. கூடங்குளத்தில் இன்னும் இயங்க ஆரம்பிக்காத உலையைப் பாதுகாப்பானது என்று சொல்ல முடிந்த கலாமுக்கு, தமிழ்நாட்டின் இன்னொரு பெரிய கவலையான முல்லைப் பெரியாறில் செயல்பட்டு வரும் அணை பாதுகாப்பானதா இல்லையா என்று சொல்ல தைரியமில்லை.
அண்ணா ஹசாரேவின் பிம்பம் ஒரு வருடம் கூட தாங்கவில்லை. மீடியா உதவியுடன் அவர் நடத்திய லோக்பால் போராட்டம் ஜனநாயக விரோதமான போராட்டமாக மாறிவிட்டது. பிரதமர், நாடாளுமன்றம், உச்ச நீதிமன்றம் அனைத்துக்கும் மேலே ஒரு சர்வாதிகாரியாக லோக்பாலை உருவாக்கியே தீருவேன் என்று அவரும் அவரது குழுவும் காட்டும் பிடிவாதம் ஜனநாயகத்துக்கே ஆபத்தானது. லோக்பாலை ஒரு சர்வரோக சஞ்சீவியாக அவர் சித்திரித்துக் கொண்டே இருந்தார். கடைசியில் ஹசாரே மூன்று மாதங்களுக்கொரு முறை உண்ணாவிரதம் நடத்திக் கொண்டே இருப்பது ஒரு தமாஷாகிவிட்டது. ஒரு லட்சம் பேர் திரளுவார்கள் என்று எதிர்பார்த்து அவர் குழுவினர் பல லட்சம் ரூபாய் வாடகையில் மும்பையில் தேர்வு செய்த மைதானத்தில் கடைசியில் திரண்டது வெறும் 5 ஆயிரம் பேர்தான்.
சென்னையில் ஹசாரே குழுவினருக்கு உட்கார்ந்து உண்னாவிரதப்போராட்டம் நடத்த தன் கல்யாண மண்டபத்தை இலவசமாகக் கொடுத்து உதவியவர் ரஜினிகாந்த். இவரும் ஈழத்தமிழர் அவலம் முதல் கூடங்குளம், முல்லைப் பெரியாறு எதற்கும் வாயைத் திறக்காதவர். பகிரங்கமாகவே அத்வானி, மோடி அபிமானி. அவர்களோ இப்போது அண்ணா அபிமானிகள். ஜோதியில் ரஜினியும் கலந்தாயிற்று.
அண்ணாவுக்குப் பின்னாலிருந்து இயக்குவது ஆர்.எஸ்.எஸ் சார்பாளர்கள்தான் என்பது மெல்ல மெல்ல அம்பலமாகிவிட்டது. 1983ல் அண்ணா ஹசாராவே ஆர்.எஸ்.எஸ்சில் பங்கேற்றவர் என்பதை நயி துனியா ஏடு வெளிப்படுத்தியிருக்கிறது. இப்போது ஆர்.எஸ்.எஸ், பி.ஜே.பி வகையறாக்களின் நோக்கம், காங்கிரஸ் ஆட்சிக்கு தொல்லை கொடுத்து முடியுமானால் இடைத்தேர்தல் வரச் செய்வதுதான். அதற்கு அண்ணா ஹசாரே ஒரு கருவியாகப் பயன்படுத்தப்படுகிறார் என்று இப்போது பரவலாகத் தெரிந்துபோய்விட்டது. அவருடைய லோக்பால் மசோதாவை எந்தக் கட்சியும் முழுமையாக ஒப்புக் கொள்ளாதபோதும், காங்கிரசுக்கு எதிராக மட்டுமே தேர்தல் பிரசாரம் செய்தார். கடைசியாக இந்த வாரம் லோக்பால் மசோதாவை அவையில் நிறைவேற்ற காங்கிரஸ் ஆட்சி நடவடிக்கை எடுத்தபின்னர் கூட, இன்னும் மூன்று நாட்களில் நிறைவேற்றாவிட்டால் ஐந்து மாநிலத் தேர்தல்களிலும் காங்கிரசுக்கு எதிராகப் பிரசாரம் செய்வேன் என்று மிரட்டினார். மசோதாவை நிறைவேற்ற விடாமல் தடுத்தது பி.ஜே.பிதான். திரும்பவும் கமிட்டிக்கு அனுப்பி சில மாதங்கள் கழித்து நிறைவேற்றலாம் என்று சுஷ்மா ஸ்வராஜ் வற்புறுத்திக் கொண்டே இருந்தார்.
இதையெல்லாம மீறி காங்கிரஸ் சொன்னபடி லோக்பால் மசோதாவை மக்களவையில் நிறைவேற்றியிருக்கிறது. எதிர்க்கட்சிகள் சொன்ன சில திருத்தங்களை ஏற்றுக் கொண்டிருக்கிறது. லோக்பாலுக்கு அரசியல் சட்ட அந்தஸ்து தரும் தீர்மானம் மட்டுமே தோல்வியடைந்தது. இது கூட எதிர்க்கட்சிகள் ஒத்துழைத்திருந்தால் நிறைவேறியிருக்க முடியும். லோக்பாலை, தணிக்கை அதிகாரி, தேர்தல் கமிஷன் போல அரசியல் சட்ட ஒப்புதல் உடைய அமைப்பாக ஆக்கியிருந்தால் லோக்பால் நிச்சயம் பலமுள்ளதாக இருக்க முடியும். அப்படி ஆகவிடாமல் தடுத்தது பி.ஜே.பியும் இடதுசாரிகளும்தான்.
இப்போது மக்களவையில் நிறைவேற்றப்பட்டுள்ள லோக்பால் சட்டம் மாநிலங்களவையில் நிறைவேறுமா என்பது சந்தேகம்தான்.அங்கே வேறு திருத்தங்களுடன் நிறைவேறினால், மறுபடியும் அந்த திருத்தங்களுக்கு ஒப்புதல் தர மக்களவைக்கு வரவேண்டியிருக்கும். மாநிலங்களவையில் சிக்கல் இருந்தால், இரு அவைகளின் கூட்டுக் கூட்டத்தைக் கூட்டி அங்கே நிறைவேற்ற காங்கிரஸ் அரசு முயற்சிக்கலாம். இந்த இதழ் வெளிவரும்போது நிலைமை தெரிந்துவிடும். முதற்கட்டமாக இப்போதைய லோக்பால் மசோதாவைக் கூட கொண்டு வரவிடாமல் எதிர்க்கட்சிகள் ஒரேயடியாக தடுத்தால், அவர்கள்தான் மக்களிட்ம அம்பலப்பட்டுபோவார்கள்.
இப்போது வந்திருக்கும் லோக்பால் மசோதாவில் அண்ணா ஹசாரே கோரியபடி பிரதமரையும் விசாரிக்கும் அதிகாரம் தரப்பட்டாகிவிட்டது. லோக்பால் குழுவுக்கு உறுப்பினர்களை பரிந்துரைக்கும் குழுவிலும், லோக்பால் குழுவிலும் 50 சத விகிதம் இட ஒதுக்கீடு – பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட சாதிகள், சிறுபான்மை மதத்தினர் ஆகியோருகு தரப்பட்டிருக்கிறது. இந்த இட ஒதுக்கீட்டை அண்ணா ஹசாரே குழுவும் பி.ஜே.பியும் எதிர்க்கின்றன. பாராளுமன்ற ஜனநாயக அமைப்பில், தேர்தலில் நிற்காத சிவில் சொசைட்டி சொல்வதையும் கேட்கவேண்டுமென்று வாதாடுபவர்கள் போராடுபவர்கள், சமூகத்தின் பலவேறு பிரிவுகளுக்கு லோக்பாலில் பிரதிநிதித்துவம் தருவதை மட்டும் எதிர்ப்பது அவர்களுடைய அசல் நோக்கத்தைக் காட்டிக் கொடுக்கிறது.
லோக்பாலின் தலைவரை தேர்வு செய்யும் குழுவில் பிரதமர், எதிர்க்கட்சித்தலைவர், உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ஆகியோர் இடம் பெறுவார்கள் என்று மசோதாவில் வகை செய்யப்பட்டிருக்கிறது. இது நிச்சயம் ஆரோக்கியமான அணுகுமுறைதான். லோக்பாலின் கீழ் சி.பி.ஐயைக் கொண்டு வரவேண்டுமென்ற அண்ணாவின் கோரிக்கை ஏற்கப்படவில்லை. அதற்கு பதில் சி.பி.ஐயை அரசு ஏவல் நாயாக இல்லாமல் சுயேச்சையாக ஆக்க ஒரு நடவடிக்கையை எடுக்க அரசு முன்வந்திருக்கிறது. சி.பி.ஐயின் இயக்குநரை நியமிக்கும் குழுவில் பிரதமருடன் எதிர்க்கட்சித்தலைவரும், உச்ச்ச நீதிமன்ற நீதிபதியும் இருப்பார்கள் என்று அரசு அறிவித்திருக்கிறது. இதுவும் வரவேற்கத்தக்க அணுகுமுறைதான்.
லோக்பாலின் கீழேயே விசாரணை அமைப்புகளைக் கொண்டு வரவேண்டுமென்று அண்னா குழு சொல்வது நிரகாரிக்கப்பட்டது சரி. அதில் லோக்பாலை இன்னொரு போட்டி அரசு போல ஆக்கிவிடும் ஆபத்து உள்ளது. அதே சமயம் மத்திய கண்காணிப்பு ஆணையம், சி.பி.ஐ ஆகியவற்றின் விசாரணையைக் கண்காணிக்கும் அதிகாரம் லோக்பாலுக்கு தரப்படுகிறது. இது நல்ல அம்சம். இப்படி சி.பி.ஐயின் விசாரணையைக் கண்காணிக்கும் அதிகாரத்தைப் பயனப்டுத்தித்தான் உச்ச நீதிமன்றம் ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கில் பல நல்ல கடும் நடவடிக்கைகளை எடுக்க முடிந்தது. அதே போன்ற அதிகாரம் லோக்பாலுக்கும் தரப்பட்டிருக்கிறது.
எனவே இப்போது காங்கிரஸ் அரசு கொண்டு வந்திருக்கும் லோக்பால் மசோதாவை முழுக்கவும் மோசடியானது என்றோ பலவீனமானது என்றோ ஒதுக்கமுடியாது. இன்னும் கூடுதல் அதிகாரங்கள் தருவது இன்னொரு போட்டி அரசாக லோக்பாலை ஆக்கும் ஆபத்து கண்டிப்பாக உள்ளது. உண்மையில் இப்போது கொண்டு வரபட்டுள்ள லோக்பாலைக் கொண்டே பல மாற்றங்களை ஏற்படுத்தமுடியும். தேர்தல் ஆனையத்தில் டி.என்.சேஷன் தொடங்கி வந்த ஆணையர்கள் பலரும் செய்த முக்கிய பணிகள் எதற்கும் புது சட்டங்கள் போடப்படவில்லை.
நன்றி : Sirajudeen
No comments:
Post a Comment