என். முருகன்
அரசு நிர்வாகம், ஊழலால் பாதிக்கப்பட்டுள்ளது என்பது உண்மை. எனவே, அதை எதிர்த்து சமூக ஆர்வலர்கள் போராட முனைந்திருப்பது நியாயம்தான். ஆனால், நிர்வாகம் சரியாகிவிட்டாலும், ஒரு நாடு சர்வதேச அரங்கில் போட்டியிட்டு வெற்றி நடைபோடும் ஒரு பொருளாதார சக்தியாக உருவாக நமது உயர்கல்வியின் தரம் உயர்த்தப்பட வேண்டும். நம் நாட்டின் முன்னேற்றத்துக்குத் தடையாக இருப்பது நமது உயர்கல்வி தரக்குறைவாக இருப்பதுதான் எனும் உண்மையை நம் ஆட்சியாளர்களும் மக்களும் ஏனோ புரிந்துகொள்ளவில்லை...
அமெரிக்காவின் நிர்வாகவியலின் குருநாதர் என எல்லோராலும் ஒத்துக்கொள்ளப்பட்ட பீட்டர் ட்ரக்கர் எனும் அறிஞர், ""இதுவரை சரித்திரத்தில் காணப்படாத வகையில் அறிவுசார்ந்த சமூகம் அமையப்பட்ட நாடுகள் பிற நாடுகளைவிட அதிகம் முன்னேறும். இனி உலகில் பணக்கார நாடுகள், ஏழை நாடுகள் எனும் பாகுபாடு அகன்று, அறிவுசார்ந்த சமூகத்தை உடைய நாடுகள், சாதாரண அறிவுû டய நாடுகள் எனும் வித்தியாசம் உருவாகும்'' என பத்து ஆண்டுகளுக்கு முன் கூறியிருப்பது கவனிக்கத்தக்கது. அதாவது பொருளாதார வளர்ச்சிக்காக நாடுகளின் மத்தியில் உருவாகும் போட்டிகளின் விளைவாக உயர் கல்வி, ஆராய்ச்சி என்று விரிவடைந்து, அதன் விளைவாகப் புதிய கண்டுபிடிப்புகள் மேம்பாட்டுக்கு வழிவகுக்கும்.
அந்த வகையில் இன்றைய அறிவுசார்ந்த சமூகத்தை வைத்து நாடுகளைப் பட்டியலிட்டால், அமெரிக்காவுக்குத்தான் முதலிடம். உலகின் விஞ்ஞான, கனரகப் பொருள்களின் உற்பத்தியில் மூன்றில் ஒரு பங்கு அமெரிக்காவில் நடைபெறுகிறது எனக் கணக்கிடப்பட்டுள்ளது. இதற்குக் காரணம் அந்நாட்டில் உயர் கல்வி வழங்கும் பல்கலைக்கழகங்களிலும், ஆராய்ச்சிக் கூடங்களிலும் நடைபெறும் ஆராய்ச்சிதான் எனக் கூறப்படுகிறது.
இந்தியாவில் சர்வதேச அளவில் ஆராய்ச்சிக் கட்டுரைகள் பிரசுரமாவதும், இந்திய ஆராய்ச்சிகளைப் பற்றி உலகின் மற்ற நாட்டு விஞ்ஞானிகள் மேற்கோள் காட்டி விவாதிப்பதும் வெறும் மூன்று சதவிகிதமே என 2010-ம் ஆண்டுக்கான கணக்கெடுப்பு கூறுகிறது.
இதுபோன்ற ஒரு மிகவும் சாதாரணமான ஒரு நிலைமைக்கு நமது உயர்கல்வி மற்றும் ஆராய்ச்சி தள்ளப்பட்டுவிட்டது ஏன் என்ற கேள்வி எழுகிறது. நமது நாட்டில் பள்ளிக்கல்வியை முடித்து கல்லூரியில் சேரும் மாணவர்களின் விகிதம் ஒன்பதுக்கு ஒன்று. அதாவது, 9 பேர் பள்ளியில் படித்து முடித்தால் அதில் ஒரு மாணவர்தான் கல்லூரிப் படிப்பில் சேரும் நிலைமை.
கல்லூரியில் படித்துமுடிக்கும் மாணவர்களில் 11 சதவிகிதம்தான் உயர்கல்வியில் சேருகின்றனர். ஆனால், முதல்தரமான அறிவுசார்ந்த சமூகத்தை அமைத்துவிட்ட அமெரிக்காவில் கல்லூரிப் படிப்பை முடித்துவிட்ட மாணவர்களில் 83 சதவிகிதத்தினர் உயர்கல்வியில் சேர்ந்து விடுகிறார்கள்.
சரி, இதுபோன்ற நிலைமையைச் சரிசெய்ய நமது அரசு என்ன திட்டம் வைத்திருக்கிறது என்பதைப் பார்ப்போம்.
மேலே கூறிய 2007-ம் ஆண்டின் உயர்கல்வி சேர்க்கையான 11 சதவிகிதத்தை 15 சதவிகிதமாக 2012-ம் ஆண்டில் உயர்த்த நமது மத்திய அரசின் 11-ம் ஐந்தாண்டுத் திட்டத்தில் 2 லட்சத்து 26 ஆயிரத்து 410 கோடி ரூபாய் ஒதுக்கப்பட வேண்டும். ஆனால், நிதிப் பற்றாக்குறையால் 77 ஆயிரத்து 933 கோடி ரூபாய்தான் ஒதுக்க முடிந்தது. அதாவது, 25 சதவிகிதம் நிதிதான் ஒதுக்கப்பட்டது. அப்படியிருக்கும்போது உயர்கல்வி எனப்படும் எம்.ஏ., எம்.எஸ்ஸி., எம்.டெக்., எனப்படும் பட்ட மேற்படிப்பில் மாணவர் சேர்க்கையைக் குறைந்தபட்சம் 15 சதவிகிதம்கூட உயர்த்த முடியவில்லையே எனும் கவலை உயர் கல்வி மீது அக்கறை உள்ள பலருக்கும் ஏற்பட்டுள்ளது.
குறைந்த எண்ணிக்கையில் உயர் கல்வியைப் பெற்றாலும், அவ்வாறு முதுகலை முடித்து உயர்கல்வி பட்டம் பெற்றவர்களின் அறிவுத்திறன் எப்படி உள்ளது எனத் தெரிந்துகொள்ளும் வகையில் நாஸ்காம் - மக்கின்சி எனும் சர்வதேச ஆராய்ச்சியாளர்கள் இந்தியாவில் செய்த ஆய்வின்படி, எம்.ஏ., எம்.எஸ்ஸி., பட்டம் பெற்றவர்களில் 10 பேருக்கு 1 மாணவர்தான் வேலை செய்யும் அறிவுத்தகுதியைப் பெற்றிருக்கிறார் எனத் தெரியவந்துள்ளது. மேலும், 4 பொறியியல் பட்டம் பெற்றவர்களில் 1 மாணவர்தான் வேலைக்கான திறன் பெற்றிருப்பதாகத் தெரிவிக்கிறது.
உயர்கல்விக்கான தேசிய ஆய்வு மற்றும் அங்கீகாரக் குழு நடத்திய ஆய்வின்படி நம் நாட்டின் 90 சதவிகித கல்லூரிகளும் 70 சதவிகித பல்கலைக்கழகங்களும் தரமான கல்வியை வழங்க முடியாமல் தரமற்ற பட்டதாரிகளை உருவாக்குகிற கல்வி நிலையங்களாக இயங்குகின்றன. இதுபோன்ற ஒரு பரிதாபமான நிலைமைக்குக் காரணம்தான் என்ன?
மத்திய திட்டக்கமிஷன் உறுப்பினரான டாக்டர் நரேந்திர ஜாதவ், உறுப்பினராகத் தேர்ந்தெடுப்பதற்கு முன்பு மகாராஷ்டிர மாநிலத்தின் புனே பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக இருந்தார். அவரது கூற்றுப்படி புனே பல்கலைக்கழகத்தின் பாடத்திட்டம், கடந்த 30 ஆண்டுகளாகப் புதுப்பிக்கப்படவில்லை எனத் தெரிகிறது. இந்தச் செய்தியைக் கேட்டு இந்தியாவின் உயர்கல்வியைப் பற்றி ஆராய்ச்சி செய்யும் பலரும் அதிர்ந்துபோய் இருக்கிறார்கள்.
மாணவர்களுக்குப் பாடத்திட்டங்கள் மற்றும் பட்டப்படிப்புக்கான பாடப்புத்தகங்கள் ஒவ்வொரு செமஸ்டருக்கும் மாற்றியமைக்கப்படும், அதாவது உயர் நிலைமைக்கு நகர்த்தப்படும். அதற்கு அங்கே கூறப்பட்ட முக்கியமான காரணம் மிக அதிக அளவில் ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்படுவதால் நிறைய புதிய கண்டுபிடிப்புகள் ஒவ்வோராண்டு முடிவிலும் வெளியிடப்பட்டு, அவை பாடத்திட்டங்களில் புகுத்தப்பட வேண்டும் என்பதுதான். எனவே, அமெரிக்கப் பல்கலைக்கழகங்களில் பாடத்திட்டங்கள் ஆண்டுதோறும் புதுப்பிக்கப்படுகின்றன.
ஆனால், இந்தியாவிலோ 30 ஆண்டுகள் பாடத்திட்டங்கள் புதுப்பிக்கப்படாத நிலைமையில் இயங்கும் ஒரு பல்கலைக்கழகத்தின் கல்லூரிகளிலிருந்து பட்டதாரியாக வெளியே வரும் பட்டதாரிகளின் அறிவுத்திறன் எப்படி அவர்கள் செய்யும் உயர் வேலைகளில் பணியாற்ற ஏற்றதாக இருக்கும்?
அரசின் நிதிநிலைமை சரியில்லை என்பதாலும், பல மாநிலங்களில் கல்விக்கு ஒதுக்குவதைவிட ஓட்டு வங்கி அரசியலுக்கான இலவசங்களுக்கு அதிக நிதி ஒதுக்கப்படுவதாலும் தனியார் கல்லூரிகள் அதிகம் தொடங்கப்படுகிற நிலைமை நமது நாட்டில் நிலவுகிறது. சரி, அப்படியே தனியார் கல்லூரிகள் நிறைய அளவில் தொடங்கப்பட்டாலும், அவை தரமானவையாக நடத்தப்படுகின்றனவா என்றால் இல்லை என்பதே பதில். காரணம், இவற்றைக் கண்காணிக்கும் மத்திய, மாநில அரசுகளின் நிர்வாக அமைப்புகள் சரியான கண்காணிப்பைவிடத் தனியார் பல்கலைக்கழகங்களும், கல்லூரிகளும் தரும் கவனிப்புகளைத்தான் கவனிக்கின்றன.
ஏற்கெனவே கல்வியின் தரம் பாதிக்கப்பட்டுவிட்டிருக்கும் நிலையில் "நிகர்நிலை'ப் பல்கலைக்கழகங்கள் ("டீம்டு யுனிவர்சிட்டி'கள்) பல நாடெங்கிலும் தோன்றி தங்கள் விருப்பப்படி பாடத்திட்டங்களை வகுக்கின்றன. இதெல்லாம் போதாதென்று, நம் நாட்டில் ஆசிரியர்கள் பற்றாக்குறைவேறு தலைவிரித்தாடுகிறது.
1967-ம் ஆண்டு எம்.எஸ்ஸி., பட்டம் பெற்ற பலர், தங்களது 58-வது வயதில் ஓய்வுபெற்ற பின்னரும் தொடர்ந்து தனியார் கல்லூரிகளில் விரிவுரையாளர்களாகப் பணியாற்றி வருகிற நிலைமை. பல கல்லூரிகளில் இந்த ஆண்டு எம்.ஏ., எம்.எஸ்ஸி., பட்டம் பெற்றவர்கள் உடனடியாக அதே கல்லூரியில் ஆசிரியர்களாக மிகக்குறைந்த சம்பளத்தில் பணியில் அமர்த்தப்படுகிற கொடுமையும் காணப்படுகிறது. இதுபோன்ற பரிதாபமான தரமற்ற சூழ்நிலை உருவாக நமது மத்திய, மாநில அரசுகளின் கல்விக் கொள்கைகளே காரணம். நிகர்நிலைப் பல்கலைக் கழகங்கள் உயர் கல்விக்குக் கேடு என்பதை பல கல்வியாளர்கள் எடுத்துக்கூறிய பின்பும் தொடர்ந்து பல நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களுக்கு அனுமதி வழங்கி நமது உயர்கல்வியை சீர்குலைத்த பெருமை நேரு குடும்பத்தின் அசைக்க முடியாத விசுவாசி அர்ஜுன் சிங்கைச் சாரும்.
50 ஆண்டுகளில் 44 தனியார் கல்வி நிலையங்கள் நிகர்நிலைப் பல்கலைக்கழகங்கள் எனும் தகுதியைப் பெற்றன. ஆனால், அர்ஜுன் சிங் மத்திய கல்வித்துறையை நிர்வகித்த காலத்தில் மட்டும் கூடுதலாக 49 தனியார் நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களுக்கு அனுமதி வழங்கிவிட்டார்.
நம் நாட்டின் உயர்கல்வி தரமானதாக இல்லாத காரணத்தால் நம் நாட்டு வசதி படைத்தவர்கள் தங்கள் பிள்ளைகளை வெளிநாட்டுக்கு அனுப்பிப் படிக்கவைக்க ஆண்டுதோறும் ரூ. 3,500 கோடிகள் செலவு செய்கிறார்கள் என ஒரு புள்ளிவிவரம் கூறுகிறது. வசதி இருக்கிறது, செலவு செய்து படிக்க வைக்கிறார்கள். வசதி இல்லாத நிலையில், பல புத்திசாலி இளைஞர்கள் வாய்ப்புக் கிடைக்காததால் தங்களது திறமையை வீணாக்க வேண்டிய துரதிர்ஷ்ட நிலை ஏற்படுகிறது.
அதிகக் கட்டணம் செலுத்தி வசதி படைத்த மாணவர்கள் தரமான கல்வியைப் பெறுவது வரவேற்கத்தக்கது. அதே நேரத்தில், வசதியில்லாத மாணவர்கள் அரசு கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள் ஆகியவற்றில் தரமான கல்வியைப் பெறும்படி செய்வது மாநில அரசின் கடமை. ஓர் அரசுப் பல்கலைக்கழகத்தில் துணைவேந்தராக வர குறைந்தபட்சம் 5 முதல் 10 கோடி ரூபாய் வரை கையூட்டுக் கொடுக்கும் நிலை இருப்பதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்தவண்ணம் இருக்கின்றன. அதன் உச்சகட்டமாகப் பல்கலைக்கழக வேந்தர்களாகச் செயல்படும் மாநில ஆளுநர்களும் இதுபோன்ற நடவடிக்கைகளுக்கு கூட்டுச் சேர்ந்து செயல்படுகின்றனர் எனவும் கூறப்படுகிறது.
இதுபோல் மறைமுக நிதியை வழங்கி துணைவேந்தர் பதவி பெற்ற ஒருவர் உயர் கல்வி நிர்வாகத்தைக் கொச்சைப்படுத்துவதில் வியப்பென்ன இருக்கிறது?
உயர்கல்வியின் தரம் உயர ஆராய்ச்சிகளில் ஆசிரியர்கள் ஈடுபடுவது கட்டாயமாக்கப்பட வேண்டும் என்பது மேலைநாடுகளின் முதல் விதி. இரண்டு ஆண்டுகள் எந்தவோர் ஆராய்ச்சிக் கட்டுரையையும் பன்னாட்டு விஞ்ஞான இதழ்களில் பிரசுரிக்க முடியாத கல்லூரி ஆசிரியர் பணியிலிருந்து விடுவிக்கப்படுவார். இதில் எந்த எதிர்ப்பும் உருவாகாது.
இங்கே நிலைமை தலைகீழ். சரியாக ஆசிரியப் பணி செய்யாவிட்டாலும் கடைசிவரை காலத்தை ஓட்ட முடியும் என்ற நிலை. இதைப்பற்றியெல்லாம் கவலைப்பட நமது ஆட்சியாளர்களுக்கும், அரசியல்வாதிகளுக்கும், அதிகாரிகளுக்கும் எங்கே நேரம் இருக்கிறது
Mohamed Ismail
No comments:
Post a Comment