Latest News

சொர்க்கம் செல்லும் பாதை !!!

நபிமொழிகளில் கூறப்பட்டுள்ள சொர்க்கம் செல்லும் பாதைகளில் சிலவற்றை தங்கள் முன்வைக்...கின்றோம். அதன்படி செயல்படுபவர்களாக அல்லாஹ் நம் அனைவரையும் ஆக்கியருள்வானாக.

1- ஏகத்துவமும் தூதுத்துவமும்
அல்லாஹ்வை தன் இரட்சகனாகவும், இஸ்லாத்தை தன் வாழ்க்கை நெறியாகவும், முஹம்மது நபி (ஸல்) அவர்களை இறைத்தூதராகவும் யார் மனப்பூர்வமாக ஏற்றுக் கொள்கின்றாரோ அவருக்கு சொர்க்கம் கிடைப்பது உறுதியாகிவிட்டது... 

(நபிமொழி, அறிவிப்பவர் :அபூஸயீத் அல்குத்ரீ-ரலி, நூல்: முஸ்லிம்)


2- அல்குர்ஆன்
அல்குர்ஆனில் தேர்ச்சி பெற்றவர் தூய்மையான கண்ணியமிக்க மலக்குகளுடன் இருப்பார். அல்குர்ஆனைத் திக்கித்திக்கி கஷ்டப்பட்டு ஓதுபவருக்கு இரண்டு -மடங்கு- கூலியுண்டு.

(நபிமொழி, அறிவிப்பவர் : ஆயிஷா -ரலி, நூற்கள் : முஸ்லிம்)


கடமையான ஒவ்வொரு தொழுகைக்குப் பின்னரும் யார் ஆயத்துல் குர்ஸிய்யை ஓதுகின்றாரோ அவர் சொர்க்கம் செல்வதற்கு அவரின் மரணம்தான் தடையாக உள்ளது.

(நபிமொழி, அறிவிப்பவர் : அபூ உமாமா -ரலி, நூல் : நஸயீ)


அல்குர்ஆனில் 30 வசனங்களைக் கொண்ட ஒரு அத்தியாயம் உள்ளது. அதை ஓதிய மனிதனின் பாவங்கள் மன்னிக்கப்படும்வரை அது அவருக்காக பரிந்துரை செய்யும். அதுதான் தபாரக் அத்தியாயம்.
(நபிமொழி, அறிவிப்பவர் : அபூஹுரைரா -ரலி, நூல் : திர்மிதி)


குல் ஹுவல்லாஹு அஹத் சூராவை யாரேனும் பத்துத் தடவை முழுமையாக ஓதிமுடித்தால் அவருக்காக அல்லாஹ் சொர்க்கத்தில் ஒரு மாளிகையைக் கட்டுகிறான்.

(நபிமொழி, அறிவிப்பவர் : முஆத் -ரலி, நூல் : அஹ்மத்)


3- அஸ்மாவுல் ஹுஸ்னா

நிச்சயமாக அல்லாஹ்வுக்கு -நூறில் ஒன்று குறைய- 99 அழகிய பெயர்கள் உள்ளன. யார் அதனை மனனம் செய்துள்ளாரோ அவர் சொர்க்கத்தில் நுழைந்து விட்டார்.

(நபிமொழி, அறிவிப்பவர் : அபூஹுரைரா -ரலி, நூல் : முஸ்லிம்)


4- திக்ருகள்

ஸுப்ஹானல்லாஹில் அளீம் வபி ஹம்திஹீ என யாரேனும் கூறினால் அவருக்காக சொர்க்கத்தில் ஒரு பேரீத்த மரம் நடப்படுகிறது.
(நபிமொழி, அறிவிப்பவர் : ஜாபிர் -ரலி, நூல் : திர்மிதீ)

உங்களில் யாரேனும் ஒருவர் முறையாக உளுச் செய்து, பிறகு

அஷ்ஹது அன் லாயிலாஹ இல்லல்லாஹ், வஹ்தஹு லா ஷரீக்க லஹு, வஅஷ்ஹது அன்ன முஹம்மதன் அப்துஹு வரஸுலுஹு

என்று கூறுவரானால் சொர்க்கத்தின் எட்டு வாயில்களும் அவருக்காக திறக்கப்படுகின்றன. அதில் அவர் விரும்பி வாயிலில் நுழைந்து கொள்ளலாம்.
(நபிமொழி, அறிவிப்பவர் : உக்பா -ரலி, நூல் : முஸ்லிம்)


"லா ஹவ்ல வலா குவ்வத்த இல்லா பில்லாஹ்" என்பது சொர்க்கத்துப் பொக்கிஷங்களில் ஒரு பொக்கிஷமாகும்.
(நபிமொழி, அறிவிப்பவர் : அபூ மூஸா -ரலி, நூற்கள் : முஸ்லிம்)


5- பிரார்த்தனை
சொர்க்கத்தை வேண்டி மூன்று தடவை யாரேனும் அல்லாஹ்விடம் பிரார்த்தித்தால், இறைவா! அவரை சொர்க்கத்தில் நுழையச் செய்துவிடுவாயாக! என்று சொர்க்கம் கூறுகிறது. நரகத்தை விட்டும் காப்பாற்றும்படி வேண்டுமென மூன்று தடவை யாரேனும் -அல்லாஹ்விடம்- பிரார்த்தித்தால், இறைவா! இவரை நரகை விட்டும் காப்பாற்றுவாயாக! என நரகம் கூறுகிறது.

(நபிமொழி, அறிவிப்பவர் : அனஸ் -ரலி, நூல் : திர்மிதீ)


6- கல்வி
யாரேனும் ஒருவர் கல்வியைத் தேடிச் சென்றால் அதன் மூலம் அல்லாஹ் அவருக்கு சொர்க்கப் பாதையை எளிதாக்கிவிடுகின்றான்.
(நபிமொழி, அறிவிப்பவர் : அபூஹுரைரா -ரலி, நூல் : முஸ்லிம்)


7- வணக்க வழிபாடுகளும் பொதுப்பணிகளும்
மக்களே! ஸலாத்தைப் பரப்புங்கள்! பிறருக்கு உணவளியுங்கள்! உறவினர்களுடன் இணைந்து வாழுங்கள்! இரவில் மக்கள் உறங்கிக் கொண்டிருக்கும் போது நீங்கள் -எழுந்து- வணங்குங்கள்! -இவ்வாறு செய்வீர்களானால்- நிம்மதியாக சொர்க்கத்தில் நுழைவீர்கள்!.
(நபிமொழி, அறிவிப்பவர் : அப்துல்லாஹ்-ரலி, நூல் : திர்மிதீ)


8- பள்ளிவாயில் கட்டுதல்
காட்டுப் புறாவின் கூட்டைப் போன்றோ அல்லது அதனை விட சிறிய அளவிலோ யாரேனும் அல்லாஹ்வுக்காக பள்ளிவாயில் கட்டிக் கொடுத்தால் அல்லாஹ் அவருக்கு சொர்க்கத்தில் ஒரு வீட்டைக் கட்டிக் கொடுக்கின்றான்.
(நபிமொழி, அறிவிப்பவர் : ஜாபிர் -ரலி, நூல் : இப்னுமாஜா)

9- அறப்போர்
சொர்க்கம், வாள்களின் நிழல்களுக்கு கீழே உள்ளது.
(நபிமொழி, அறிவிப்பவர் : இப்னு அபீ அவ்ஃபா -ரலி, நூல் : புகாரீ)


10- தர்மம்
அல்லாஹ்வுடைய திருப்பொருத்தத்தைப் பெறும் நோக்கத்தில் யாரேனும் ஒரு தர்மம் செய்தால் அதன் மூலம் அவர் சொர்க்கத்தில் நுழைவது உறுதியாகி விட்டது. (நபிமொழி, அறிவிப்பவர் : ஹுதைஃபா -ரலி, நூல் : அஹ்மத்)


11- இரக்க சிந்தனை
ஒரு நாய் தாகத்தின் காரணமாக மண்ணை நக்கிக் கொண்டிருப்பதை கண்ட ஒருவர் தன் காலுறையைக் கழற்றி அதில் தண்ணீர் அள்ளி ஊற்றி அதன் தாகத்தைத் தணித்தார். இச்செயலை ஏற்றுக் கொண்ட அல்லாஹ் அதன் காரணத்தால் அவரை சொர்க்கத்தில் நுழையச் செய்தான்.
(நபிமொழி, அறிவிப்பவர் : அபூஹுரைரா -ரலி, நூல் : புகாரீ)


12- அநாதைகளுக்கு ஆதரவு
தன் உறவினருடைய அனாதைக்கோ, அல்லது பிறருடைய அனாதைக்கோ பொறுப்பேற்றவரும் நானும் சொர்க்கத்தில் இவ்வாறு -அருகில்- இருப்போம் என்று நபி (ஸல்) அவர்கள் தன் ஆள்காட்டி விரலையும் நடுவிரலையும் உயர்த்தி சைகை செய்தார்கள்.

(அறிவிப்பவர் :அபூஹுரைரா-ரலி, நூல்: முஸ்லிம்)


13- பெண் பிள்ளைகள்
இரண்டு பெண் குழந்தைகளை முறையாக வளர்ப்பவரும் நானும் சொர்க்கத்தில் இவ்வாறு நுழைவோம் என நபி (ஸல்) அவர்கள் தம் இரு விரல்களாலும் சைகை செய்தார்கள்.

(அறிவிப்பவர் : அனஸ் இப்னு மாலிக் -ரலி, நூல் : திர்மிதீ)


14- இறையச்சமும் நற்குணமும்
எந்தச் செயலின் காரணத்தால் மக்கள் அதிகமாக சொர்க்கத்தில் நுழைவார்கள்? என நபி (ஸல்) அவர்களிடம் கேட்கப்பட்டது. அதற்கவர்கள், அல்லாஹ்வுக்கு பயப்படுவதாலும் நற்குணத்தாலும் என்று பதிலளித்தார்கள். எந்தச் செயலின் காரணத்தால் மக்கள் அதிகமாக நரகத்தில் நுழைவார்கள்? என்று கேட்கப்பட்டது. அதற்கவர்கள், நாவின் காரணத்தாலும் இச்சை உறுப்பின் காரணத்தாலும்! என்று பதிலளித்தார்கள்.
(அறிவிப்பவர் : அபூஹுரைரா -ரலி, நூல் : திர்மிதீ)

15- கோபம் கொள்ளாமை
தன் கோபத்தை வெளிப்படுத்த சக்தி பெற்றிருந்தும் அதனை அடக்கிக் கொண்டவரை மறுமை நாளில் படைப்பினங்களுக்கு முன்னிலையில் அல்லாஹ் அழைத்து, அவர் விரும்பிய ஹுருல்ஈனை (சொர்க்கத்து கன்னியரை) தேர்ந்தெடுத்துக் கொள்ள அவருக்கு அனுமதி வழங்குவான்.
(நபிமொழி, அறிவிப்பவர் : முஆத் -ரலி, நூல் : அபூதாவூத்)


16- பெற்றோரைப் பேணல்
முதியோரான பெற்றோர்களில் இருவரையோ அல்லது ஒருவரையோ பெற்றுக் கொண்டும் -அவர்களுக்கு பணிவிடை செய்வதன் மூலம்- சொர்க்கம் செல்லாதவனுடைய மூக்கு மண்ணோடு மண்ணாகட்டும்!
(நபிமொழி, அறிவிப்பவர் : அபூஹுரைரா -ரலி, நூல் : முஸ்லிம்)


17- மார்க்கச் சகோதரனை சந்திக்கச் செல்தல்
யாரேனும் நோயாளியை விசாரிக்கச் சென்றால் அல்லது அல்லாஹ்வுக்காக மார்க்கச் சகோதரனைச் சந்திக்கச் சென்றால் -மலக்குமார் களில்- அழைப்பவர் அவரை அழைத்து நீ மிகச் சிறந்த காரியம் செய்தாய்! மிகச் சிறந்த செயலுக்காக அடியெடுத்து வைத்துள்ளாய்! மேலும் இதனால் நீ சொர்க்கத்தில் உனக்கென ஒரு வீட்டை ஏற்படுத்திக் கொண்டாய்! என்று கூறுவார். (நபிமொழி, அறிவிப்பவர்: அபூஹுரைரா-ரலி. நூல்:திர்மிதீ)


18- குழந்தைகளை இழந்தவர்கள்
மூன்று குழந்தைகளை இழந்தும் பொறுமையை கடைபிடித்தவர் சொர்க்கத்தில் நுழைந்து விட்டார் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அப்போது ஒரு பெண்மணி எழுந்து, இரண்டு குழந்தைகளை இழந்தவர்? என்று கேட்டார். அதற்கு நபி (ஸல்) அவர்கள், இரண்டு குழந்தைகளை இழந்தவரும் தான் என்று கூறினார்கள். நான் ஒரு குழந்தையைப் பற்றிக் கேட்டிருக்கக் கூடாதா? என்று அப்பெண் கூறினார். (நூல் : நஸாயீ)


19- சோதனையில் பொறுமை
ஆதமின் மகனே! சோதனை ஏற்பட்ட ஆரம்பக் கட்டத்திலேயே பொறுமையைக் கடைபிடித்து, என்னிடத்தில் கூலியையும் எதிர்பார்த்தால் அதன் கூலியாக சொர்க்கத்தை தவிர வேறு எதனைத் தரவும் நான் விரும்ப மாட்டேன் என்று அல்லாஹ் கூறுவதாக நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
(அறிவிப்பவர் : அபூ உமாமா -ரலி, நூல் : இப்னுமாஜா)


20- பெருமையும் கடனும் வேண்டாம்
பெருமையடித்தல், போரில் கிடைத்த பொருட்களில் மோசடி செய்தல், கடன் வாங்குதல் ஆகிய மூன்றை விட்டும் நீங்கியவனாக மரணித்தவன் சொர்க்கத்தில் நுழைந்துவிட்டான்.
(நபிமொழி, அறிவிப்பவர் : ஸவ்பான் -ரலி, நூல் : திர்மிதீ)

21- ஈமானுடன் மரணம்
யார் நரகத்தை விட்டும் தூரமாகி, சொர்க்கத்தில் நுழைய விரும்புகின்ரோ அவருக்கு அல்லாஹ்வையும் மறுமை நாளையும் ஈமான் கொண்டிருக்கும் நிலையில் மரணம் வரட்டும். மேலும் தன்னிடம் பிறர் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என அவர் விரும்புவாரோ அது போன்றே அவர் பிறரிடம் நடந்து கொள்ளட்டும்.
(நபிமொழி, அறிவிப்பவர் : அப்துல்லாஹ் -ரலி, நூல் : முஸ்லிம்)
இறைவனே! நீ அருளிய (வேதத்)தை நாங்கள் நம்புகிறோம், (உன்னுடைய) இத்தூதரை நாங்கள் பின்பற்றுகிறோம்; எனவே எங்களை (சத்தியத்திற்கு) சாட்சி சொல்வோருடன் சேர்த்து எழுதுவாயாக!”(3:53).

No comments:

Post a Comment

TIYA

WEBSITE DESIGNED BY: NOORUL IBN JAHABER ALI WEBSITE CONTROLLED BY: DOT COLORS
sourceNOORUL IBN JAHABER ALI Copyright © 2015

Theme images by Bim. Powered by Blogger.