Latest News

சமுதாய மாற்றமா? அரசியல் மாற்றமா?

அந்தக் காலத்தில் இந்திய அரசியலில் முஸ்லிம் லீக் என்ற கட்சி ஜொலித்தது. கால ஓட்டத்தில் காணாமல் கரைந்து போய்விட்டது. சிலர் அந்த பேரியக்கத்தை இன்று சின்னக் கடைகளாக நடத்தி வருகிறார்கள்.
பின்னாளில் தமிழ் முஸ்லிம்கள் மத்தியில் உணர்வுகளை தூண்டி பழனி பாபா அரசியல் நடத்தினார். ஆர்.எஸ்.எஸ்.க்கு எதிர்வினை அரசியல் பண்ண எண்ணியதாலோ என்னவோ,அறிவு பூர்வ அரசியலை விட்டுவிட்டு இனவெறி அரசியலைத்தான் அவரால் தமிழகத்துக்கு தர முடிந்தது.

அவரின் மறைவுக்குப் பின் கடை விரித்த தமுமுக எனும் சிறு சங்கம், படிப்படியாக உண்மையிலேயே பெரு வளர்ச்சி கண்டு மமகவாக மலர்ந்தது. இவர்களும் வேறு வழி தெரியாமல் மூன்றாம் தர அரசியலில் சங்கமித்து விட்டார்கள்... 

இவர்களைத் தவிர பீ.ஜே. அவர்களும் அரசியல் கடை நடத்தி வருகிறார். இவர்களை எல்லாம் விமர்சனம் செய்துகொண்டு, மாற்று அரசியல் செய்து நாட்டை திருத்தி காட்டுகிறோம் என்று சிலர் எழுதி வருகிறார்கள்.
இந்த மூன்றாவது வகைச் சிந்தனையாளர்களைப் பெரும்பாலான முஸ்லிம்கள் அறிய மாட்டார்கள். இவர்கள் சமரசம், விடியல் வெள்ளி, சம நிலைச் சமுதாயம் போன்ற பத்திரிகைகளின் பின்னால் நின்றுகொண்டு பேசுவார்கள்.

எது எப்படியோ தமிழ்நாட்டில் முப்பதுக்கும் மேற்பட்ட அரசியல் கட்சிகள், கடைகளாக நடத்தப்பட்டு வருவது உண்மை. இவர்கள் எல்லோருமே, முஸ்லிம் இளைஞர்களை கவருவதும், கூட்டங்கள் மாநாடுகள் நடத்துவதும், அரசியல் அதிகாரத்தை நோக்கி பயணிப்போம்! என்று குரல் எழுப்புவதும் தமது கட்சியின் டெக்னிக்காக வைத்துள்ளார்கள்.


எல்லோருமே சமுதாயத்துக்குப் பாடுபடும் தகுதி தத்தமது இயக்கத்துக்கு மட்டுமே! என்றும் கூறி வருகிறார்கள். பொது மக்களாகிய நாமும் இந்த அரசியல் வாதிகளின் கட்சிகளைஅங்கீகரிக்கப்பட்ட தொழிலாகவே கருதுகிறோம்.

"தமிழக முஸ்லிம்களின்" அரசியல் பங்களிப்பு எப்படி இருக்க வேண்டும்? என்று உண்மையாக யாரும் எழுதுவதில்லை! "தத்தமது அமைப்புகள்" எப்படி அரசியலில் பங்களிப்புச் செய்ய வேண்டும் என்றுதான் எழுதுகிறார்கள்; பேசுகிறார்கள்!

தமிழ்நாட்டில் வாழும் ஒரு முஸ்லிமுக்கு அரசியல் தேவையா? அல்லது தமிழ்நாட்டு முஸ்லிம்கள் எப்படி அரசியல் செய்ய வேண்டும்? என்று நேர்மையாக யாருமே சொல்லமாட்டேன் என்கிறார்கள்! ஏன்?
முதலில் ஒன்றைப் புரிந்துகொண்டு மேலும் படியுங்கள்.

தமிழகத்தில் முஸ்லிம் இளைஞர்களுக்கும் சரி, முஸ்லிம் அல்லாத இளைஞர்களுக் கும் சரி, “எப்படி அரசியல் நடத்த வேண்டும்? அதன் வழிமுறை என்ன?’ அதிகாரத்தை வென்றெடுப்பது என்றால் என்ன? என்று ஒழுங்காக யாரும் சொன்னதாகப் பதிவுகள் இல்லை!
இப்படி நாம் வைக்கும் குற்றச்சாட்டை, TMMK, MMK, PFI, SDP, TNTJ, MJK  அமைப்புகளில் உள்ளவர்கள் கேட்ட மாத்திரத்தில் பொங்கி எழுவார்கள். கோபப்படுவார்கள், மறுத்து, தத்தமது கட்சிகளின் கூட்டங்களில் சமாளிப்பு செய்வார்கள்.

இது கலிமா சொல்கிறவர்கள் செய்கின்ற பிழை! அதாவது இந்தத் தமிழ்நாடு முஸ்லிம் கட்சிகள் தங்களின் அரசியல் பாதையை எப்படி அமைத்துள்ளார்கள் என்றால், ஆர்.எஸ்.எஸ். பா.ம.க, திக. விசி போன்ற ஜாதியக் கட்சிகளுக்கு மாற்றாக நாமும் முஸ்லிம் ஜாதிக் கட்சி நடத்த வேண்டும் என்றுதான் இருக்கிறார்கள்.
ஏதாவது மேல் விளக்கம் கேட்டால் என்ன சொல்வார்கள் தெரியுமா?“இது பக்கா அரசியலுங்க! இங்கே இஃலாஸ், ஈமான் எல்லாம் பாத்தா அரசியல் நடத்த முடியா துங்க”, என்று கூறுவார்கள்.

கூட்டத்தை கூட்டி பெரு நகரத்தை ஸ்தம்பிக்க வைக்கணும். அப்படியே பெரிய கட்சிகளிடம் பேரம் பேசி மூன்று நான்கு சீட்டு வாங்கி சமுதாய பணி செய்வோம், இன்ஷா அல்லாஹ் என்று டயலாக் எல்லாம் சொல்வார்கள்.

மற்ற சக அரசியல் கட்சிகள் எப்படி காந்தி, காமராஜ், அண்ணா, எம்.ஜி.ஆர். படங்களைப் போட்டு பிரச்சாரம் செய்வது மாதிரி இவர்களும் காயிதே மில்லத், பழனிபாபா படங்களைக் காட்டும்காப்பி அடிக்கும் அரசியல்தான் செய்கிறார்கள்.

சரி விசயத்துக்கு வருவோம்.

எழுச்சி மாநாடுகள் காட்டியாச்சு! வாக்குகளை வென்றெடுத்து, எம்.எல்.ஏ., எம்.பி. ஆகியாச்சு! ஏன் மந்திரியும் ஆகியாச்சு என்றே கற்பனை செய்வோமே!
இப்படி எல்லாம் நடப்பதால் தமிழ்நாட்டு முஸ்லிம் சமூகம் வெற்றி பெற்றதாக கருத முடியுமா?
வெற்றியின் அளவுகோல் என்ன? அதாவது சின்ன சின்ன கட்சிகள் பெரிய கட்சிக் கூட்டணியுடன் அரசியல் அதிகாரத்தைச் சுவைப்பதால் ஒரு சமான்ய முஸ்லிம் என்ன பயன் அடையப் போகிறான்?
இந்தக் கேள்வியை நாம் கேட்டால் யாரும் பதில் சொல்ல மாட்டார்கள். ஒரு வேளை மஹ்ஷரில் பகிரங்கமாக கேட்க வேண்டியவன் கேட்கமாட்டான், என்று யாராவது சொல்ல முடியுமா?
இந்த இடத்தில் கொஞ்சம் படிப்பதை நிறுத்துங்கள்.

இதுவரை நீங்கள் படித்ததில் உடன்பட்டிருப்பீர்கள் என எண்ணினால் தொடர்ந்து படியுங்கள்.
கலிமா சொன்ன ஒரு முஸ்லிம், உலக மக்கள் அனைவருக்கும் பொதுவானவன். 

அக்கம் பக்கத்தில் உள்ள அண்டை வீட்டுக்காரர்களிடம் அதுவும் ஒவ்வொருவரும் 40 வீடு, 40வீடு என்று பார்த்து நியாயமாக நடக்க வேண்டும் என்ற போதனையை நெஞ்சிலே சுமக்கிறவன்தான் முஸ்லிம்.
சாலையில் கிடக்கின்ற கல்லை, முள்ளை அப்புறப்படுத்துவதை தனது இறை நம்பிக்கையோடு இணைத்துப் பார்ப்பவன்தான் முஸ்லிம்.

இதையயல்லாம் அறிந்த நாம் தமிழ்நாட்டில் “”முஸ்லிம்களுக்கு மட்டும் என்ற அரசியலை தேர்வு செய்வது இனப் பற்றா? இன வெறியா?

அதிமுக, திமுக, காங்கிரஸ், கம்யூனிஸ்ட் என எந்த கட்சியில் இருந்தாலும் சரி, முஸ்லிமுக்கு ஓட்டு போடு என்று சொல்வது, மதப் பற்றா? மத வெறியா?

ஆகையால் சகோதர சகோதரிகளே, முஸ்லிம் என்பவன் எல்லா இன மக்களையும் சமமாகப் பாவித்து, அனைவருக்குமான நீதியான அரசியல் தான் செய்ய முடியுமே தவிர, இனவாத அரசியல் செய்யக் கூடாது.

சரி இப்போது இருக்கும் சூழலில் நம் முஸ்லிம் சமுதாயம் என்ன நிலைமையில் உள்ளதுஎன்பதையும் பார்ப்போம்.

ஏன் இப்படி சொல்கிறோம் என்றால், ஆட்சியில் அதிகாரத்தின் நெருக்கம் இருந்தால்தான் சமுதாயத்திற்கு நன்மை செய்ய முடியும் என்று கட்சிக்காரர்கள் நம்புகிறார்கள் அல்லவா?அதனால் தான்!
இந்தக் கட்டுரையின் மூலம் நாம் பிரதானமாக வலியுறுத்துவது என்னவென்றால், இரண்டு விசயங்கள்.
ஒன்று:

நமது முஸ்லிம் சமுதாயம் இன்று நிறைய மாறவேண்டியுள்ளது. அரசியல் மாற்றம் அல்லது அரசியல் ஆதாயம் கிடைத்து, சமுதாயம் மாறாமல் இருக்கிறது. ஆகவே முதலில் சமுதாயத்தை மாற்றுங்கள். நாம் கூறப் போகும் இந்த சமுதாய மாற்றத்துக்கு அரசியல் கட்சி நடத்தவேண்டிய அவசியம் இல்லை!
இரண்டாவது:

தமிழ்நாட்டு முஸ்லிம் எப்படிப் பட்ட அரசியல்வாதியாக பரிணமிக்க வேண்டும்? பிரகாசிக்க வேண்டும்.
1. ஒவ்வொரு பள்ளிவாசலின் நுழைவாயிலில் தினசரி யாசிக்கும் பிச்சைக்காரர்கள் நிற்கிறார்களே! இக்காட்சிகள் கலிமாவை மொழி கின்ற நம் உள்ளங்களைத் தாக்கவில்லையா
பிச்சைக்காரர்கள் இல்லாத இஸ்லாமிய சமுதாயத்தை உருவாக்க முயற்சிப்போம்.

2. ஆடம்பர திருமணங்கள் பெருகி பெருகி, இன்று ஒவ்வொரு உறவினர் வீடுகளிலும் பல பெண் குமர்கள் திருமணத்துக்கு தடுமாறுகி றார்களே! பெரும்பாலான குடும்பங்களில் பெண்ணைப் பெற்ற தகப்பன் பின்னாளில் ஓட்டாண்டியாகிப் போகும் நிலை உள்ளதே!
இவற்றை மாற்றி சமுயாத புணர் நிர்மான திட்டத்தை கொண்டு வரவேண்டும்.

3. பெரும்பாலான முஸ்லிம் இளைஞர்கள் வெளிநாடுகளுக்குப் போய் கஷ்டப்பட்டு வேலை செய்யும் அதே சமயம், தங்களின் இளமையையே தியாகம் செய்யும் அவல நிலை!
அவர்கள் எல்லாம் உள்நாட்டில் தொழில் செய்து, பொருளீட்டி, மனைவி மக்களுடன் பரக்கத்தாக வாழ தொழிற் கொள்கையும், தொழிற்பேட்டையும் உரு வாக்க வேண்டும்.

4. இலை மறைவு காய் மறைவாய் இருந்த டாஸ்மாக் கலாச்சாரம் முஸ்லிம் இளைஞர்களையும் படர்வதைத் தவிர்க்க முயற்சித்தல் வேண்டும்.


5. ”வெளியே சொன்னால் அசிங்கம் அதனால் நாமும் பூசி மொழுகியே சொல்கிறோம். விபச்சாரம் போன்ற பெரும் பாவங்களில் இருந்து நம் சகோதர சகோதரிகளை மீட்டெ டுக்கசமூக மாற்றத் திட்டங்கள் தேவை.

6. சச்சார் கமிட்டி, சச்சார் கமிட்டி என்று கொஞ்ச காலத்துக்கு முன்னால் பலரும் பேசினார்கள்! அவற்றில் பாதியையாவது பட்டியலிட்டு தீர்க்க முயற்சிகள் தேவை.

7. பெரும்பாலான முஸ்லிம்கள், வியாபாரத்துக்கு திருமணத்துக்கு என்று வட்டிக்குப் பணம் வாங்கும் நிலை உள்ளது.
வட்டியில்லா பண உதவி எனும் பொருளாதார திட்டம் கொண்டு வரவேண்டும்.


8. பெரும்பாலான முஸ்லிம் குடும்பங்களில், சர்க்கரை நோய், இதயநோய், பிர­ர் இப்படி பல உடல் நல குறைகள் மலிந்து கிடக்கின்றன. ஆரோக்கியமான சமுதாயத்தை உருவாக்கி வலிமையான குடும்பங்களை உருவாக்கும் சுகாதார திட்டங்கள் கொண்டுவரவேண்டும். காற்று,தண்ணீர் இவையயல்லால் இறைவனின் அருட்கொடைகள்.

இதனை மாசுபடுத்தும் மனிதர்களைத் திருத்த முயற்சிகள் வேண்டும்.

9. ஒரு வலிமையான சமூகத்தின் அடிப்படைச் சந்தோ­மான குடும்பம்! இன்று எண்ணற்ற குடும்பங்களில் சண்டைகள்! விவாகரத்துகள்! பிரிவுகள்!
ஸலாமத்தான குடும்ப உறவுகளை கட்டியயழுப்ப பணிகள் முடுக்கப்பட வேண்டும்.

10. கல்வி, விவசாயம், சாலை அமைப்புகள் என்று இன்னும் நிறைய உள்ளது. எழுதிக் கொண்டே போகலாம்!
தமிழ்நாட்டு முஸ்லிம் அரசியல் ஆர்வலர் களை ஒன்றே ஒன்று கேட்க விரும்புகிறேன்.
மேலே உள்ள பத்து விசயங்களை ஒவ்வொரு ஊரில் உள்ள ஜமாஅத்கள் மூலம் அல்லது சமூக சேவை அமைப்புகளின் மூலம் இன்ஷா அல்லாஹ் சாதிக்க முடியும்.

இப்படிப்பட்ட சமுதாயத்தின் அவசிய முன்னேற்ற மாற்றம் நிகழாமல் நாம், எம்.எல்.ஏ., எம்.பி. ஆகி என்ன பிரயோசனம்?

சமுதாய மாற்றம் இல்லாமல் அரசியல் ஆட்சி அதிகாரம் கிடைத்து என்ன பயன்?
அரசியலில் அதிகாரத்தின் பங்கு இருந்தால்தான் சமுதாயத்தைத் திருத்த முடியும் என்று திமுக ஸ்தாபகர் அண்ணா அவர்கள் பெரியாரிடம் சொன்னாராம். அந்த அண்ணா வழி வந்தவர்கள் இன்றுவரை சமுதாயத்தை மாற்றவேயில்லை என்பதை நாம் எல்லோரும் இன்று பார்க்கிறோம்.

உடல் முழுதும் நோயை வைத்துக் கொண்டு, புத்தாடை அணிந்து வாசனை திரவியம் பூசுவது எவ்வளவு முட்டாள்த்தனமானதோ, அதே மாதிரிதான், சமுதாயத்தை சீர்திருத்தாமல் ஆட்சி அதிகாரத்தை முஸ்லிம்கள் அடைவது!

வெள்ளிக்கிழமை ஜும்ஆ மேடைகள் நம்மிடம் உள்ளன! பள்ளிவாசல் ஜமாஅத் எனும் அமைப்பு உள்ளது. வாரத்தில் ஒன்று இரண்டு நாட்கள் முழுமையாக தொடராக பாடுபட் டால், தமிழ்நாட்டு முஸ்லிம் சமூகம் தன் புதிய வரலாறை எழுத தொடங்கும் என்பது நிச்சயம் (இன்ஷா அல்லாஹ்).

தமிழ்நாட்டில் முஸ்லிம் சமூகம் ஓர் அழகிய கட்டமைப்பில் சீரமைக்கப் பட்டால் தாவாவுக்கென்று தனியாக எந்த அமைப்புகளும் தேவையில்லை. (இதற்கு மேல் பலன்களை கற்பனை செய்ய வேண்டாம்! செய்ய வேண்டிய பணிகளைத் திட்டமிடுவோம்)
அடுத்து தமிழ்நாட்டில் கலிமா சொல்கின்ற ஒரு முஸ்லிம் எப்படிப்பட்ட அரசியல்வாதியாக உருவாக வேண்டும்? என்பதைப் பார்ப்போம்.

1. 13 ஆண்டு கால சமுதாய மாற்றத்தில் பிரதானமான ஈமானை முன்னெடுத்து களப் பணி செய்து, ஹிஜ்ரத்தும் செய்த பின், மதீனாவில் ஆட்சி அதிகாரம் தானாக வந்த வரலாற்றுக்கு நாம் சொந்தக்காரர்கள்!
இதை மறக்கவே கூடாது. மேலும் கழகங்களின் கடைக்கண் பார்வைக்கு ஏங்கும் நிலைக்குப் போகவே கூடாது.

2. “முஸ்லிம் என்பவன் பன்முகத் தன்மை கொண்டவன். அனைத்து சமுதாய மக்களுக் கும் பொதுவானவன். தன்னை முஸ்லிமாக அடையாளப்படுத்தும் அதே சமயம் பல இன மக்களுடன் நீதியாகவும் நடக்க வேண்டும்!

3. நபி(ஸல்) அவர்களின் வாழ்வியலை பின்பற் றும் ஒரு மனிதனால் அனைத்து இன மக்க ளும் சந்தோ­மாக வாழ்வார்கள் என்பதை நிரூபிக்க வேண்டும்!

4. “நன்மையை ஏவுவதும் தீமையை தடுப்பதும் என்பது முழு உலகிற்கும் அதிபதியான இறைவனின் கட்டளை!
இந்த ஒரு தாரக மந்திரம் போதும், ஒரு முஸ்லிம் நேர்மையான, முன் உதாரணமான அரசியல்வாதியாய் உருவெடுக்க!

5. மகாத்மா காந்தி, உமர் முக்தார் போன்றவர்கள் எல்லாம் தாங்கள் தலைவர்களாக உருவாக வேண்டும் என்று பிளான் பண்ணியதே இல்லை! நன்மையை ஏவி தீமையை தடுக்க வேண்டும் என்பதில் உறுதியாய் நின்றார்கள். நீதியை தங்கள் சக்திக்கு உட் பட்டவரை நிலைநாட்டினார்கள். அணி திரண்ட மக்கள் தான் அவர்களை தலைவர்களாக ஆக்கினார்கள்.



இன்று தமிழ்நாட்டில், இந்தியாவிலும் அடிப்படை அரசியல் பாடமே பிழையாக உள்ளது.
எப்படி தலைவர்களாக உருவாக வேண்டும் என்று பிளான் பண்ணித்தான் கட்சிகளில் சேருகிறார்கள்.
சம்பாரிக்கும் தொழில் துறைகளில் ஒன்றாகத்தான் அரசியலை நினைக்கிறார்கள்.

புகழ் கிடைக்கும் என்ற கனவில்தான் அரசியல் கட்சிகளைத் திட்டமிடுகிறார்கள்.
மக்கள் எக்கேடு கெட்டால் என்ன; தன் கஜா னாவை எப்படி நிரப்புவது என்பதே நிலையாக உள்ளது.
இந்த இழி நிலையை மாற்றும் முயற்சிகளில் கம்யூனிஸ்ட்கள் தோற்றுவிட்டார்கள். மாவோக் களும் வெற்றியடையவில்லை. அன்னா ஹசாரே, மேதா பட்கர் முதல் நம்மூர் டிராபிக் ராமசாமி வரை யாருமே எவுதுமே செய்ய முடியவில்லை.

ஆனால் வேறு சிலர் நினைத்தால் முடியும். செல்வந்தன், பலசாலி, மார்க்க அறிஞன் இம் மூவரும் மறுமையில் பெறும் தண்டனையை பாடமாகப் படித்த சாதாரண முஸ்லிம்கள் தான் அந்த சிலர்.

6. இன்று அரசியலில் பெரும் முதலாளிகளின் ஆதிக்கம் மேலோங்கி உள்ளது. ஜெயலலிதா அம்மையார் ஜெயித்தது அவர் மீது உள்ள நம்பிக்கையால் அல்ல! திமுகவின் மீதான வெறுப்பு!
இதுபோல மக்கள் நல்ல அமைப்புக்காக, தலை வனுக்காக ஏங்குகிறார்கள். தேடல்கள் நிறைவடைவதே இல்லை.

7. ஈமானை நெஞ்சிலே ஏந்தி, இஸ்லாமிய வாழ் வியலை நடைமுறைப்படுத்தும் இஹ்சானுடைய ஒரு சாதாரன முஸ்லிம், முதலில் சமு தாயத்தை மாற்றும் தோழனாக வளரட்டும்.
ஊருக்கு ஊர், வீதிக்கு வீதி, வீட்டுக்கு வீடு அப்படிப்பட்ட ஒரு நீதியான முஸ்லிம் நல்ல முஸ்லிம்கள் இருக்கிறார்கள். அவர்கள் தங்கள் அடையாளங்களை காட்டட்டும்.
தமிழ்நாட்டின் பல இன சமூகம் அப்படிப் பட்ட இளைஞனில் ஒருவனை, அல்லது சிலரை தமது தலைவர்களாக காட்டும் நாள் வெகு தொலைவில் இல்லை.

8. ”இதனை இதனால் இவன் முடிப்பான் என்றாய்ந்து அதனை அவன் கண்விடல் என்பதை தமது வேதவரிகளாக தமிழ்நாட்டின் பல இன சமூகம் நம்புகிறது.

நீதியான தலைவனுக்கு இறைவனின் அர்ன் நிழலில் இடம் கிடைக்கும் என்பதை நெஞ்சிலே சுமந்து முஸ்லிம் சமூகம் நம்புகிறது.

உமரின்(ரழி) வழி நடக்கும் ஒரு மாவீரனின் வருகைக்காக தமிழகம் காத்திருக்கிறது. எகிப் தின் ஒரு தேவாலயத்தின் ஓரத்தில் தமது தொழு கையை ஒருமுறை நிறைவேற்றியவரும், விளிப்பு நிலை மக்களின் வாழ்வு சிறக்க பாடுபட்ட அந்த உமரை தான் காந்தியும் நேருவும் முன் உதாரணம் காட்டினார்கள்.
இன்ஷா அல்லாஹ் அப்படிப்பட்ட ஒரு முஸ்லிம் உங்கள் மாவட்டத்தில், உங்கள் ஊரில், ஏன் உங்கள் வீட்டில் கூட இருக்கலாம்! சிந்தியுங்கள்!  

-நன்றி :  அ.ப.அகமது, புதுக்கோட்டை

இது என்க்கு வந்த ஒரு ஈமெயில் தாங்கள் எல்லோருடைய கருத்துக்கும் செல்ல வேண்டும் என்ற என்னத்தில் இதை நான் பாதிவு செய்கிறேன்.

அதிரை M. அல்மாஸ்

2 comments:

  1. VERY GOOD ARTICLE I APPRECIATE THOUSE WHO WROTE THIS ARTICLE, WISH U ALL THE BEST TO SUCCESSED.

    SIRAJ DUBAI

    ReplyDelete

TIYA

WEBSITE DESIGNED BY: NOORUL IBN JAHABER ALI WEBSITE CONTROLLED BY: DOT COLORS
sourceNOORUL IBN JAHABER ALI Copyright © 2015

Theme images by Bim. Powered by Blogger.