Latest News

 

47:33 يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا أَطِيعُوا اللَّهَ وَأَطِيعُوا الرَّسُولَ وَلَا تُبْطِلُوا أَعْمَالَكُمْ
47:33.
ஈமான் கொண்டவர்களே! நீங்கள் அல்லாஹ்வுக்கு வழிபடுங்கள். இன்னும் இத்தூதருக்கு கீழ்ப்படியுங்கள் - உங்கள் செயல்களை பாழாக்கிவிடாதீர்கள்.
உலகெங்கும் வாழும் அதிரை சகோதரர்களே!
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...
சமீபகாலங்களில் நமதூரின் பிரதான வலைத்தளங்களின் மூலமாக நீங்கள் அதிகம் கேள்வியுறும் அதிரை இஸ்லாமிக் மிஷனின் [AIM] நிஜங்களை உங்களுக்கு சுருக்கமாக இதன்வழி மறுஅறிமுகம் செய்ய விரும்புகிறோம்...
துவக்கம்
2000
ஆம் ஆண்டு அமீரகத்தில் வாழ்ந்த அதிரை சகோதரர்கள் ஒன்றுகூடி நமதூரின் நலனுக்காக, குர்ஆன் ஹதீஸ் ஒளியில் தங்களுடைய வாழ்வுதனையும் அமைத்து, அதனையே ஊருக்கும் உபதேசித்திட ஒருங்கிணைத்த அமைப்பே AIM. இதனால் விளைந்த முதல் நன்மை நமதூரின் தெரு வேற்றுமைகள் உள்ளத்தால் இணைந்த சகோதரர்களின் வெளிப்புற செயல்களினால் வெறுண்டோடின.
முதன்முதலாக ஃபித்ராவை அமீரகத்தில் கூட்டாக வசூலித்து அதிரை முழுவதும் ஏழைகளை தேடிச்சென்று விநியோகம் செய்யும் அறிய பணியை அதிரைக்கு அறிமுகப்படுத்தியதே AIM தான்.
கடந்த மூன்றாண்டுகளாக, இயக்கம் வளர்க்க போட்டோ எடுக்காமல், பயனாளிகளை கேவலப்படுத்தாமல், நாங்கள் இத்தனை பேருக்கு வழங்கினோம் என மார்தட்டிக் கொள்ளாமலும், வீடு தேடிச்சென்றும் இஸ்லாம் கூறும் அழகிய முறையில் விநியோகித்தும் வருகிறோம்.
وَالَّذِينَ آمَنُوا وَعَمِلُوا الصَّالِحَاتِ وَآمَنُوا بِمَا نُزِّلَ عَلَىٰ مُحَمَّدٍ وَهُوَ الْحَقُّ مِن رَّبِّهِمْ ۙ كَفَّرَ عَنْهُمْ سَيِّئَاتِهِمْ وَأَصْلَحَ بَالَهُمْ
47:2.
ஆனால் எவர்கள் ஈமான் கொண்டு ஸாலிஹான (நல்ல) அமல்கள் செய்து முஹம்மது மீது இறக்கி அருளப்பட்ட (வேதத்)தின் மீது - இது அவர்களுடைய இறைவனிடமிருந்து (வந்து)ள்ள உண்மையாக இருக்கிறது என்று நம்பிக்கை கொள்கிறார்களோ அவர்களுடைய தீமைகளை அவர்களை விட்டும் போக்கி அவர்களுடைய நிலையையும் சீராக்குகின்றான்.
தத்து இயக்கங்கள்
அமீரகத்தின் துபை மாநகரில் AIM ஆரம்பிக்கப்பட்டாலும் அதிரையில் அதன் எண்ணங்களை செயல்படுத்திட ஒவ்வொரு காலகட்டத்திலும் அதிரையில் செயல்படும் மாநிலம் தழுவிய இயக்கங்களின் அதிரை கிளைகளை ஆதரிக்க வேண்டிய சூழல்கள் ஏற்பட்டன, இதன்வழி இவ்வியக்க தேவைகளின் புரவலராகவும் மாறியது AIM. இவ்வியக்கங்கள் தங்களின் பெயரில் செய்த பெரும்பாலான மக்கள் பணிகள் மற்றும் ஏகத்துவப் பணிகளின் பின்னும் அதிரை இஸ்லாமிக் மிஷன் மட்டுமே இருந்தது என அடித்துச் சொல்ல முடியும்.
இன்னும் தெளிவாக சொல்வதென்றால், ஒரு இயக்கம் சீண்டுவாரில்லாத நிலையில் இருந்தபோது AIM களமிறங்கி அவர்களுக்கு அதிரையில் கிளையை நிறுவி இன்றைய பள்ளி வரை கிடைத்திட செய்தது. அது அன்றைக்கு அழகிய செயலாக தெரிந்ததன் விளைவு.
கேடுகள்
அதிரை இஸ்லாமிக் மிஷன் தன்னுடைய செயலில் தூய்மையானதாக இருந்தாலும் தமிழகத்தில் ஏற்பட்ட பல்வேறு இயக்கப் பிளவுகள் அதிரை இஸ்லாமிக் மிஷனையும் வெகுவாக பாதித்தது, தெரு வேற்றுமைகளை களைந்து ஒன்றுபட்ட சகோதரர்களை இயக்கங்கள் மீண்டும் கூறுபோட்டு சென்றன. புரவலர்களாய் போனவர்கள் இயக்கங்களின் ஆதரவாளர்களாய் மாறியதால் ஏற்பட்ட மிகப்பெரிய கேடு இது.
இன்றைய AIMபல்வேறு இயக்கப் புயல்களையும் தாண்டி இன்றும் தன் சக்திக்குட்பட்ட பணிகளை கடந்த மூன்றாண்டுகளாக தானே நேரடியாக களத்தில் நின்று செய்து வருகிறது, இனி எந்த ஒரு இயக்கத்திடமும் அதிரை இஸ்லாமிக் மிஷனை அடகு வைப்பதில்லை என்ற முடிவுடன்.
நாம் இயக்கங்களின் தூணாக இருந்தநிலை மாறி இன்று பல்வேறு இயக்கங்களும், சங்கங்களும், தனிநபர்களும் நம்முடைய நற்பணிகளுக்கு தங்களுடைய நல்லாதரவை வழங்கி வருகின்றனர்.

1.
தஃவா பிரச்சாரங்கள்
2.
கோடைகால நல்லொழுக்கப் பயிற்சி முகாம்
3.
ஃபித்ரா விநியோகம்
4.
கல்விப் பணிகள்
என நம்முடைய பணிகள் இன்றும் தொடர்கின்றன, அல்ஹம்துலில்லாஹ்.

Adirai Educational Mission [AEM]
என அழைக்கப்படுகின்ற அதிரை கல்விச்சேவையகத்திலும் AIM ஓர் முக்கிய அங்கம்.

ALM
பள்ளிக்கூடத்தில் நடைபெற்றுவரும் அதிரை ஜூம்ஆவை நடத்தும் கூட்டுக்குழுவிலும் ஓர் அங்கம்.
இதேபோன்று எந்த இயக்கத்துடனும் சேர்ந்து தஃவாவையும் நற்செயல்களையும் இணைந்து செய்யவும் சகோதரத்துவத்துடனும் நடந்து கொள்ளவும் தயார் ஆனால் அதிரை இஸ்லாமிக் மிஷனின் நட்புறவு இனி அடகு நிலைக்குச் செல்லாது இன்ஷா அல்லாஹ்.

2011
ல் AIM இதுவரை
அதிரை இஸ்லாமிக் மிஷன் 2011 நடத்திய பிரதான செயல்பாடுகளை தங்களுடைய கவனத்திற்கு கொண்டு வருகிறோம்.
1.
பள்ளியிருந்தும், கல்லூரியிருந்தும், பலருக்கு வாய்ப்பிருந்தும் கல்வியில் பின்தங்கியுள்ள அதிரை மாணவர்கள் மத்தியில் கல்வி விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக கடந்த ஜனவரி 14 15 ஆகிய தேதிகளில் கல்விச்சேவகர்கள் CMN சலீம், பேராசிரியர் இளையான்குடி ஆபிதீன் தமிழ்மாமணி பஷீர் ஆகியோரை கொண்டும், சகோதர வலைத்தளமான அதிரை நிருபர் மற்றும் அதிரை இஸ்லாமிய கல்வி அறக்கட்டளையினருடன் இணைந்தும் மாபெரும் இருநாள் கல்வி விழிப்புணர்வு மாநாடு நடத்தப்பட்டது.
2.
இயக்க வேறுபாடுகளால் சிதறுண்டு போயுள்ள தஃவா களத்தை சீரமைக்குமுகமாக, கடந்த பிப்.18ந்தேதி ஏகத்துவ அழைப்பாளர் சகோதரர் கோவை அய்யூப் அவர்களை கொண்டு மறுமை குறித்து அச்சமூட்டி எச்சரிக்கும் பொது நிகழ்ச்சியொன்றும் நமதூர் மக்களின் மிகுந்த வரவேற்புக்கிடையே நடத்தப்பட்டது.(குறிப்பு: இந்நிகழ்வின் இலவச சீடிக்கு 0552829759 என்ற எண்ணில் தொடர்பு கொள்க! தேரா, துபை)
3.
சுமார் 8 ஆண்டுகளாக நடைபெற்றாலும் கடந்த மூன்றாண்டுகளாக AIMன் தனித்தன்மையுடன் நடத்தப்பட்டு வரும் கோடைகால நல்லொழுக்கப் பயிற்சி முகாம்கள் இந்த வருடம் மே 1 முதல் 20 வரை சீருடனும் பல்வேறு சிறப்பம்சங்களுடனும் நடத்தப்பட்டது, இறுதியாக பரிசளிப்பு நிகழ்ச்சியும் தஃவா நோக்குடன் பயன்படுத்திக் கொள்ளப்பட்டது இதில் மவ்லவி அன்சாரி ஃபிர்தவ்ஸி மற்றும் கல்வியாளர்கள் கலந்து கொண்டு பயனுரையாற்றினார்கள்.
குறிக்கோள்கள்
ஓன்றாய் இருந்து பல்வேறு இயக்கங்களாய் போன தலைவர்களுடனும் தொண்டர்களுடனும் பழகும் வாய்ப்பை அதிரை இஸ்லாமிக் மிஷனின் இன்றைய நிர்வாகிகளுக்கு அல்லாஹ் வழங்கியுள்ளது பெரும் அருட்கொடையே. இந்த அறிமுகத்தின் வழியாக இன்ஷா அல்லாஹ் மீண்டும் முடிந்தவரை ஏகத்துவவாதிகளை ஒரே குடையின் கீழ் கொண்டு வர பாடுபட்டு வருகிறது AIM.நம்முடைய முயற்சிகளை ஜாக் மற்றும் இந்திய தவ்ஹீத் ஜமாஅத் மாநில நிர்வாகிகள் பரிசீலிக்க இணங்கியுள்ளனர். இன்ஷா அல்லாஹ் விரைவில் பிற இயக்கத்தினர்களையும் தொடர்பு கொள்வோம்.

'
நீங்கள் விசுவாசங் கொள்ளும்வரை சுவனம் செல்லமாட்டீர்கள். நீங்கள் ஒருவருக்கொருவர் நேசிக்கும்வரை விசுவாங்கொண்டவர்களாக ஆக மாட்டீர்கள் ஒரு செயலை நீங்கள் செய்வீர்களானால் ஒருவருக்கொருவர் நேசித்துக் கொள்வீர்கள். அச்செயலை உங்களுக்கு அறிவித்துத் தரட்டுமா? (அதுவே) உங்களுக்கு மத்தியில் ஸலாமைப்1 பரப்புங்கள்' என அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹ் அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். (நூல் : முஸ்லீம் 42)என்ற நபிமொழிக்கேற்ப, இன்ஷா அல்லாஹ் வரும் கல்வியாண்டின் முடிவில் நடைபெற இருக்கின்ற கோடைகால பயிற்சி முகாமின் நிறைவு விழாவை ஒரு மாநாடாக நடத்தி, பல்வேறு இயக்கங்களின் சமுதாயத் தலைவர்களை சமுதாய பொதுப்பிரச்சனைகளின் ஒற்றுமை என்ற பொருளிலும், ஏகத்துவ அழைப்பாளர்களை குர்ஆன் ஹதீஸூடன் ஒன்றுபடுவோம் என்ற பொருளிலும் ஒரே மேடையில் ஏற்றும் திட்டமும் பரிசீலிக்கப்பட்டு வருகிறது.
அதேபோல் பல்வேறு காரணங்களால் அதிரை இஸ்லாமிக் மிஷனிலிருந்து பிரிந்து சென்றவர்களும் மீண்டும் ஒன்றிணைந்து தங்களுடைய தூய பணிகளை தொடர வேண்டும் எனவும் மனதார வேண்டுகிறோம், மனம் விட்டுப்பேசவும் தயார். புதிய சகோதரர்களையும் அன்புடன் வரவேற்கின்றோம்.
பல்வேறு இயக்கங்களில் நீங்கள் இன்னும் தொடர்ந்தாலும் அதிரை இஸ்லாமிக் மிஷன் சம்பந்தப்பட்ட நிகழ்வுகளில் மட்டும் நீங்கள் AIM உறுப்பினராக, தான் சார்ந்துள்ள இயக்கத்திணிப்பை AIMக்குள் வலியுறுத்தாதவராக தாராளமாக கலந்து கொள்ளலாம்.
எதிர்கால திட்டங்கள்
மறைந்து வரும் மக்தப்களை (சிறார்கள் குர்ஆன் மற்றும் அரபி எழுத, ஓத கற்பிக்கும் ஆரம்பப்பாட சாலைகள்) மீண்டும் அனைத்து தெருக்களிலும் ஏற்படுத்துவது. இன்றைய பள்ளிக்கூட நேரங்களே மக்தப்களின் முதன்மையான வில்லன்கள் இதற்குத் நிரந்தர தீர்வுகாண முயல்வது.
முழுநேர பள்ளிக்கூடம் துவங்குவது, இதில் பயிலும் மாணவர்கள் 12ம் வகுப்பு முடித்து வெளியேறும் போது ஓர் இஸ்லாமிய அறிஞராகவும் பரிணமிக்க வேண்டும்.
ஆண்களுக்கும் பெண்களுக்கும் குர்ஆன் ஹதீஸ் அடிப்படையிலான தனித்தனி மதரஸாக்களை நிறுவி முழு நேர கல்வி போதிப்பது மற்றும் குடும்பப் பெண்களும் பணியிலுள்ள ஆண்களும் பயனுரும் வகையில் பகுதி நேரக்கல்வியை ஏற்படுத்துவது.
இனி தஃவா களமே பிரதானம் என்று அதிரை இஸ்லாமிக் மிஷன் முடிவு செய்துவிட்ட நிலையில் அதற்கேற்ற இஸ்லாமிய அழைப்பு மற்றும் வழிகாட்டி மையம் ஒன்றை ஏற்படுத்துவது.
இன்னும் காலத்திற்கேற்ற பல நல்லறங்கள்.
இவையனைத்தையும் நிஜமாக்கிட அல்லாஹ்வின் உதவியும் கருணையும் நமக்கெல்லாம் அவசியம். அல்லாஹ்விற்காக AIM உடன் கரம் கோர்த்திட வாரீர், நல்லாதரவு தாரீர் என அனைத்து அதிரை சகோதரர்களையும் அன்புடன் கேட்டுக் கொள்கின்றோம்.

4:36
وَاعْبُدُوا اللَّهَ وَلَا تُشْرِكُوا بِهِ شَيْئًا ۖ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا وَبِذِي الْقُرْبَىٰ وَالْيَتَامَىٰ وَالْمَسَاكِينِ وَالْجَارِ ذِي الْقُرْبَىٰ وَالْجَارِ الْجُنُبِ وَالصَّاحِبِ بِالْجَنبِ وَابْنِ السَّبِيلِ وَمَا مَلَكَتْ أَيْمَانُكُمْ ۗ إِنَّ اللَّهَ لَا يُحِبُّ مَن كَانَ مُخْتَالًا فَخُورًا
4:36.
மேலும் அல்லாஹ்வையே வழிபடுங்கள்; அவனுடன் எதனையும் இணை வைக்காதீர்கள். மேலும் தாய் தந்தையர்க்கும்இ நெருங்கிய உறவினர்களுக்கும். அநாதைகளுக்கும் ஏழைகளுக்கும் அண்டை வீட்டிலுள்ள உறவினர்களுக்கும் அருகிலுள்ள அண்டை வீட்டாருக்கும் (பிரயாணம் தொழில் போன்றவற்றில்) கூட்டாளிகளாக இருப்போருக்கும் வழிப்போக்கர்களுக்கும் உங்களிடமுள்ள அடிமைகளுக்கும் அன்புடன் உபகாரம் செய்யுங்கள்; நிச்சயமாக அல்லாஹ் கர்வமுடையோராக வீண் பெருமை உடையோராக இருப்பவர்களை நேசிப்பதில்லை.
முஃமினானவருக்கு அவர் செய்த நல்லவை(அமல்)களுக்கு பகரத்தை இவ்வுலகில்(மட்டும்) கொடுத்துவிட்டு மறுமையில் கொடுக்காமல் நிச்சயமாக அல்லாஹ் அநீதி இழைக்க மாட்டான்.
(
நூல்: முஸ்லீம் 60)அற்புதமான மேற்காணும் குர்ஆன் வசனத்தையும், நபிமொழியையும் எங்களுக்கும் உங்களுக்கும் நினைவுபடுத்தியவர்களாக நிறைவு செய்கின்றோம், வஸ்ஸலாம்.
http://www.blogger.com/img/blank.gif
குறிப்பு : இங்கே காணப்படும் 'நாங்கள் செய்தோம்' என்ற சுட்டல்கள் பெருமையின் வெளிப்பாடுகள் அல்ல, மாறாக அவை நம்மையறியா சகோதரர்களின் கவனத்திற்காக மட்டுமே.
இவண்
அதிரை இஸ்லாமிக் மிஷன் (AIM)

email: aimuaeadirai@gmail.com
www.aimuaeadirai.blogspot.com
தகவல்: சகோ.S.அப்துல் காதிர்-மேலத்தெரு

No comments:

Post a Comment

TIYA

WEBSITE DESIGNED BY: NOORUL IBN JAHABER ALI WEBSITE CONTROLLED BY: DOT COLORS
sourceNOORUL IBN JAHABER ALI Copyright © 2015

Theme images by Bim. Powered by Blogger.