2G ஸ்பெக்டரம் முறைகேடு வழக்கில் மே மாதம் 6 ஆம் தேதி சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜராக உள்ள கனிமொழி, அன்றைய தினம் கைது செய்யப்பட்டு சிறைக்கு அனுப்பப்படுவார் என சிபிஐ வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
2ஜி அலைவரிசை ஒதுக்கீடு விஷயத்தில் 1.76 லட்சம் கோடி ரூபாய் முறைகேடு நடந்ததாக தொடரப்பட்ட வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களில் கலைஞர் டிவி பங்குதாரர்களான கனிமொழி மற்றும் சரத் குமாரும் சினியுக் கரீம் முரானி ஆகியோர் மட்டுமே இதுவரை கைது செய்யப்படவில்லை. மற்ற அனைவரும் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ளனர்.
இந்நிலையில், வரும் மே மாதம் 6 ஆம் தேதி சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் கனிமொழி ஆஜராக உள்ளார். அப்போது கனிமொழி கைது செய்யப்பட்டுச் சிறைக்கு அனுப்பப்படலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன...
கலைஞர் டிவிக்கு டி.பி ரியாலிட்டியின் இணை நிறுவனம் மூலம் பெறப்பட்ட 214.8 கோடி பண விஷயத்திலும் கலைஞர் டிவி சமர்ப்பித்த கணக்கு வழக்குகளிலும் காணப்படும் முரண்பாடுகளைச் சுட்டிக்காட்டியுள்ள சிபிஐ, இதில் பெரிய தில்லு முல்லுகள் நடைபெற்றுள்ளதாக உறுதியுடன் நம்புகிறது.
பிரபல புலனாய்வு வார இதழ் ஒன்றில் வெளி வந்துள்ள தகவல் படி, கலைஞர் டிவி சமர்ப்பித்த வரவு செலவு கணக்கில்,
* கலைஞர் டிவிக்கு டி.பி ரியாலிட்டியின் இணை நிறுவனம் மூலம் 214.8 கோடி ரூபாய் எவ்வித ஆவணங்களும் இன்றி கடன் பெறப்பட்டதாக கூறப்பட்டுள்ளது.
* மேலும் அது சமர்ப்பித்துள்ள கணக்குப்படி, கலைஞர் டிவியின் ஆண்டு வரவு 63.12 கோடி ரூபாய்; செலவு 61.47 கோடி ரூபாய். ஆக, அரசுக்கு வரி செலுத்தும் முன்னர் நிகர ஆண்டு வருமானம் 1.65 கோடி எனவும் வரி செலுத்தப்பட்ட பின்னர் லாபம் 1.36 கோடி எனவும் கணக்கு சமர்ப்பித்துள்ளது.
* ஆண்டுக்கே நிகர வருமானம் 1.36 கோடியாக இருக்கும் நிலையில் டி.பி ரியாலிட்டி நிறுவனம் கலைஞர் டிவிக்கு 214.8 கோடி ரூபாயை எவ்வித ஆவணங்களும் இன்றி கொடுக்க எப்படி முன்வந்தது என்ற கேள்வியை சிபிஐ எழுப்புகிறது.
இது மட்டுமன்றி,
* கலைஞர் டிவி, கடன் பெற்ற அந்த நிறுவனத்துடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டின் காரணத்தால் கடன் பெற்ற ஏழு மாதங்களிலேயே 214.8 கோடி ரூபாயை வட்டியுடன் திருப்பி செலுத்தி விட்டதாக சிபிஐயிடம் கலைஞர் டிவி தரப்பில் கூறப்பட்டுள்ளது. ஆண்டுக்கே நிகர லாபம் 1.36 கோடி என்றிருக்க, கடன் பெற்ற ஏழே மாதத்தில் அவ்வளவு பெரிய தொகையைக் கலைஞர் டிவி வட்டியுடன் எப்படி திருப்பிச் செலுத்தியது? கலைஞர் டிவியின் வருமானத்தில் இவ்வளவு பெரிய தொகையைக் கொடுக்க முடியாது என்ற நிலையில், வேறு யார் கலைஞர் டிவிக்கு இத்தொகையைக் கடனாக கொடுத்தார்?
மேலும் கலைஞர் டிவி சமர்ப்பித்த வரவு செலவு கணக்கில்,
* கலைஞர் டிவியின் கண்ணுக்குப் புலப்படாத சொத்து 2008-2009 கால அளவில் 123.25 கோடி எனவும் 2009-2010 கால அளவில் அது 159.16 கோடியாக உயர்ந்துள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கலைஞர் டிவியின் ஆண்டு நிகர லாபமே 1.36 கோடியாக இருக்க, அதன் கண்ணுக்குப் புலப்படாத சொத்தின் மதிப்பு மட்டும் ஆண்டுக்கு ஆண்டு பல மடங்கு உயர்ந்தது எப்படி? கண்ணுக்குப் புலப்படாத சொத்தை எப்படி கண்டுபிடித்தார்கள்? என்ற கேள்வியை அமலாக்கப்பிரிவு அதிகாரிகள் கலைஞர் டிவியின் பங்குதாரர் சரத் குமார் ரெட்டியிடம் கேட்டு துளைத்தெடுத்து வருகின்றனர்.
மேலும், ஆண்டுக்கு நிகர லாபம் 1.36 கோடி என்ற நிலையில் சினியுக் நிறுவனத்திடம் வாங்கிய கடனுக்கு கலைஞர் தொலைகாட்சி 7 மாதங்களுக்கு ரூ 31 கோடி ரூபாய் வட்டி செலுத்தியுள்ளதும் சற்று நெருட வைக்கிறது. ஆண்டுக்கு மொத்த செலவில் பாதிக்கும் மேற்பட்ட செலவு கடனுக்காக செலுத்திய வட்டியாக ஆகிறது!
கலைஞர் டிவியின் பங்குகளில் 20 சதம் கனிமொழி பெயரிலும் 20 சதம் சரத் குமார் ரெட்டியின் பெயரிலும் உள்ளன. ஐந்தில் மூன்று பாகம், கருணாநிதியின் மனைவி தயாளு அம்மாள் பெயரிலேயே உள்ளது. இருப்பினும் வழக்கில் கனிமொழி மற்றும் சரத் குமாரின் பெயர்கள் மட்டுமே சேர்க்கப்பட்டன. தயாளு அம்மாளின் பெயர் சேர்க்கப்படவில்லை. இதற்கு, "தயாளு அம்மாளுக்குத் தமிழைத் தவிர வேறு மொழிகள் தெரியாத காரணத்தாலும் மிக வயதாகி விட்ட காரணத்தாலும் அவரின் பங்குகளில் உள்ள முழு அதிகாரத்தையும் கவனிக்கும் பொறுப்பு சரத் குமாருக்கு 27.07.2007 அன்றே கலைஞர் டிவியின் போர்டு மீட்டிங் கூடி கொடுத்துவிட்டதற்கான மினிட்ஸை சிபிஐ விசாரணையின் போது சரத்குமார் சிபிஐ வசம் ஒப்படைத்துள்ளார். இதன் காரணத்தாலேயே குற்றப்பத்திரிக்கையில் தயாளு அம்மாள் பெயர் சேர்க்கப்படவில்லை" என்று கூறப்படுகிறது.
தயாளு அம்மாள் பெயர் குற்றப் பத்திரிக்கையில் சேர்க்கப் படாததற்கு அவருக்குத் தமிழ் தெரியாது, சரத்துக்கு பவர் ஆப் அட்டர்னி கொடுத்து விட்டார் என்று காரணம் கூறும் சிபிஐ, ஒரு தொலைக் காட்சியின் நிர்வாக இயக்குனர் என்ற ஒரு பொறுப்பைத் தவிர அலைக்கற்றை ஒதுக்கீட்டில் நேரடியாகவோ மறைமுகமாகவோ முடிவெடுக்கும் எந்த அதிகாரத்திலோ இல்லாத சரத் பெயரைச் சேர்த்தது ஏன் என்றும் புரிய வில்லை.
ந்த மினிட்ஸே பின்னர் உருவாக்கப்பட்டது என்றும் தயாளு அம்மாளை வழக்கில் சேர்க்காமல் தப்புவிப்பதற்காக தயாரிக்கப்பட்டது என்றும் கருதப்படும் நிலையில், மே மாதம் 6 ஆம் தேதி சரத்குமாரும் கனிமொழியும் கைது செய்யப்பட அதிக வாய்ப்புகள் உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
கனிமொழியின் பெயர் குற்றப்பத்திரிக்கையில் சேர்க்கப்பட்ட தகவல் கிடைத்ததும் அதுபற்றி விவாதிப்பதற்காக கூடிய தி.மு.க உயர் நிலை கூட்டத்தில் கலைஞர் பேசும்போது, "நான் எப்போதும் கட்சியைக் காட்டிக்கொடுப்பவனல்ல. என்னைக் கைது செய்தபோதெல்லாம் சந்தோசமாக ஏற்றுக்கொண்டு சிறை சென்றவன்" என்று கூறியுள்ளது, கனிமொழியின் கைது தவிர்க்கமுடியாதது என்று கலைஞரே நம்புவதாகத்தான் கருதமுடிகிறது. அவ்வாறு கைதுசெய்யப்பட்டால், கட்சிக்கு எதிராக காட்டிக்கொடுக்காதே என தன் மகளுக்குக் கலைஞர் தெரிவித்த செய்தியாகவும் இது பார்க்கப்படுகிறது.
இது குறித்து பத்திரிக்கையாளர்கள் கேட்ட கேள்விக்கு, "நான் மனம் விட்டு பேச நிறைய இருக்கிறது" என கனிமொழி கூறிய பூடக கருத்தும் இதையே உறுதிபடுத்துவதாக உள்ளது.
ராசாவும் நேற்று தனியார் தொலைக் காட்சி ஒன்றுக்கு அளித்த பேட்டியில் 2G ஊழல் குறித்த எல்லா உண்மைகளையும் வெளிப் படுத்த உள்ளதாக தெரிவித்துள்ளார்.
"ஊழல் புரிந்தவர்கள் எவ்வளவு பெரிய பதவிகளில் இருந்தாலும் சிபிஐ அவர்கள் மேல் நடவடிக்கை எடுக்கத் தயங்கக் கூடாது; சிபிஐ பயமின்றி, சுதந்திரமாக செயல்படவேண்டும்" என்று தெரிவித்துள்ளார் இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங். நடவடிக்கை எடுக்க அல்ல, விசாரிக்க செல்லவே குற்றம் செய்தவர்கள் எனக் கருதப் படுபவர்களிடம் நேரம் கேட்டுச் செல்லும் நிலையிலுள்ள சிபிஐ, பாவம் ஓரிடம் பழி ஓரிடம் என வழக்கைத் திசை திருப்பிவிடாமல் 2G முறைகேடு வழக்கில் பயன் பெற்ற அனைவரையும் சட்டத்தின் முன் நிறுத்தி தண்டனை பெற்றுத் தருவது இது போன்ற ஊழல் இன்னொருமுறை அரங்கேறாமல் இருக்க வழிவகுக்கும்.
ஆக மொத்தத்தில் 2ஜி, கலைஞர் குடும்பத்துக்குத் தீராத தலைவேதனையை உருவாக்கியுள்ளது மட்டும் நிச்சயம். 2 ஜி ஊழிப்பேரலை, குற்றவாளிகளைப் பூண்டோடு சட்டத்தின் பிடியிலிருந்து தப்பிப் போய்விடாதவாறு கடிவாளம் போட்டு வைக்குமா இல்லையா என்பதை நடைபெற்ற தமிழக சட்டப்பேரவை தேர்தல் முடிவும் தீர்மானிக்கும்! பொறுத்திருந்து பார்ப்போம்!
தகவல் : அதிரை M. அல்மாஸ்
No comments:
Post a Comment