Latest News

த.த.ஜ விற்கு ஒரு அவசர வேண்டுகோள்!


கண்ணியத்திற்கும் மதிப்பிற்கும் உரிய தமிழ்நாடு தவ்ஹீது ஜமாத்தின் நிர்வாகிகள், உறுப்பினர்கள் மற்றும் அதன் தீவிர ஆதரவாளர்களுக்கும், சமுதாய நலனை முன்னெடுக்கும் நல்லுள்ளம் கொண்ட என் சகோதர சகோதரிகளுக்கும் சமுதாயத்தின் சார்பில் முக்கிய கோரிக்கை!

தமிழ்நாட்டில் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதும் நடந்தேறிய காட்சிகள் எல்லாம் நாம் நன்கறிந்ததே!. எல்லோரும் அவர்கள் சார்ந்திருக்கும் கட்சியின், சாதியின் நலனை மட்டுமே முன்னிறுத்தி, பேருந்தில் இடம் பிடிக்க துண்டைப் போடுவது போல் கூட்டணியில் இடம் கிடைத்தால் போதும் என்ற அக்கறையைத்தான் நாம் கண்டோம்!. கொள்கை, கோட்பாடுகள், பொதுநலம் அப்படி என்றால் என்ன என்று கேட்கும் அளவிற்குத்தான், அவரவர்கள் நடந்தார்கள். ஒவ்வொரு கட்சிகளும் தாங்கள் சார்ந்திருக்கும் சாதிகளையும், இனத்தை மட்டுமே, முன்னிலைப் படுத்தினார்கள். படுத்துகின்றார்கள்!. 

சிறுபான்மை, முஸ்லிம்கள் என்ற கோஷங்கள் எல்லாம் தேர்தல் பிரசாரங்களில் மட்டுமே எதிரொலிக்கும். ஆனால் நம்மவர்களுக்கு தேர்தலில் நிற்க அவர்கள் ஒதுக்கி இருக்கும் இடங்கள் மிகவும் சொற்பமே!. அதிலும் பாட்டாளி மக்கள் கட்சி, மற்றும் கம்யூனிஸ்ட்கள் முஸ்லிம்களுக்கு ஒரு சீட் கூட ஒதுக்காமல் செய்துள்ள துரோகம் யாராலும் மன்னிக்க முடியாதது!. இந்த நிலையில்தான் அரசியல் கட்சிகள் முஸ்லிம்களை நடத்துகின்றார்கள். முஸ்லிம்கள் சட்டமன்றத்திற்குள் நுழைந்து விடக்கூடாது என்று மிக எச்சரிக்கையுடன் இவர்கள் இம்முறையும் தங்களின் நிலைபாட்டை எடுத்துள்ளனர். ..

வன்னியர்கள் வன்னியர்களுத்தான் ஆதரவு என்றும், தேவர்கள் தேவர்களுக்குத்தான் ஆதரவு என்றும், கொங்கு சாதியினர் அவர்களின் சாதிக்குத் தான் ஆதரவு என்ற நிலைபாட்டை எடுக்கும்போது, நாம் மட்டும்தான் யாருக்கு வேண்டுமானாலும் முஸ்லிம்களின் ஓட்டு என்ற நிலைபாட்டில் இருக்கின்றோம்.

மற்ற அரசியல் கட்சிகள் தங்கள் கட்சியை சார்ந்த முஸ்லிம்களுக்கே தேர்தலில் நிற்க இடம் கொடுக்காத நிலைதான் உள்ளது. எனவே முஸ்லிம்களின் வெற்றிடத்தினை நிரப்ப, தற்போது களத்தில் உள்ள இஸ்லாமிய அரசியல் கட்சிகளின் வேட்பாளர்களை வெற்றிபெற வைத்து சட்டமன்றத்திற்கு அனுப்ப வேண்டிய ஒரு கட்டாய சூழ்நிலையில் நாம் இப்போது உள்ளோம் எனபதையும் தாங்கள் கவனத்தில் கொள்ள வேண்டும்!.
முஸ்லிம்களின் பிரதி நிதித்துவத்தை, நமக்கு நாமே ஏற்படுத்தி கொள்ளும் சூழ்நிலையில் நாம் உள்ளோம். இதுபோன்ற கட்டாய நேரத்தில் தமிழ்நாடு தவ்ஹீது ஜமாத்தின் ஆதரவும் இந்த வேட்பாளர்களை வெற்றிபெற வைக்க தேவையுள்ளதையும் இந்த சமுதாயம் நன்றியுடன் எதிர்பார்க்கின்றது. ஏற்கனவே இந்திய தவ்ஹீது ஜமாத்தும், முஸ்லிம் வேட்பாளருக்கே முன்னுரிமை என்று தீர்மானம் இயற்றியதையும் இந்த சமுதாயம் நன்றியுடன் பாராட்டுகின்றது.

மமக, எஸ்.டி.பி.ஐ இயக்கத்தினையும், ஜவாஹிருல்லாஹ், ஹைதர் அலி, தமீம் அன்சாரி, ஆகியோரை புறக்கணிக்கும் நோக்கில், இந்த சமுதாயத்திற்கு கிடைக்க இருக்கும் பிரதிநிதித்துவத்தினை தங்கள் இயக்கம் தடுக்க வேண்டாம் என்று இந்த சமுதாயம் எதிர்பார்க்கின்றது. இந்த இயக்கங்களின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை வெற்றிபெற வைக்க ததஜ வின் ஆதரவை இந்த சமுதாயம் எதிர்பார்க்கின்றது. முன் எப்போதும் இல்லாத அளவிற்கு 30 க்கும் அதிகமான முஸ்லிம் வேட்பாளர்கள் களத்தில் இருக்கும் இந்த தேர்தலில், நாம் அவர்களை வெற்றிபெற வைக்க வேண்டிய மிக முக்கியமான சூழ்நிலையில் உள்ளோம். இது போன்ற எண்ணிக்கை மீண்டும் அமைவது சில நேரங்களில் சாத்தியப்படுமா என்பதும் சந்தேகமே!.

ஏதோ ஒரு சிலர் செய்யும் விசமத் தனத்தினால், ஒட்டு மொத்த இயக்கங்களையும் நாம் எதிரிகளாக பார்க்க வேண்டாம். நாதியற்று கிடக்கும் இந்த சமுதாயத்தை சீண்டிப்பார்க்க பலர் காத்து கிடக்கின்றனர். நாமும் தெரிந்தோ தெரியாமலோ நம் செயல்பாடுகளினால் அதற்கு உடன்பட்டு விடுகின்றோம். நம் சகோதர சண்டை, மன வேறுபாட்டை எல்லாம் காரணம் காட்டி இந்த தேர்தலில் ம.ம.க/எஸ்.டி.பி.ஐ மற்றும் பிற அரசியல் கட்சிகளின் முஸ்லிம் வேட்பாளர்களை எதிர்த்து பிரச்சாரம் செய்ய, முன்பு சேலத்தில் எடுத்திருக்கும் முடிவை சென்னையில் கூட உள்ள பொதுக்குழுவில் மறுபரிசீலனை செய்வீர்கள் என்று மனதார நம்புகின்றோம். யாருக்கு ஆதரவு என்ற நிலைபாட்டை எடுக்க தங்களின் இயக்கத்திற்கு முழு உரிமை உள்ளது என்றாலும், இது போன்ற கோரிக்கையையும் பரிசீலிப்பீர்கள் என்ற நம்பிக்கையும் எங்களுக்கு உள்ளது.

அரசியலில் அடிமைபட்டுக் கிடக்கும் இந்த சமுதாயம், அரசியலில் விழிப்புணர்வு ஏற்பட, நம் கோரிக்கையை நாமே நிறைவேற்றிக் கொள்ள, நம் பிரநிதித்துவம் சட்டமன்றங்கள் உட்பட அணைத்து அரசு மன்றங்களிலும் இன்றியமையாதது. எனவே அரசியலில் நிற்க மாட்டோம் என்ற முடிவையும் ததஜ இனி வரும் காலங்களின் சூழ்நிலையை மனதில் கொண்டு, அதையும் மறுபரிசீலனை செய்வீர்கள் என்ற நம்பிக்கையுடன்...

முஸ்லிம்களின் முன்னுரிமையே, என்னுரிமை! என்ற முழக்கத்துடன்.....
நன்றி:

இஸ்லாமிய சகோதரன் அதிரை முஜீப்.

அதிரை M. அல்மாஸ்

2 comments:

  1. தவ்ஹீத் ஜமா அத்திற்கு மட்டும் வேண்டுகோள் விடுக்கும் தாங்கள் வேறு கட்சிகளின் சார்பாக நிற்கும் முஸ்லீம் வேட்பாள்ர்களை ஆதரிக்கச் சொல்லி ம ம கவிடமும் சொல்லுவீர்களா? அப்துல் கபூர் அபுதாபி

    ReplyDelete
  2. தமிழ்நாடு தவ்ஹீத் ஜமா அத்திற்கு மட்டும் வேண்டுகோள் விடுத்திருக்கும் தாங்கள் மற்ற கட்சிகளின் சார்பாகப் போட்டியிடும் முஸ்லிம் வேட்பாளர்களை ஆதரிக்கச் சொல்லி ம ம கவினருக்கும் வேண்டுகோள் விடுப்பீர்களா? அதையும் செய்யுங்களேன் அப்துல் கபூர் அபுதாபி

    ReplyDelete

TIYA

WEBSITE DESIGNED BY: NOORUL IBN JAHABER ALI WEBSITE CONTROLLED BY: DOT COLORS
sourceNOORUL IBN JAHABER ALI Copyright © 2015

Theme images by Bim. Powered by Blogger.